எனது மொழிபெயர்ப்பு நாவல் வெளியீடும், சர்வதேச சிறுகதைப் போட்டியில் முதல் பரிசும்!

.
2012 ஆம் ஆண்டு இனிதே மலர்ந்திருக்கிறது. நண்பர்கள், பதிவர்கள், வாசகர்கள் மற்றும் என்னை நேசிக்கும் அனைவருக்கும் எனதினிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

புத்தாண்டு மலரப் போகும் தருணத்தில் எதிர்பாராமல் எனக்கு கிடைத்த பரிசு மிகுந்த ஆனந்தத்தைத் தந்திருக்கிறது. சென்ற வருடம் அதிக வேலைப் பளுவின் காரணமாக எனதுசிறுகதைகளுக்கான வலைத் தளத்தில் மூன்று சிறுகதைகளை மாத்திரமே பதிவிட முடிந்தது. எழுத்தாளர் மாதவராஜ் அறிவித்து, சர்வதேச ரீதியில் நடைபெற்ற வம்சி சிறுகதைப் போட்டி 2011 க்கு அவற்றையே கொடுத்திருந்தேன். போட்டிக்கு மொத்தமாக 373 சிறுகதைகள்வந்திருந்ததைக் கண்டேன். எனவே நிச்சயமாக பரிசை எதிர்பார்த்திருக்கவேயில்லை. 

நேற்று வந்திருந்த மின்னஞ்சல்கள் மற்றும் எஸ்.எம்.எஸ் வாழ்த்துக்களின் மூலமே சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட வம்சி சிறுகதைப் போட்டியின் முதல் பரிசு எனது 'காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்' சிறுகதைக்குக் கிடைத்திருக்கிறதென்பதை முதலில் அறிந்துகொண்டேன். இப் பரிசு பெரும் ஊக்கத்தைத் தந்திருப்பதோடு கூடவே நல்ல படைப்புக்களை மாத்திரமே தொடர்ந்தும் வழங்க வேண்டுமெனும் பெரும் பொறுப்பையும் இனிய சுமையாய் என் மீது சுமத்தியிருக்கிறது.



இக் கணத்தில் போட்டியை ஏற்பாடு செய்து நடத்திய எழுத்தாளர் மாதவராஜ், வம்சி பதிப்பகம் மற்றும் நடுவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனைய பரிசுகளைப் பெற்ற சக போட்டியாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

இச் சிறுகதையும், ஏனைய பரிசுகளைப் பெற்ற 17 சிறுகதைகளும் ஒரு தொகுப்பாக வரவிருப்பதாகவும், பரிசு பெற்ற எனது சிறுகதைத் தலைப்பான 'காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்' எனும் தலைப்பே தொகுப்புக்கு வைக்கப்படவிருப்பதாகவும்,எதிர்வரும் வாரத்தில் நடைபெற இருக்கும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில்  இத் தொகுப்பை வெளியிட நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் வம்சி பதிப்பகம் அறிவித்திருக்கிறது.

அத்தோடு, எதிர்வரும் புத்தகக் கண்காட்சியில் 08.01.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று, சரியாக மாலை 5.45 மணிக்கு, எனது மொழிபெயர்ப்பு நாவலான 'அம்மாவின் ரகசியம்' எனும் நாவல் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது என்பதையும் மகிழ்வுடன் அறியத் தருகிறேன். 

2011 ஆம் ஆண்டு தனது நாவலுக்காக 'சுவர்ண புஸ்தக' விருதையும், ஐந்து இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பணப்பரிசையும் வென்ற பெண் எழுத்தாளரான சுநேத்ரா ராஜகருணாநாயகவின் நாவலையே நான் மொழிபெயர்த்திருக்கிறேன். இலங்கையின் கலவர காலமொன்றில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையிது.

 இந் நாவலுக்கு எனது அபிமானத்துக்குரிய எழுத்தாளர் அம்பை முன்னுரை எழுதியிருக்கிறார். புத்தக வெளியீட்டு விழாவன்று இந் நாவலை எனது மதிப்புக்குரிய எழுத்தாளர்களான திரு.அசோகமித்திரன் வெளியிட, திரு.தேவிபாரதி பெற்றுக் கொள்ளவிருக்கிறார்.

இந் நாவலை மொழிபெயர்க்க அனுமதித்த எழுத்தாளர் சுநேத்ரா ராஜகருணாநாயக, முன்னுரை வழங்கிய எழுத்தாளர் அம்பை, தொகுப்பாக வெளிக்கொண்டு வரும் காலச்சுவடு பதிப்பகம், எழுத்தாளர் கண்ணன் சுந்தரம், எழுத்தாளர் அசோகமித்திரன், எழுத்தாளர் தேவிபாரதி மற்றும் மொழிபெயர்ப்பில் உதவிய எனது சகோதரி கவிஞர் ஃபஹீமாஜஹான் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை இக் கணத்தில் பதிவு செய்கிறேன்.

அத்தோடு எனக்கு வாழ்த்துக்களைச் சொன்ன மற்றும் நான் எழுதுவதற்கான ஊக்கத்தை தொடர்ந்து வழங்கி வரும் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு இப் பதிவையே அழைப்பிதழாகக் கொண்டு, இந் நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்.

என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்

2 comments:

kirrukan said...

ரிஷான் செரிப்புக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்....

Ramesh said...

Congratulations Rishan