இலங்கைச் செய்திகள்

.
வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகளில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு Monday, 22 August 2011

வடக்கு,கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் திட்டமிட்டு இடம்பெற்று வரும் பெரும்பான்மையினத்தவர்களின் குடியேற்றங்கள் தொடர்பில் தமிழ்த் தரப்பினரால் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டு வந்த போதிலும் அது தொடர்பிலான நடவடிக்கைகள் எதுவும் இன்று வரை எடுக்கப்படாததனால் தமிழ் மக்களின் பாரம்பரிய இடங்கள் மட்டுமன்றி வாழ்வாதாரத் தொழிலான கடற்றொழிலும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.யுத்தம் முடிவடைந்து பாதுகாப்புக் கெடுபிடிகளும் ஏதோ ஒப்பீட்டளவில் தளர்த்தப்பட்டிருப்பதாக கருதப்படக் கூடிய நிலையில் இனிமேலாவது தமது வாழ்க்கையில் மேம்பாடு ஏற்படக் கூடியதாக இருக்குமென்ற நம்பிக்கையிலிருந்த வடக்கு,கிழக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் இன்றுமேற்கொள்ளப்பட்டு வரும் பெரும்பான்மையின குடியேற்றங்களினால் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்.

2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் யுத்தத்தின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட பின்னர் அங்கு மேற்கொள்ளப்பட்ட "கிழக்கின் உதயம்' அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக தமிழ் பேசும் மக்களின் பூர்வீக வாழ்விடங்கள் பல பெரும்பான்மையின மக்களின் ஆக்கிரமிப்புக்குட்பட்டன. பல இடங்களில் திட்டமிட்டே அரசு குடியேற்றங்களை ஏற்படுத்தியதுடன் அதனை ஊக்குவிப்பதற்காக பல்வேறுபட்ட சலுகைகளையும் வழங்கியது. கிழக்கு மாகாணத்தில் அரச அனுசரணையுடனான குடியேற்றங்களின் பிரதான இலக்காக கரையோரப் பிரதேசங்களே இருந்தன. வாகரையிலிருந்து வெருகல் வரை ஆரம்பித்த நில ஆக்கிரமிப்பு மூதூர்,சம்பூர், புல்மோட்டை,நாயாறு,கொக்கிளாய்,முல்லைத்தீவு எனப் பரந்து விரிந்து இன்று குடாநாட்டின் தீவுப் பகுதிகள் வரை வந்து நிற்கின்றது.

2009 மேயில் யுத்தத்தின் பிடியிலிருந்து வடக்கு மீட்கப்பட்ட பின்னர் அங்கு மேற்கொள்ளப்பட்ட "வடக்கின் வசந்தம்' அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாகவே தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாய நிலங்களும் வாழ்வாதாரத் தொழில் புரியும் கரையோரப் பிரதேசங்களும் திட்டமிட்டு ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டன. வடக்கின் கரையோரப் பிரதேசங்களில் பெரும்பான்மையின மீனவர்களைக் குடியேற்றுவதில் பாதுகாப்புத் தரப்பினர் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றமை ஒன்றும் இரகசியமான விடயமல்ல. திட்டமிட்டு தமிழ் மக்களின் நிலங்களை மட்டுமன்றி பொருளாதாரத்தையும் கபளீகரம் செய்யும் இந்தக் குடியேற்றங்களினால் தமிழ் மக்கள் மென்மேலும் அவலங்களையும் பொருளாதார சீரழிவுகளையும் சுமக்க வேண்டியவர்களாக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கிலும் வடக்கின் வன்னிப் பகுதியிலும் இதுவரையில் கரையோரப் பிரதேசங்கள் பெரும்பான்மையின மீனவர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர்களின் பார்வை யாழ்.குடா நாட்டிலுள்ள வடமராட்சி கிழக்குப் பகுதியிலும் தீவுப் பகுதியிலும் பதிந்துள்ளமை அந்த மக்கள் தமது ஜீவனோபாயத் தொழிலான கடற்றொழிலை முற்றாக பறிகொடுத்து விடக் கூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி கிழக்கு, தீவுப் பகுதிகளில் தமிழ் மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபட பல்வேறுபட்ட கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள போதிலும் இங்கு தற்போது தங்கி கடலட்டை பிடிப்பதில் ஈடுபட்டு வரும் பொரும்பான்மையின மீனவர்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாததால் மென்மேலும் "படையெடுப்புகள்' தீவிரமடையத் தொடங்கியிருப்பதுடன் இருப்பிடங்களையும் அமைத்து வருவது இப்பகுதி மீனவர்களை பேரதிர்ச்சியடைய வைத்துள்ளது.

வடமராட்சி கிழக்கு மற்றும் தீவுப் பகுதிகளில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் பெரும்பான்மையின மீனவர்கள் பாதுகாப்பு அமைச்சினதும் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சினதும் அனுமதியையும் ஆசீர்வாதத்தையும் பெற்றிருப்பதனால் இவர்கள் விடயத்தில் உள்ளூர் மீனவர்களினாலோ அல்லது மீனவர் அமைப்புகளினாலோ எந்த விதமான எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாதுள்ளது. எனவே இது விடயத்தில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், எம்.பி.க்களே காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தொடர்பாக வெறுமனே அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்காமல் ஆக்கபூர்வமான வகையில் செயற்பட வேண்டிய தார்மீக பொறுப்பு தமக்குண்டென்பதை இந்த அமைச்சர்களும் எம்.பி.க்களும் உணர்ந்து செயற்பட வேண்டுமென்பதே வடக்கு,கிழக்கு கரையோர மக்களின் வேண்டுகோளாகவுள்ளது!

நன்றி தினக்குரல்




புத்தளம் பொலிஸ் நிலையத்தை இராணுவத்தினர் பொறுப்பேற்பு பொலிஸ் மா அதிபர் நேரில் சென்று நிலைமையை ஆராய்வு
Tuesday, 23 August 2011

srilanka-armyபுத்தளத்தில் வன்முறை மோதல்கள் ஞாயிறு இரவு ஏற்பட்டதால் எழுந்துள்ள பதற்றத்தைத் தணிப்பதற்காக புத்தளம் பொலிஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டை இராணுவமும் விசேட அதிரடிப்படையும் எடுத்திருக்கும் அதேவேளை, பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் நேற்று புத்தளத்திற்கு சென்றிருக்கிறார்.

நிலைமையைக் கையாளுவதற்கு பொலிஸாருக்குத் தேவையான உத்தரவுகளை வழங்குவதற்காக அவர் அங்கு சென்றிருக்கிறார். புத்தளம் பகுதியிலுள்ள சிரேஷ்ட பொலிஸ் இராணுவ அதிகாரிகளுடன் அவர் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மோதல்கள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. ஆயினும் எவரும் கைதுசெய்யப்பட்டிருக்கவில்லை.

புத்தளத்தில் ஏற்பட்ட வன்முறைகளில் 23 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மரணமடைந்துள்ளார். இதனையடுத்து அந்தப் பகுதியிலுள்ள சகல பொலிஸ் அதிகாரிகளும் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு இராணுவ, விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பொலிஸார் ஒருவரும் நிலைகொண்டிருக்கவில்லை.

ஞாயிறு இரவு புத்தளம் நகரில் இனந்தெரியாத குழுவினரால் பொலிஸ்காரர் தாக்கப்பட்டிருந்தார்.டபிள்யூ நவரெட்ண பண்டார என்ற இந்தப் பொலிஸ்காரர் புத்தளம் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்தவராவார். பாலாவி சந்தியில் போக்குவரத்துக் கடமையை முடித்துக்கொண்ட பின்னர் அவர் பொலிஸ் நிலையத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் சீருடையில் வந்தபோதே அவர் இடைமறிக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணி குறித்து உடனடியாக அறியவரவில்லை. உடனடியாக ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் மரணமடைந்துள்ளார். அவரின் முகம் மோசமாகக் காயமடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது

இதேவேளை, அந்தப் பகுதியிலுள்ள கும்பலினால் கடற்படை சிரேஷ்ட அதிகாரியொருவரின் காரும் பின்னால் வந்த வாகனமும் தாக்கப்பட்டுள்ளன. பொலிஸ்காரர் தாக்கப்பட்டதை கேள்வியுற்ற பின்னர் அந்த இரு வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டாயிரம் பேர் நகரப் பகுதியில் குழுமியிருந்தனர். ஆனால், இராணுவம் மற்றும் அதிரடிப்படை அங்கு சென்றபோது பதற்றம் அதிகரித்திருந்தது. கூட்டம் கலைந்து செல்வதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 45 நிமிடங்களின் பின்னர் நகரத்தை கட்டுப்பாட்டுக்குள் படையினர் கொண்டு வந்துள்ளனர். புத்தளம் பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரித்திருக்கும் அதேவேளை, ஆஸ்பத்திரியைச் சூழ அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக புத்தளம் மாவட்டத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு க.பொ.த. உயர்தரப் பரீட்சை நிலையத்தில் காவல் கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். நுளம்புத்திரி வாங்கச் சென்றபோதே அவர் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

நன்றி தினக்குரல்

இலங்கை இன்று எதிர்நோக்கும் உண்மையான சவால்
Sunday, 21 August 2011

உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் இலங்கை எதிர்நோக்கும் சவால்கள் குறித்து தற்போது வாதப்பிரதிவாதங்கள்

தீவிரமடைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையின் பொறுப்புடைமை குறித்து சர்வதேச அரங்கில் கிளப்பப்படுகின்ற சர்ச்சைகளை எவ்வாறு இராஜதந்திர ரீதியில் கையாளுவது என்பதே அரசாங்கத்தைப் பொறுத்தவரை பெரிய சவாலாக நோக்கப்படுகிறது. பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததில் இலங்கைப் படைகள் கண்டிருப்பதாக அரசாங்கம் பெருமையுடன் உரிமை கோரிக்கொண்டிருக்கும் வெற்றிக்கு வழிவகுத்த தந்திரோபாயங்கள் பற்றிய அனுபவங்களை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் அரசாங்கம் காட்டுகின்ற அக்கறை மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை தணிப்பதற்குப் போதுமானதாக இல்லை.

உள்நாட்டுப் போர்க் காலகட்டத்தில் வெளிநாடுகளுக்குக் குறிப்பாக மேற்குலகிற்குப் புலம்பெயர்ந்த தமிழர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் செயற்பாடுகள் இலங்கைக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக அரசாங்கம் வெளிப்படையாகவே கூறுகிறது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகளினால் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு புலம்பெயர் தமிழர்களின் பிரசாரங்களே பின்புலமாக இருப்பதாகவும் அரசாங்கம் கூறுகிறது. போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் இலங்கையில் முன்னெடுக்கப்படக்கூடிய பாரிய பொருளாதார அபிவிருத்திச் செயன்முறைகளைச் சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்படுவதாக புலம்பெயர் தமிழர்களைக் குற்றஞ்சாட்டும் அரசாங்கம் அவர்கள் மத்தியில் உள்ள அமைப்புகளினால் முன்னெடுக்கப்படுகின்ற இலங்கைக்கு எதிரான பிரசாரங்களை முறியடிப்பதையே அதன் பிரதானமான இராஜதந்திர செயற்பாடாக மாற்றியிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

உள்நாட்டுப் போரில் தங்கள் இரத்த பந்தங்கள் இலங்கையில் அனுபவிக்க வேண்டியிருந்த அவலங்களுக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழர்கள் குரல்கொடுத்து வந்திருக்கிறார்கள். இவர்களில் சகலருமே இலங்கையில் தமிழரின் அரசியல் உரிமைக்கான போராட்டங்கள் வழிநடத்தப்பட்ட முறையை முற்றுமுழுதாக ஆதரித்தவர்கள் என்று கூறிவிட முடியாது. சகல சமூகங்கள் மத்தியிலும் காணப்படுவதைப் போன்று வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் பல்வேறுபட்ட அரசியல் கருத்துகளும் சிந்தனைகளும் நிலவவே செய்கின்றன. போர் முடிவடைந்துவிட்டபோதிலும் அந்தப் போருக்கான அடிப்படைக் காரணியான இன நெருக்கடியின் விளைவாகச் சொந்த நாட்டைவிட்டு அகதிகளாக வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் இலங்கையின் அரசியல் நிகழ்வுப் போக்குகள் தொடர்பில் தங்கள் பிரதிபலிப்பை வெளிக்காட்டுவது இயல்பானதே. இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வை நோக்கிய செயன்முறைகளில் உருப்படியான நகர்வெதையும் காண முடியாததால் புலம்பெயர் தமிழர்கள் கவலை கொண்டிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடாகவே அண்மைய சில அரசியற் செயற்பாடுகளை அவர்கள் மத்தியில் காணக்கூடியதாக இருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்களை ஒட்டு மொத்தத்தில் விரோதிகளாக நோக்கும் அணுகு முறையை அரசாங்கம் கடைப்பிடிக்கக்கூடாது என்பதே எமது அபிப்பிராயமாகும்.

இலங்கை நெருக்கடியை மையமாக வைத்து புலம்பெயர்ந்த தமிழர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற சகல அரசியற் செயற்பாடுகளையும் இலங்கைக்கு விரோதமானவையாக நோக்கவும் கூடாது. தமிழரின் அரசியல் உரிமைகளுக்கான கடந்த காலப் போராட்டங்களில் இழைக்கப்பட்டிருக்கக்கூடிய தவறுகளை இலங்கையில் உள்ள தமிழர்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்திருப்பதைப் போன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் அத்தகைய உணர்வுகள் காணப்படுகின்றன. விடுதலைப் புலிகளை அரசாங்கம் எவ்வாறு நோக்கியதோ அதேபோன்று புலம்பெயர்ந்த தமிழர்களைப் போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் நோக்குவதென்பது தேசிய நல்லிணக்கத்துக்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு ஒருபோதுமே உதவப் போவதில்லை.

போர் முடிவுக்கு வந்து இரு வருடங்களுக்கும் கூடுதலான காலம் கடந்துவிட்ட போதிலும் கூட, இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான செயன்முறைகளில் அரசாங்கத்துக்கு ஓரளவுக்கேனும் அக்கறையிருக்கிறது என்று தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடியதான உருப்படியான எந்தவொரு அரசியல் சமிக்ஞையும் காண்பிக்கப்படவில்லை. வெறுமனே மேலோட்டமான அறிவிப்புகளினால் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்து விடவும் முடியாது. அண்மைக்காலமாக தேர்தல்கள் போன்ற ஜனநாயகச் செயன்முறைகளில் படிப்படியாக அக்கறைகாட்ட ஆரம்பித்திருக்கும் தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்டிருக்கக்கூடிய அரசியல் பிரதிநிதிகளின் குறைந்தபட்சக் கோரிக்கைகளுக்காவது இணங்குவதன் மூலமாக சமிக்ஞையைக் காட்டுவதற்கான வாய்ப்பு இருக்கின்ற போதிலும், அதைப் பயன்படுத்துவதிலும் அரசாங்கத்துக்கு அக்கறையில்லை.

போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் இலங்கைச் சமுதாயம் எதிர்நோக்குகின்ற மெய்யான சவால் போருக்குக் காரணமாயமைந்த இனநெருக்கடியைப் பயன்படுத்தி மீண்டும் எந்த வடிவிலும் அமைதியின்மை தோன்றாதிருப்பதை உறுதிசெய்வதற்கான தூரதிருஷ்டியான அணுகுமுறைகளைக் கையாள்வதற்கான அரசியல் துணிச்சலை வெளிக்காட்டுவதேயாகும். அதை இதுவரை நாட்டின் அரசியல் தலைமைத்துவம் செய்யவில்லை. தமிழ் பேசும் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு பெரும்பான்மைச் சிங்கள மக்களைத் தயார்படுத்துவதற்குப் பதிலாக போர்க்கால மனோநிலையில் அவர்களை வைத்திருப்பதற்கே அரசாங்கம் விரும்புகிறது.

போர் மூண்டதற்கான அடிப்படைக் காரணிகள் போரின் முடிவுடன் இல்லாமற் போய்விடவில்லை. அந்தக் காரணிகளை இல்லாமற் செய்வதற்கு தமிழ் பேசும் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய இணக்கத் தீர்வொன்றை காண்பதற்கு மானசீகமாக அரசியல் துணிச்சலை வெளிக்காட்டி அரசாங்கம் செயற்படுமேயானால், உள்நாட்டுத் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதில் அரசாங்கம் உண்மையான அக்கறையைக் காட்டுமேயானால், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இலங்கையை மையமாகக் கொண்ட செயற்பாடுகளுக்கு வாய்ப்பில்லாமற் போகும். அத்துடன் சர்வதேச சமூகத்திடமிருந்து நெருக்குதல்கள் வருவதற்கான பின்புலங்களும் இல்லாமற் போய்விடும். இதைச் செய்வதற்கு தங்களைத் தயார்படுத்த வேண்டியதே இன்று அரசாங்கத் தலைவர்கள் முன்னாலுள்ள மிகப்பெரிய பொறுப்பாகும். பொதுவில் இதுவே போரின் முடிவுக்குப் பின்னர் இலங்கைச் சமுதாயம் எதிர்நோக்குகின்ற பிரதான சவாலுமாகும்!

நன்றி தினக்குரல்

மர்மமனிதர்களாக வருவோர் இராணுவத்தினரே: ஸ்ரீதரன் எம்.பி.


24/08/2011

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம மனிதர்களை மடக்கிப்பிடிக்க முற்பட்ட பொது மக்களின் வீடுகளுக்குள் நள்ளிரவு வேளையில் நுழைந்த இராணுவத்தினர் ஆண்கள் பெண்கள் என்ற பேதம் பாராது கும்பிட கும்பிடத் தாக்கியுள்ளனர் என்று யாழ். மாவட்ட எம்.பி. எஸ். ஸ்ரீதரன் நேற்று சபையில் குற்றஞ்சாட்டினார்.

படையினர் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியது மட்டுமல்லாது 118 பேரைக் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தின் ஆலோசனையின் பிரகாரம் இவர்களில் 18 பேர் மோசமான நிலையில் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கிறீஸ் மனிதர்கள் அல்லது மர்மமனிதர்களாக வருவோர் இராணுவத்தினரே என்பதற்கு எமது மக்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இவ்விடயங்களை இந்த சபையில் பொறுப்புடன் கூறிக் கொள்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துறைமுக, விமான நிலை வரி அறவீட்டுச் சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஸ்ரீதரன் எம்.பி. மேற் கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

கிறீஸ் பூதம் அல்லது மர்ம மனிதன் என்ற அச்சத்தினால் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் இன்று தமது நிம்மதியையும் நித்திரையையும் இழந்தவர்களாய் அல்லோகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

மலையகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மர்ம மனித அட்டகாசங்கள் அம்பாறை மட்டக்களப்புக்கு வந்து தற்போது யாழ்ப்பாணம் வரையில் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் ஜனாதிபதி சுதந்திரமாக நடமாடுவதாக செய்திகள் புகைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் சுதந்திரத்தையும் நிம்மதியையும் இழந்து நிற்கின்றனர். வீடுகளை விட்டு வெளியில் வர முடியாதவர்களாக இருக்கின்றனர்.

யாழ். நாவாந்துறை பகுதியிலும் வடமராட்சியில் பொலிகண்டி வதிரி ஆகிய பகுதிகளிலும் கிளிநொச்சியில் பாரதிபுரத்திலும் கடந்த திங்கள் இரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் புகுந்துள்ளனர்.

இந்த மர்ம மனிதர்களை பிடிப்பதற்கு மக்கள் முற்பட்ட சந்தர்ப்பத்தில் அவர்கள் அருகில் உள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும் பொலிஸ் நிலையங்களுக்குள்ளும் ஓடி தஞ்சம் புகுந்து கொள்கின்றனர்.

கிளிநொச்சி பராதிபுரத்தில் ஆடைகளற்ற நிலையில் ஆயுதங்களுடன் இரு மர்ம மனிதர்கள் வீடுகளுக்குள் புகுந்த போது அவர்களை பிடிப்பதற்கு பொதுமக்கள் முற்பட்டுள்ளனர். எனினும் அந்த மர்ம மனிதர்கள் இராணுவத்தினரால் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

யாழ். நாவாந்துறையில் வீடுகளுக்குள் புகுந்த மர்ம மனிதர்களை பிடிக்க முற்பட்ட பொது மக்களின் வீடுகளுக்குள் நள்ளிரவு வேளையில் புகுந்த இராணுவத்தினர் அந்த மக்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். ஆண்கள் பெண்கள் என பாராது கும்பிட கும்பிட கதறக் கதற தாக்கியுள்ளனர்.

அத்துடன் இல்லாது அதே பொழுதில் 118 பேரை கைது செய்த இராணுவத்தினர் இராணுவ முகாம்களுக்கு இழுத்துச் சென்றுள்ளனர். அங்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரவிரவாக தாக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்று (நேற்று) யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது மோசமான தாக்குதலுக்குள்ளான 18 பேரை யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு நீதிமன்றம் பணித்ததன் பிரகாரம் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெண் ஒருவரும் அடங்குவர்.

இரவு நேரங்களில் பொதுமக்களின் வீடுகளுக்குள் நுழைகின்ற மர்ம மனிதர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு எமது மக்களிடம் போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. அவர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்பதை இந்த பாராளுமன்றத்தில் மிகவும் பொறுப்புடன் கூறிக் கொள்கின்றேன்.

மர்ம மனிதர்கள் இராணுவத்தினர் எனில் அவர்களது பெயர்களைக் குறிப்பிடுமாறு அமைச்சர் தினேஷ் குணவர்தன இங்கு கேட்கிறார்.

இரவில் வருகின்ற இவர்கள் முகத்தில் உடம்பில் கிறீஸ் பூசிக் கொண்டும் முகங்களை மறைத்துக் கொண்டும் சீருடையுடனும் சீருடை இல்லாமலும் இருக்கும் நிலையில் பொது மக்களால் அவர்களிடத்தில் பெயர்களை கேட்டறிவது எவ்வாறு? இவ்வாறு வருகின்ற மர்ம மனிதர்கனை துரத்திப்பிடிக்க முற்படுகின்ற போது அவர்கள் இராணுவ முகாம்களுக்குள் ஓடி ஒளிகின்றனரே இதன் மர்மம்தான் என்ன? அவர்களை இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்பதன் இரகசியம் என்ன?

மர்ம மனிதர்களை பிடிக்க மறுக்கும் இராணுவத்தினரும் பொலிஸாரும் பொதுமக்களை தாக்குகின்றனர் மிரட்டுகின்றனர்.

உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வாக்களித்ததன்பின்னரே இங்கு மர்ம மனிதர்களின் அட்டகாசம் ஆரம்பிக்கின்றது. தமிழ் மக்களையும் தமிழ் பகுதிகளையும் மட்டுமே மர்ம மனிதர்கள் இலக்கு வைத்திருக்கின்றனர். வேறு பிரதேசங்களில் இந்நிலை இல்லை. எந்தவொரு சிங்களப் பகுதியிலாவது இந்த மர்ம மனிதனின் அட்டகாசம் இருக்கின்றதா?

தமிழ் மக்களின் பிரச்சினைகளை திசை திருப்பும் நோக்குடன் இராணுவத்தினூடாக அரசு இவ்வாறான மர்ம மனிதர்களின் நாடகத்தை அரங்கேற்றுகின்றது. எனவே தமிழ் மக்களுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளுக்கு உடனடியாக முடிவும் தீர்வும் காணப்படவேண்டும். எமது மக்களின் இந்த பிரச்சினையை இந்த பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எமது மக்களின் பிரச்சினைகளை இங்கு கொண்டு வருவதற்கான உரிமை எம்.பி. என்ற வகையில் எனக்கு இருக்கின்றது. இதனை எவரும் தடுத்துவிட முடியாது என்றார்.

நன்றி வீரகேசரி

மர்ம தேசம்
Thursday, 25 August 2011

மர்ம மனிதர்கள் பற்றிய அச்சக்கோளாறின் விளைவாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்புப் படையினருடனும் பொலிஸாருடனும் மக்கள்

மோதல்களில் ஈடுபடும் சம்பவங்கள் தொடருவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கு கிறீஸ் பேய்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை என்று கூறியிருக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மர்ம மனிதர்கள் பிரச்சினையைப் பயன்படுத்தி பாதுகாப்புப் படைகளின் முகாம்களையும் பொலிஸ் நிலையங்களையும் முற்றுகையிட்டு தாக்குதல்களை நடத்துவதற்கு முயற்சிப்பவர்களை இனிமேல் பயங்கரவாதிகள் என்று கருதி கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சட்டத்தைக் கையிலெடுக்க வேண்டாமென்று படைகளின் உயர் தளபதிகளும் பொலிஸ் உயரதிகாரிகளும் மக்களைத் தொடர்ச்சியாக அறிவுறுத்திய வண்ணமிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் மர்ம மனிதர்கள் பீதி காரணமாக ஏற்பட்ட களேபரத்தையடுத்து சுமார் 100 பேர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இராணுவத்தினரினதும் பொலிஸாரினதும் தாக்குதல்களில் காயமடைந்த சுமார் 30 பேர் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். புத்தளம், கிண்ணியா, அம்பாறை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளிலும் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மர்ம மனிதர்களோ அல்லது கிறீஸ் பேய்களோ இலங்கையில் இல்லை என்றும் நாட்டைச் சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்ட சில சக்திகளின் கைவரிசையே குழப்பநிலைமைக்குக் காரணமாக இருக்கிறதென்றும் அரசாங்கத் தலைவர்களும் அதிகாரிகளும் கூறிக்கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. மர்ம மனிதர்கள் பற்றிய அச்சக் கோளாறின் விளைவாக தோன்றிய குழப்பநிலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லையென்று எதிரணிக் கட்சிகள் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றன. மர்ம மனிதர்கள் பீதி தணிவதற்குப் பதிலாக மேலும் தீவிரமடைந்தே வருகிறது.

தலைநகர் கொழும்பில் கூட ஒரு பகுதியில் கடந்த ஞாயிறன்று அதிகாலை மர்ம மனிதன் பீதி கிளம்பியதால் பதற்றநிலை உருவானது. மக்கள் வீதிகளில் இறங்கியதால் பெரும் எண்ணிக்கையில் பொலிஸாரைக் குவித்து நிலைமையைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டியேற்பட்டது. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல மர்ம மனிதர்கள் பற்றிய பீதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் வீணான சந்தேகத்தில் ஆட்களை அடித்துக் கொலை செய்கின்ற அளவுக்கு நிலைமை பாரதூரமானதாகியிருக்கிறது. இருமாதங்களுக்கும் கூடுதலான காலமாக மர்ம மனிதர்கள் பற்றிய பீதியின் விளைவாக துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்ற போதிலும், நாட்டின் எந்தவொரு பகுதியிலும் கிறீஸ் பூசிய நிலையில் ஒரு மர்ம மனிதன் கூட மக்களினாலோ, பொலிஸாரினாலோ, படையினராலோ இதுவரை பிடிபட்டதாக இல்லை. மர்ம மனிதர்கள் விவகாரத்துக்குப் பின்னணியில் அரசியல் நோக்கம் எதுவும் இருக்கக்கூடுமோ என்ற சந்தேகம் ஆரம்பத்தில் இருந்தே கிளப்பப்பட்டு வந்தது. எதிரணிக் கட்சிகள் இது தொடர்பில் பகிரங்கமாகவே கருத்துக்களை வெளியிட்டதையும் கண்டோம்.

பலவாரங்களாக மர்ம மனிதர்கள் பற்றிய பதற்றநிலையைத் தணிக்க முடியாமல் இருக்கின்றமையும் இதுவிடயத்தில் அரசியல் நோக்கம் பற்றிய சந்தேகங்களை வலுப்படுத்துகின்றது என்பதிலும் சந்தேகமில்லை. மர்ம மனிதர்கள் என்று சந்தேகித்து தாங்கள் பிடித்துக் கொடுக்கும் நபர்களை பொலிஸார் விடுவித்து விடுகிறார்கள் என்று பல தடவை மக்கள் முறையிட்டிருக்கிறார்கள். மர்ம மனிதர்களாகத் தோன்றுபவர்கள் மக்களினால் விரட்டப்படும் போது படையினரின் நிலைகள் உள்ள பகுதிகளிலோ அல்லது பொலிஸ் நிலையங்களுக்கு அண்மையாகவோ தப்பியோடிவிடுவதாகவும் மக்கள் வெளிப்படையாகவே கூறுகிறார்கள். ஆனால், மக்களினால் பிடித்துக் கொடுக்கப்படும் நபர்களில் எந்த மர்மத்தையும் தங்களால் காணமுடியவில்லை என்று கூறி பொலிஸார் அவர்களை விடுவித்து விடுகிறார்கள். இத்தகைய சம்பவங்ளே பொலிஸ் நிலையங்களை அல்லது படைமுகாம்களை மக்கள் முற்றுகையிடும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கின்றன. இந்த மர்ம மனிதர்கள் விவகாரத்தில் உள்ள மர்மம் என்றுதான் துலங்குமோ? துலங்காவிட்டால் இலங்கை ஒரு மர்மதேசமாகிவிடுமல்லவா?

நன்றி தினக்குரல்

பயங்கரவாதச் சட்டம் நடைமுறையில் இருக்கும்: அரசாங்கம் _


25/8/2011

பயங்கரவாதச் சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் மாத்திரமே நீக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இந்த முடிவை எடுத்து நாடாளுமன்றத்தில் அறிவித்தார் என அமைச்சரவை பேச்சாளரும் சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நன்றி வீரகேசரி

No comments: