பழகிய நிலவும் பழைய கிழவியும் -அகிலன்


 
.
அவளது
ஊரின் புழுதிச் சாலையையும்
பழகிய நிலவையும்
பிரியமுடியாக் கிழவியின்
புலம்பலினை ஆற்றமுடியா
அலையின் வார்த்தைகள்
மண்டியிட்டு வீழ்கின்றன.
அவள் காலடியில்.
இந்தக் கடலுக்கு
அப்பால்தான்
நம் ஊரிருக்கிறதா?
மறுபடி மறுபடி
கேட்டுக்கொண்டிருக்கின்றன
குழந்தைகள்.
தன்
முதுமைச் சுருக்கங்களில்
படியும் மெல்லிய
பிரகாசத்துடன்
தலையசைத்த படியிருக்கிறாள்
கிழவி… ஆமென்று.
இந்த நிலவா?
அங்கேயுமிருந்தது?
மறுபடியும் கிழவியின்
நினைவுகளைக் கலைத்த
குழந்தைகள் கேட்டன.
ம் அதேதான்.
வழியவிட்ட பெருமூச்சிற்கிடையில்
இதேதான் அங்கேயுமிருந்ததாய்
கிழவி சொன்னாள்.
அப்ப…..!
நிலவும் அகதியாய்
எம்முடன் வந்ததா?
விடைதரமுடியாக்
கேள்வியைத் தூக்கிக் கொண்டு
குழந்தைகள் ஓடின….


No comments: