இலங்கைச் செய்திகள்


வேண்டாம் கையூட்டு .

திருகோணமலையில் பிரபல வர்த்தகர் மீது துப்பாக்கிச் சூடு (பட இணைப்பு)



வேண்டாம் கையூட்டு

Friday, 30 December 2011

இலஞ்சம்' அல்லது "கையூட்டு' தெற்காசிய மக்களின்அன்றாட வாழ்க்கையில் மிக மோசமாக ஊடுருவி இருக்கும் தகவலை அண்மையில் ட்ரான்ஸ் பேரன்சி இன்ரர்நாஷனல் அமைப்பு வெளியிட்டிருந்தது .

எம்மில் பெரும்பாலானோர் இந்த சட்ட விரோத குற்றச் செயல் குறித்து நிச்சயம் அறிந்திருக்கக் கூடும். ஆனால் இலங்கை, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், மாலைதீவு, பங்களாதேஷ் ஆகிய 6 தெற்காசிய நாடுகளில் சாதாரண விடயங்களை நிறைவேற்றுவதற்குக் கூட இலஞ்சம் கொடுக்கப்படுன்றது என்ற அதிர்ச்சித் தகவலை ட்ரான்ஸ் பேரன்சி இன்ரர் நாஷனல் வெளியிட்டுள்ளது.

பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கும்


சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதவதற்கும் , கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளவும், பங்கீட்டு அட்டையைப் பெறவும் இந்த நாடுகளில் கையூட்டு வழங்கப்படுகிறது என்ற விபரத்தை ட்ரான்ஸ் பேரன்சி இன்ரர்நாஷனல் வருடாந்த அறிக்கையில் வெளியிட்டிருக்கிறது. 6 நாடுகளில் 7500 பேர்களை பேட்டி கண்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.

அரசியல் கட்சிகளும் பொலிஸ்துறையுமே இலஞ்ச மோசடியில் அதிகளவுக்கு ஈடுபட்டிருப்பதாக இந்தக் கருத்துக் கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை வரித்துறை சார்ந்த சேவையைப் பெற்றுக்கொள்வதிலேயே அதிகளவு இலஞ்சம் வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தாலும் அரச அதிகாரிகளாலும் நெருக்கமாகக் கண்காணிக்கப்படும் அரசியல் கட்சிகளும் பொலிஸ்துறையும் இந்த 6 நாடுகளிலும் அதிகளவுக்கு இலஞ்ச மோசடியில் ஈடுபட்டிருக்கின்றன என்பது அதிர்ச்சியும் விசனத்திற்கும் உரிய விடயமாகும்.

இலஞ்ச மோசடி எமது நாடுகளில் பொதுவாக இடம்பெற்று வருகின்ற போதிலும் இது சமூகங்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றி விட்டதையே ட்ரான்ஸ் பேரன்சி இன்ரர் நாஷனலின் அறிக்கை வெளிப்படுத்துகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் இலஞ்ச மோசடி அதிகரித்திருப்பதாக 62 சத வீதமானோர் (கருத்துக் கணிப்பீட்டில்) தெரிவித்துள்ளனர். இதற்கு எதிராகப் போராடுவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக 83 சதவீதமானோர் கூறியுள்ளனர். இலஞ்ச ஊழல் அதிகரித்து வருவது பற்றிச் சிந்திக்க ஆரம்பித்திருக்கும் மக்கள் அதற்கு எதிராக செயற்பட விரும்புகின்றனர். அதே சமயம் இந்த வருடம் இடம்பெற்று வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் வலுவான செய்தியை அரசாங்கங்களுக்கு கொடுத்து வருகின்றன. தனிப்பட்ட அனுகூலங்களுக்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது மோசடியாகும்.

இலஞ்ச மோசடிகள் எப்போதுமே இரகசியமான முறையில் இடம்பெறுவதால் அதில் சம்பந்தப்படுவோரின் தனிப்பட்ட நடத்தையை தொடர்ச்சியாக அவதானிப்பது நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமற்ற விடயமாகும்.

ஆனால் இந்த இலஞ்ச ஊழல் நடவடிக்கைகள் பொதுச் சேவையில் பல்வேறு பட்ட எதிர்மறையான விளைவை ஏற்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வை அரசாங்கங்கள் கொண்டிருப்பது மிகவும் அவசியமான விடயமாகும்.

இலஞ்ச ஊழல்களுக்கு இடமளித்துள்ள அரசாங்கங்களால் பொதுமக்களின் நலன்களைப் பாதுகாக்க முடியாது.

ஒருவரின் கௌரவம் , நேர்மை என்பனவற்றை இந்த இலஞ்ச மோசடி கேள்விக்குள்ளாக்குகின்றது.

உலகிலேயே இலஞ்ச ஊழலில் உயர் மட்டத்திலுள்ள பிராந்தியமாக எமது தெற்காசியா இருக்கின்றது. இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். இந்த விவகாரம் எமது சமூக வாழ்வில் எத்தகைய மோசமான விளைவை ஏற்படுத்துகின்றது என்பது பற்றி சிந்திப்பது அவசியமானதாகும்.

சட்டத்தால் மட்டும் இதனைத் தடுத்து விட முடியாது . இது தவறானது என்ற உணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும். "வேண்டாம் கையூட்டு.'

நன்றி தினக்குரல் 

திருகோணமலையில் பிரபல வர்த்தகர் மீது துப்பாக்கிச் சூடு (பட இணைப்பு)
ஏ.எம். றிஷாத் 
3 /1/2012

திருகோணமலையில் பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிசார் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தனர்.



இன்று(03.01.2012) இரவு 9 மணியளவில் திருகோணமலை விகாரை வீதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. மூதூர் மல்லிகைத் தீவு பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான கந்தையா ராஜகோபால் (வயது 38) என்பவரே இத்துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.



குறித்த நபர் தனது வர்த்தக நிலையமான எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து உல்லாச பயணிகள் விடுதிக்குச் செல்லும் வழியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.



நன்றி வீரகேசரி


No comments: