கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 3) வித்யாசாகர்!

.
அந்தப் பழைய புத்தகம் விற்பவனின் மனைவி அவருடைய அந்த தாய்வீடு கவிதையைக் கேட்டு அழுதுக் கொண்டேப் போக, அவனும் மிக வருத்தமுற்றான்.

அந்த கவிதையிருந்த அந்த புத்தகத்தை தனக்கே கேட்டு வாங்கிக் கொண்டான். அவரை கையெழுத்துப் போட்டு இரண்டு வரி அதில் எழுதிக் கொடுங்கள் ஐயா என்று பணிவுடன் கேட்டும்கொண்டான்.

அவருக்கு மனது சற்று லேசானது. தன்னை பிறர் மதிப்பதென்பது ஒரு கம்பீரம். பிறர் மதிக்க நடத்தல் என்பது எப்பவுமே தனக்குள் ஓர் உயர்வான தோற்றத்தை வளர்க்கிறது. அதோடு தன்னை பலப்படுத்தும் ஒரு திட உணர்வையும், அதீத தைரியத்தையும், நம்பிக்கையையும் கூட தனக்குள் பீறிட வைக்கிறது அந்த பிறர் மெச்சும் சொல்.

ஆனால் என்னதான் பிறர் மெச்சினாலும், அதைக் கொண்டு தன்னை கர்வப் படுத்திக் கொள்ளாதளவு நமக்கான ஒரு நன்னடத்தையும் தேவையாக இருந்தது. அதை ஜானகிராமன் நிறைய வைத்திருந்தார். எல்லாம் நன்மைக்கே எனுமொரு எண்ணம் மனதில் நிறைந்து ஊறியது அவருக்கு.

ஒரு நிறைவுற்ற மனநிலையோடு அன்பாக இரண்டு வார்த்தையை அவனுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு “நம் சமுகம் யாரையும் இருக்கும்போது மதிப்பாகப் பார்ப்பதில்லை என்பது தான் நம் பெருங் குறை தம்பி. நான்கு பேர் சேர்ந்து ஒரு விசயத்தை மெச்சினால்தான் அதை என்னவென்றே உள்சென்றுப் பார்ப்பேனென்றால்’ எப்படி அந்த விசயமானது மேன்மைப் பெரும்? அதுபோன்ற செயல் எப்படி ஒரு படைப்பாளிகளுக்கு ஊக்கத்தைத் தரும்? எனக்கென்ன விருது வாங்கி வீட்டில் குவிக்க ஆசையா? அதுக்காகவா நானென் ஒருவேளை சோற்றைக் கூட நிறுத்திவிட்டுக் இத்தனை வருடமாக காத்துநிற்கிறேன்? அதற்கா வருடந்தோறும் என் புத்தகங்களையெல்லாம் விருதிற்கென அனுப்பிவைக்கிறேன்? அல்லது நாலுபேர் பார்க்கையில் புகழ்ந்துப் பேசுவார்கள் என்றெண்ணி செய்கிறேனா?”


அவர் கேள்வி கேட்டுவிட்டு அவனைப் பார்க்க, அவனும் கண்ணசைத்துவிட்டு மேலே அவரே பேசட்டுமே என்று அவர் பேசக் காத்திருந்தான். அவர் அதைப் புரிந்துக் கொண்டு -

“அப்படியில்லை. அது ஒரு அங்கீகாரம். அது கிடைக்காவிடில்’ எங்கு என் எழுத்துக்கள் வெறும் குப்பைகளாகிப் போகுமோ எனும் பயம் எனக்கு. என் உழைப்பும்’ என் நம்பிக்கையும்’ என் இத்தனை வருட எண்ணங்களும், அதற்கான என் மனைவியின் இசைவும் வீண் போகக் கூடாதே எனும் தவிப்பு எனக்கதிகம் தம்பி. எதைநோக்கி இதுவரை நான் எழுதினேனோ, யாரை மனதில்கொண்டு இத்தனைப் புத்தகங்களைச் செய்தேனோ அவர்களைக் கொண்டே என் படைப்புக்களை அவர்களிடம் சேர்த்துவிட’ விருது ஒரு நுழைவுச்சீட்டுபோல் பயன்பட்டுவிடாதா, எனுமொரு ஏக்கமெனக்கு, அவ்வளவுதான்.

ஆனால், இன்று வரை எந்த நாளிதழோ, பதிப்பகமா, அரசோ என் படைப்புக்களை அத்தனை மெச்சிக் கொண்டதில்லை. காத்திருந்து காத்திருந்து காலம் போக, பின் உற்றுப் பார்த்துவிட்டு அவர்களின் அரசியல் புரிந்தபின்தான் நானே என் சம்பாதியத்தில் புத்தகம் போட ஆரம்பித்தேன். என்றேனும் என் சமுகம் எனைத் திரும்பிப் பார்க்கும் எனுமென் நம்பிக்கைக்கு இன்று இந்த நூறு ரூபாய் இத்தனைப் பெரிதாகிப் போனது வருத்தமில்லையா தம்பி?

ஒரு படைப்பாளி இறந்த பிறகே அவன் படைப்புக்களை பிரித்துப் பார்க்குமிச் சமுதாயத்தை மாற்ற எத்தனைக் காலம் இன்னும் பிடிக்குமோ தெரியலையே ராஜா...???!! உள்சென்றுப் பார்த்தால் பதிப்பகங்களையோ புத்தகக் கடைகளையோ அரசினையோக் கூட நாம் குறை சொல்வதற்கில்லை. எல்லாம் வியாபாரமாகிப் போன இச்சமுகத்தில் லாபம் மட்டுமே பிராதானமானதால் தேர்ந்த படைப்புக்களைக் கண்டதும் தன் நகர்தலை அல்லது தேடுதலை அவர்கள் நிறுத்திக் கொள்வதில் அடிப் பட்டுப் போகிறோம் எனைப் போன்றோர்.

பிறகு என்றுதான் என் உணர்வுகலெல்லாம் வெளிச்சத்திற்கு வருமோயென்று தவித்த நேரம், எங்கு பொட்டலம் கட்டி போட்டுவிடுவார்களோ என் படைப்புக்களையென வலித்த நேரம்’ நீங்கள் காட்டிய பரிவு, அக்கறை, மதிப்பு என் மனதை கரைத்துவிட்டது அய்யா” அவர் மனதை அப்பட்டமாய் திறந்துக் காட்டியழ.., அதில் உணர்ச்சிவசப் பட்டுப் போனான் அந்த கடைக்காரனும்.

“உங்களின் படைப்பில் பாதிக்குமேல் படித்தவன் ஐயா நான், அதற்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்குமென்று எனக்கு நம்பிக்கை உண்டு” என்று சொல்ல -

சிரித்துக் கொண்டார் ஜானகிராமன். வாழும்போது கிடைக்காத அங்கிகாரம், நான் புல்லாக முளைத்தப்பின் வந்து மேல் விழுந்து என்னப் பயன்? என் அன்பு மனைவிக்கு மருந்து வாங்க நூறு ரூபாய் இல்லாதயிந்த வாழ்க்கை’ அவள் இறந்தப்பின் வந்து எதையெனக்குக் கொடுத்துவிடும்??!!”

'நம் சமூக கட்டமைப்பு இந்த லட்சணத்துலதாங்கையா இருக்கு’ வேறென்னத்த சொல்ல” அவன் பேசிக் கொண்டே பக்கவாட்டில் கலைந்திருந்த புத்தகங்களை எடுத்து அடுக்க ஆரம்பித்தான். அந்நேரம் பார்த்து’ இன்னொரு ஆள் பழைய தாள்களை விற்பதற்கு அங்கே கொண்டு வர -

அவரும், எல்லாம் எப்படி நடக்கவேண்டுமோ அப்படி சரியாக நடக்கும். உலகின் ஒரு மூலையில் இந்த ஒருவனுக்கு தன் எழுத்து பெரிதாகப் பட்டதுபோல் நாளை எல்லோருக்கும் படும். பெரியாட்கள் நுழையாத இக்கிராமத்தில் விளம்பரமில்லா படைப்பாளி நான். நாலு பேருக்கு தெரிந்தவரின் படைப்பைப் போட்டு சம்பாதிப்பதில் தானே குறியாய் இருக்கிறார்கள் புத்தக வியாபாரிகளும். பிறகு இச்சமுதாயம் குறித்தோ எனைப் போன்றோரைக் குறித்தோ அவர்களுக்கு என்ன வருத்தமிருந்துவிடும்?

எங்கோ ஒன்றோ இரண்டோ இதழ்கள் படைப்பாளிகளுக் கொடுக்கும் மதிப்பில்’ அகப்படாமல் வெளியே நிற்கும் பலரில் ஒருவன் தானே நானும்? பிறகு, யாருக்கு வேறு என்ன வருத்தம் வேண்டுமென்னைப் பற்றி?

பிறகு ஏனோ இத்தனைப் புலம்பல்கள்..? இதுவுமென்ன என் வேதனைதானா அல்லது வேறெவரின் திணிப்பா? இல்லையில்லை, எனக்குள் எவர் திணிப்பும் இல்லை. நான் தன்னிலையாக சுயமாகச் சிந்திக்கக் கூடியவன். என்றாலும், இது நான் அமைத்துக் கொண்ட என் வாழ்க்கை தானே. நான் வாழ்ந்துவரும் என் நகர்வுதானே. நான் நினைத்ததைத் தானே நான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். நல்லதோ கெட்டதோ வாழ்ந்துதானேத் தீரவேண்டும், வேறென்ன செய்ய, எல்லாமென் செய்ததன் பலன்” என்றெல்லாம் எதை எதையோ யோசித்துக் கொண்டே அவன் கொடுத்த நூறு ரூபாய்க்கு மருந்து வாங்க மருந்துக் கடையில் போய் நின்றார்.
-----------------+++------------------+++--------------------

தொடரும்..
No comments: