அடுத்து என்ன? - அ.முத்துலிங்கம்


.
இருபது வருடங்களுக்கு முன்னர் நான் பாகிஸ்தானில் வேலை செய்த காலத்தில் முதன்முதலாக செல்பேசி அங்கே அறிமுகப்படுத்தப் பட்டது. ஒன்றின் விலை ஆயிரம் டொலருக்கு மேலே. என்னிடம் ஒன்றிருந்தது. இடது கையால் தூக்க முடியாது, அத்தனை பாரம். ஆறு மணி நேரத்துக்கு ஒரு தடவை மின்னேற்ற வேண்டும். அப்படியும் பேசும்போது அடிக்கடி தொடர்பு அறுந்துவிடும். சில இடங்களில் இருந்து எவ்வளவு முயன்றாலும் தொடர்பு கிடைக்காது. அது ஒரு காலம்.

அதற்குப் பிறகு பல செல்பேசிகள் வந்து போய்விட்டன. இரண்டு செல்பேசிகளை நான் தொலைத்திருக்கிறேன். என் நண்பர் ஒருவர் ஐந்து செல்பேசிகளை தொலைத்திருக்கிறார். ஏனென்றால் அவை தொலைப்பதற்கு வசதியாகத்தான் செய்யப்படுகின்றன. சமீபத்தில் நான் தொலைந்துபோன ஒரு செல்பேசியைக் கண்டுபிடித்து அதன் சொந்தக்காரரிடம் சேர்ப்பித்திருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்னர் பிளாக்பெர்ரி செல்பேசி ஒன்று வாங்கினேன். அப்பொழுதே முடிவு எடுத்தாகிவிட்டது, இனிமேல் செல்பேசியை மாற்றுவதில்லை என்று. எனக்குத் தேவையான அத்தனை வசதிகளும் அதில் இருந்தன. முக்கியமாக பயணம் செய்யும்போது அது என்னை ஒருமுறையும் கைவிட்டதில்லை. உடனுக்குடன் மின்னஞ்சல்கள் பார்த்து அந்தக் கணமே பதில் எழுதலாம். குறுஞ்செய்திகள் அனுப்பலாம். நாட்காட்டி, நாட்குறிப்புகள், புகைப்படம் எடுத்து சேமிப்பது, அனுப்புவது ஆகிய. சகல வசதிகளும் ஏற்கனவே இருந்ததால் ஐபோன் வந்தபோது அசைக்க முடியாத முடிவிலிருந்தேன். நண்பர்கள் ஐபோன் புகழ் பாடி என்னை மாற்ற முயன்றாலும் நான் மாறுவதாக இல்லை.


ஒருநாள் காலையில் நான் வெளியே போய்விட்டு வீட்டுக்கு திரும்பியபோது கையில் புது ஐபோன் இருந்தது. மனம் மாறிவிட்டது. எல்லோரும் இவ்வளவு சொல்கிறார்களே வாங்கிப் பார்ப்போம் என்று ஏதோ ஒரு துணிச்சலில் எடுத்த முடிவு. அதை வாங்கிய பின்னர்தான் தெரிந்தது, எத்தனை மகத்தான அனுபவத்தை அத்தனை நாளும் அனுபவிக்கத் தவறிவிட்டேன் என்பது. முற்றிலும் பயனர்களை மனதில்கொண்டு தயாரிக்கப்பட்டது இந்த செல்பேசி. அவ்வளவு நட்பாக இருந்தது. என்னைப்போல தொழில்நுட்ப சூன்யத்துடன் செல்பேசி ஒன்று  நட்பாக இருக்கமுடியும் என்பது நம்பமுடியாத விசயம். இதிலும் மற்ற செல்பேசிகள் போல மின்னஞ்சல்கள் அனுப்புவது, பெறுவது, குறுஞ்செய்திகள், நாள்காட்டி, சந்திப்பு விவரங்கள், குறிப்புகள் என சகலதும் இருந்தன. ஆனால் தமிழிலேயே மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அனுப்பி தமிழிலேயே பதில் பெறலாம் என்பது எத்தனை பெரிய பாய்ச்சல்.

கூகிளில் தேடுவது மிகவும் சுலபம், நீங்கள் தேடுவது நிமிடத்தில் கிடைக்கும். ஆனால் முக்கியமானது தமிழ் கூகிள். என்னால் நம்பவே முடியவில்லை. கையிலே ஒரு தமிழ் தேடு யந்திரத்தை கொண்டு செல்ல முடிவது எத்தனை பெரிய வசதி. நான் ஒரு பயிற்சிக்காக முதலில் தேடியது முத்தொள்ளாயிரத்தில் எத்தனை பாடல்கள் மிஞ்சியிருக்கின்றன என்பதுதான். முத்தொள்ளாயிரம் என்றால் மூன்று தொள்ளாயிரம், 2700 பாடல்கள் ஆனால் எங்களுக்கு இப்போது கிடைத்திருப்பது 109 பாடல்கள்தான். இந்த தகவலை தமிழ் கூகிள் நிமிடத்தில் கண்டுபிடித்துக் கூறியது. இந்த வெற்றியை யாருக்காவது காட்டவேண்டும் என்ற ஆவல் மீறியது. தொலைக்காட்சி தொடர் பார்த்துக்கொண்டிருந்த மனைவியிடம் செல்பேசியை காட்டினேன். விஞ்ஞானி  மைக்கேல் ஃபாரடே இருநூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு கிறிஸ்மஸ் இரவு மோட்டாரைக் கண்டுபிடித்தார். மின்சாரம் சுருள்கம்பியில் ஓடியபோது அதற்குள் இருந்த காந்தம் துள்ளியது. மைக்கேல் ஃபாரடே வர்ணிக்க முடியாத இன்ப அதிர்ச்சியில் தன் மனைவியை அழைத்து அந்த அதிசயத்தை காட்டினார். அதற்கு அவர் ‘இதுதானா’ என்று கூறினார். அதுபோல என் மனைவியும் ‘இதுதானா’ என்றுவிட்டு மறுபடியும் தொலைக்காட்சி பெட்டிக்கு போய்விட்டார்.

என்னை வசீகரித்த இன்னொரு அம்சம் திசைகாட்டியும், அதிலே உள்ள GPS ( புவிநிலை காட்டி) வசதியும். நான் அடிக்கடி தொலைந்து போகிறவன். மிக இலகுவாக நான் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிடலாம். நீங்கள் போகவேண்டிய இடத்தை சொன்னால் அது எப்படிப் போவது என்று உங்களுக்கு பாதை போட்டு தரும். நான் இருக்கும் வீட்டின் அகலக்கோடு, நீளக் கோடு 43 டிகிரி N, 79டிகிரி W என்று வந்தது. அமெரிக்காவையும் கனடாவையும் பிரிக்கும் அகலக்கோடு 49 டிகிரி N. அப்படிப் பார்க்கும்போது நான் அமெரிக்க எல்லைக்குள்ளே தான் வசித்தேன். அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. அமெரிக்க அரசாங்கம் என்னிடம் வருமானவரி கட்டவேண்டும் என வற்புறுத்தாவிட்டால் சரி.

உங்களுக்கு தேவையான பாடல்களை இணையத்திலிருந்து இறக்கி, பதிந்துவைத்து கேட்டுக்கொள்ளலாம். நான் பதிந்து வைத்த முதல் பாட்டு எனக்கு மிகவும் பிடித்தமான ‘அமைதியில்லா என் மனமே’ பாடல். பாதாள பைரவி படத்தில் கண்டசாலா பாடியது. அந்தப் பாடல் என்னுடனேயே எப்பவும் இருந்து மனதை அமைதிப் படுத்தியது. சி.என்.என், பி.பி.சி போன்ற சானல்களில் என்ன செய்தி என்று அடிக்கடி பார்த்துக்கொள்ளலாம். கூட்டங்களில் பேச்சாளர் பேசும் பேச்சை அப்பொழுதே பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம். தொலைபேசியில் நேர்காணல் செய்யும்போது அதையும் பதிவு செய்யலாம். புகைப்படங்களோ, காணொளிப் படங்களோ எடுத்து உடனுக்குடன் உலகம் முழுவதும் அனுப்பலாம். இணையத்திலும், முகப்புத்தகத்திலும்  இடலாம். முக்கியமானது பார்வை இல்லாதவர்கள் தகவல்களை குரலிலே பரிமாறிக் கொள்ளலாம். தாங்கள் அனுப்பவேண்டிய கடிதங்களை குரலிலேயே பதிந்து அனுப்பி பதிலையும் குரலிலே பெற்றுக் கொள்ளலாம். செய்யவேண்டியதெல்லாம் ஒன்றிரண்டு பட்டன்களை அழுத்துவதுதான்.

எனக்கு பிடித்த அதிநவீன கண்டுபிடிப்பு முகம் முகமாகப் பேசுவது. நீங்கள் அழைத்தவர் ஐபோன் பயனாளர் என்றால் அவர் முகத்தை நீங்களும் உங்கள் முகத்தை அவரும் பார்த்துக்கொண்டே பேசலாம். புதுக் காதலர்களுக்கு எத்தனை பெரிய வசதி? அல்லாவிட்டால் ஸ்கைப் மூலம் இலவசமாகவும் பேசலாம். பில்களுக்கு பணம் கட்டலாம், இணையத்தின் மூலம் பொருள்களுக்கு  ஆணை கொடுத்து வாங்கலாம். உலகத்து கால நிலை, உலகத்து வித்தியாசமான நேரங்கள், உலகத்து சந்தை விவரங்கள்  எல்லாமே விரல்நுனிக்கு வந்துவிட்டன. நீங்கள் மறந்துபோகக்கூடிய அலுவல் ஒன்றை அது ஞாபகமூட்டும்.  திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டால் ஒரு அவசர விளக்குகூட இருந்தது. இந்த ஐபோனை உருவாக்கிய மேதை ஸ்டீவ் ஜொப்ஸ் எங்கள் வசதிக்காக எல்லாவற்றையும் தானே சிந்தித்து  நுணுக்கமாக புகுத்தியிருக்கிறார். அவர் சொன்னார் ’பயனாளரிடம் அவருக்கு என்ன தேவை என்று கேட்கக்கூடாது. அவருக்கு என்ன தேவை வரும் என்பதை நாங்கள்தான் யோசித்து கண்டுபிடிக்கவேண்டும்.’  கார் தயாரிப்பில் புதுமையை புகுத்திய ஹென்றி ஃபோர்டை அடிக்கடி உதாரணம் காட்டுவார். ‘வாடிக்கையாளரிடம் அவருக்கு என்ன தேவை என்று கேட்கக்கூடாது. கேட்டிருந்தால் அவர் அதிவேகமான குதிரை வேண்டும் என்றுதான் சொல்லியிருப்பார்.  

ஸ்டீவ் ஜொப்ஸ் பிறந்த உடனேயே வேறு தம்பதியினரால் தத்தெடுக்கப் பட்டார். பெற்றோருக்கு போதிய பண வசதி இல்லாததால் பட்டப் படிப்பை பாதியிலேயே நிறுத்தவேண்டி நேர்ந்தது. ஒரு நண்பனின் அறையில் தரையில் படுத்தார். வெற்று கோக் போத்தல்களை சேகரித்து ஐந்து சதத்துக்கு விற்று வந்த பணத்தில் அரை வயிறு உணவு உண்டார். வாரத்தில் ஒருமுறை ஏழு மைல் தூரம் நடந்து சென்று ஹரே கிருஷ்ணா கோவிலில் வயிறார சாப்பிட்டார். இருபது வயதில் அவர் கராஜில் ஆரம்பித்த கம்பனி பெரும் வெற்றியீட்டியது. முப்பது வயதில், இரண்டு பில்லியன் டொலர் மதிப்பை எட்டியபோது அவர் தொடங்கிய கம்பனியில் இருந்து அவரை வெளியேற்றினார்கள். சோர்ந்துபோகாமல் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தார். விவேகானந்தர் ‘பசித்திரு’ என்று உபதேசித்ததுபோல ஸ்டீவ் ஜொப்ஸும் ‘பசித்திரு’ என்றே சொன்னர். பசித்திருப்பவனால்தான் படைக்கமுடியும். ஒவ்வொன்றையும் நிதானமாக, ஆழமாக, கலைநேர்த்தியாக சிந்தித்து உருவாக்கியதுதான் ஐபோன்.  

25 வருடங்களுக்கு முன்னர் நான் ஓர் அறிவியல் கதை எழுதினேன். அதிலே 2020ம் ஆண்டு என்ன நடக்கும் என்ற குறிப்பு வருகிறது. காசுத்தாள், காசோலை, கடன் அட்டை எல்லாமே அழிந்துபோகும். மனிதர்கள் வீட்டைவிட்டு புறப்படும்போது அவர்கள் கையில் ஒரேயொரு கருவி இருக்கும். ஆதி மனிதன் புறப்பட்டபோது அவன் கையில் வில், அம்பு இருந்ததுபோல. அந்தக் கருவியிலே சகல வசதிகளும் இருக்கும். இந்த ஐபோன் கிட்டத்தட்ட 60 வீதம் அதை சாதித்துவிட்டது.

அடுத்து என்ன? அனைத்து கடன் அட்டைகளும் செல்போனில் ஏறிவிடும். அடையாள அட்டை, சுகாதார அட்டை, குடியுரிமை அட்டை, கடவுச்சீட்டு, கார் ஓட்டும் லைசென்ஸ் போன்றவையும் அடங்கும். உங்கள் கைரேகை படமும் கண்ரேகை படமும் அதிலே சேமிக்கப்பட்டிருக்கும். செல்பேசியை காட்டி உலகப் பயணம் செய்யலாம். என்ன பொருளும் எங்கேயும் வாங்கலாம். எந்த மொழியில் பேசினாலும் புரிந்து பதிலும் கொடுக்கலாம். சாவிகள் ஒழிந்துவிடும். உங்கள் வீட்டுக் கதவை செல்பேசியை காட்டி திறக்கலாம். செல்பேசியினால் காரை ஸ்டார்ட் பண்ணலாம். இப்படியான பெரும் வளர்ச்சிக்கு ஆரம்பம்தான் இந்த ஐபோன்.   

அன்று காலை பத்து மணியிலிருந்து என் வாழ்க்கை மாறியது. ஐபோனை வாங்கிக்கொண்டு வெளியே வந்தபோது, அந்தப் பட்டப் பகலில், இரவில் ஒளிவீசும் ஆடை அணிந்த ஒருவர், என்னுடன் மோதினார். என் கையிலிருந்த ஐபோனை பார்த்துவிட்டு, ஆச்சரியம் மேலிட ‘புதிசா?’ என்றார். ‘ஆம்’ என்றேன். ‘ஓ, உங்களை கவர்ந்திழுத்து அடிமையாக்கிவிடும்’ என்று சொன்னார். எனக்கு உடனே புரியவில்லை. இந்த போன் கையில் கிடைத்த அன்று முழுக்க நான் அதனுடனேயே கழித்தேன். அதன் புதுமைகள் என்னை விடுவதாயில்லை; ’ஸ்டீவ் ஜொப்ஸ் முக்கியமான ஆலோசனைக் கூட்டங்களுக்கு சப்பாத்து அணியாமல் வெறும் காலுடன்தான் வருவார். அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு அழுவார். குளிக்கவே மாட்டார்’ என்று அவரைப்பற்றி படித்திருந்தேன். ஆனால் அவர் உருவாக்கிய பொருள் என்னை அப்படியே வசீகரித்திருந்தது. என் மனைவி ’நீங்கள் ஒரு நாலு வயதுச் சிறுவன் பிறந்தநாள் பரிசோடு விளையாடுவதுபோல விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்’ என்று குற்றம் சாட்டினார். பல வருடங்களுக்கு பின்னர் ஒரு மின்கருவி என்னை இப்படி ஈர்த்தது இதுதான் முதல் தடவை. பைபிளில் ஒரு வசனம் வரும். ‘அது தன் மணாளனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணப்பெண்ணைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.’ நான்தான் அந்த மணாளன். எனக்காகத்தான் அது அத்தனை அழகாகத் தயாரிக்கப்பட்டிருந்தது.

ஆனால் என் நண்பர் ஒருவர் ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லா செல்பேசிகளும் ஒன்றே என்று சொன்னார். அவருக்கு நான் ஒரு கதை சொன்னேன். ‘இங்கிலாந்தின் அரச பரம்பரை நாலு தலைமுறையாக என்னை விட்டுப்போவதாயில்லை. முதலாவதாக ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர். நான் சிறுவனாயிருந்தபோது பாலர் பாடப் புத்தகத்தில் படித்த முதல் வசனம் ‘எங்கள் மன்னர் ஐந்தாம் ஜோர்ஜ்.’ அதன் பின்னர் எட்வேர்ட் VIII. அவருக்கு பிறகு ஜோர்ஜ் VI. இப்பொழுதும் கனடாவில் என்னுடைய ராணி எலிஸபெத் II. அப்பொழுதெல்லாம் பவுண், ஷிலிங், பென்ஸ் கணக்கு செய்யவேண்டும். கூட்டல், கழித்தல் என்றால் பரவாயில்லை. பெருக்கல், வகுத்தலை யோசித்துப் பாருங்கள். முடியைப் பிய்க்கத் தோன்றும். தசம காசு முறை வந்த பின்னர் எவ்வளவு இலகுவாகிவிட்டது. அப்படித்தான் இந்த செல்பேசியும்.’ 

நான் செல்பேசி வாங்கிய நாள், புதன்கிழமை, 5 ஒக்டோபர் 2011. அன்றிரவு 7 மணிக்கு ஒரு செய்தி ஐபோன் திரையில் தானாகத் தோன்றியது. ’ஸ்டீவ் ஜொப்ஸ் இறந்துபோனார்.’ 2004ம் ஆண்டு ஒரு நாள் காலை 7.30 க்கு மருத்துவர்கள் ஸ்டீவ் ஜொப்ஸை பரிசோதித்துவிட்டு அவருக்கு கணையத்தில் புற்று நோய் என்ற செய்தியை சொல்கிறார்கள். ஆதியிலிருந்து மனிதகுலம் சேகரித்த அத்தனை தகவல்களையும் விரல் நுனிக்கு கொண்டு வந்த ஸ்டீவ் ஜொப்ஸ், ’கணையம்’ என்றால் என்ன என்று அவர்களிடம் கேட்கிறார். அன்றைய பகல் முழுக்க அந்தச் செய்தியுடன், அதை ஜீரணிக்க முயன்றபடியே, கழித்தார். மாலை அவருடைய கணையத்தில் இருந்து சிறு சதைப் பகுதியை வெட்டி பூதக் கண்ணாடி வழியாக பரிசோதித்த மருத்துவர் அழத் தொடங்கிவிட்டார். ஆனந்தக் கண்ணீர். அவருடைய நோய் அறுவைச் சிகிச்சையால் தீர்க்கக்கூடியது. அறுவை சிகிச்சைக்கு பின்னர், உடம்பு முற்றிலும் குணமாகிவிட்டது என்று நம்பியிருந்த வேளையில், ஏழு வருடம் கழித்து மறுபடியும் வியாதி  தாக்கியது. திடீரென்று அவரின் மரணச் செய்தி அவர் உருவாக்கிய ஐபோன் திரையில் வந்திருந்தது.

இறந்த ஒருவருக்கு செய்யக்கூடிய ஆகக்கூடிய மரியாதை வருடத்தில் ஒருநாள் அவரை நினைவுகூர்வது. மாதம் ஒருமுறை  நினைவுகூர்வது. வாரம் ஒருமுறை நினைவுகூர்வது. நான் அவரை தினமும் நினைவுகூர்வேன்.

நன்றி:அமுது.நெட் 

No comments: