சென்னைக்கு இன்று வயது 372 - டிஎன்எஸ்


.

வணக்கம் சென்னை. இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க நகரமான சென்னைக்கு இன்று (ஆக.22) வயது 372 ஆகும்.
இந்தியாவின் நான்காவது பெரிய நகரான டெட்ராய்ட் சென்னை, வந்தாரை வாழவைக்கும் சென்னை, எத்தனை லட்சம் பேருக்கு வாழ்க்கை கொடுத்த, கொடுக்கப்போகும் சென்னை.
1639ஆம் ஆண்டு இதே நாளில் சென்னப்ப நாயக்கரிடமிருந்து இந்த இடத்தை கிழக்கிந்திய கம்பனியின் வணிகர்கள் பிரான்ஸிஸ் டே மற்றும் ஆன்ட்ரூ கோகன் வணிகம் செய்வதற்காக வாங்கியதாகவும், கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் 'சென்னப்பட்டினம்' என்று அழைக்கப்பட்டது என்பதும், சென்னப்பட்டினத்துக்கு தெற்கே அமைந்திருந்த ஊர் மதராஸ் என்று அழைக்கப்பட்டது என்பதும் வரலாறு.



பின்னர், இந்த இரண்டு பட்டினங்களையும் இணைத்து மதராஸ் என்ற பெயரிலும், தமிழர்கள் சென்னப்பட்டினம் என்றும் அழைத்தனர்.



பின்பு ஒரு வருடம் கழித்து இங்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. இங்கிருந்து ஆங்கிலேயர்கள் வணிகம் செய்து வந்தனர். கொஞ்சகாலம் பிரெஞ்சு கட்டுப்பாட்டிலும் மெட்ராஸ் இருந்திருக்கிறது.



ஆங்கிலேயர்கள் சென்னையை தலைமையிடமாக கொண்டு சென்னை மாகாணம் உருவாக்கினர். தற்போதைய தமிழ்நாட்டுடன் ஆந்த்ரா, கேரளா, கர்நாடகா மற்றும் ஒரிசாவில் இருந்து கொஞ்சம் பிச்சு பிச்சு சேர்த்தால் பழைய சென்னை மாகாணம் கிடைக்கும். சுதந்திரம் அடைந்த பிறகு, மெட்ராஸ் மாநிலமாக உருவாக்கப்பட்டது தற்போதைய தமிழ்நாடு. 1968இல் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. 1996இல் மெட்ராஸ் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது. எத்தனையோ மாற்றத்திற்கு பிறகும் இன்றும் கம்பீரமாக நிற்கிறது சென்னை.



சென்னைக்கு 372 வயதாகி விட்டதாக அரசு சொல்கிறது. கேசவநாயக்கர் கொடுத்த இடத்தில் உருவான சென்னைப்பட்டினம் என்று அரசு சொல்லி அதிலிருந்து சென்னை வரலாற்றை மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, எழும்பூர் என்று அடையாளப்படுத்தி ஒரு வார விழாவாக கொண்டாட இருக்கிறது.



இந்தியாவின் 4-வது பெரிய நகரமாகவும், தாய்த்தமிழ்நாட்டின் தலைநகரமாகவும் அமைந்திருப்பது சென்னை மாநகரம் ஆகும். பரந்து விரிந்த வங்காளவிரிகுடா கரையில் அமைந்துள்ள சென்னை துறைமுகம் கடல் வழி வாணிபத்துக்கு வழிகாட்டி என்று சொன்னால் அது மிகையாகாது.



உலகில் உள்ள 35 பெரிய நகரங்களில் ஒன்றாக சென்னை மாநகரம் விளங்குகிறது.



புனித ஜார்ஜ் கோட்டையை மையமாகக்கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டினத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு, உள்ளிட்ட பகுதிகள் அன்றைய தினம் குக்கிராமமாக இருந்தன.



1688-ம் ஆண்டில் சென்னை முதல் நகரசபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகரசபை சென்னையில் அமைந்தது.



படிப்படியாக மதராஸ் பட்டினத்துடன் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் ஒவ்வொன்றாக இணைக்கப்பட்டன. 1708-ம் ஆண்டு, மதராஸ் நகரத்துடன் நுங்கம்பாக்கம், திருவொற்றிஞ்ர், வியாசர்பாடி என ஒவ்வொரு பகுதியாக இணைக்கப்பட்டன. 1711-ம் ஆண்டு சென்னையில் முதலாவது பிரிண்டிங் பிரஸ் தொடங்கப்பட்டது. 1746-ம் ஆண்டு, மதராஸ் நகரத்தை ஆங்கிலேயர் வசம் ஒப்படைத்தனர். அதன்பின் பிரெஞ்சுக்காரர்கள் சாந்தோம், மைலாப்பூர் பகுதிகளை மதராசுடன் இணைத்தனர். இப்படியாக காலப்போக்கில் மதராஸ்பட்டினம் வளர்ந்தது.



இன்று அண்ணாசாலை என அழைக்கப்படும் அன்றைய மவுண்ட் ரோட்டில் ஸ்பென்சர் நிறுவனத்தின் வணிக வளாகம் சென்னை நகரின் வரலாற்று சின்னமாக இன்றளவும் விளங்குகிறது. மெரினா கடற்கரையும், அதையொட்டியுள்ள விவேகானந்தர் இல்லமும் காலத்தால் அழிக்கமுடியாத பகுதி என்று சொல்லவேண்டும்.



இந்துக்களுக்கு மைலாப்பூர் கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில்களைப் போல், கிறிஸ்தவர்களுக்கு சாந்தோம் பேராலயம், அரண்மனைக்காரன் தெருவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள புனித மேரி ஆலயம், முஸ்லிம்களுக்கு திருவல்லிக்கேணி பெரிய மசூதி, ஆயிரம்விளக்கு மசூதி போன்றவை சரித்திர சான்றுகளாக இன்றளவும் விளங்குகின்றன.



வரலாற்றில் பல போர்களைக்கண்ட நகரம் சென்னையாகத்தான் இருக்கும். அடையாறில் நடந்தபோரில்தான், பிரஞ்சுக்காரர்கள், மதராஸ் நகரைவிட்டு முழுமையாக தப்பி ஓடினார்கள். இரண்டாம் உலகப்போரில் உயிர்நீத்த 857 வீரர்களுக்காக, தீவுத்திடல் அருகே அமைக்கப்பட்டிருப்பதுதான் போர் `நினைவுச்சின்னம்' ஆகும். இது 1952-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இன்றளவும், ஆண்டுதோறும் இங்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.



மதராஸ் பட்டினத்தின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக இன்றளவும் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோவில், சென்னை சென்டிரல் ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையங்களும், சென்னை ஜி.பி.ஓ., சென்னை ஐகோர்ட்டு, சென்னை பல்கலைக்கழக செனட் ஹால், எழும்பூர் அருங்காட்சியகம், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு அருகே அமைந்துள்ள விக்டோ ரியா ஹால், மெமோரியல் ஹால் என பல கட்டிடங்கள் இன்றளவும் மதராஸ் பட்டினத்தின் பெயர் சொல்லும் வகையிலும், சென்னை நகரின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் இன்றளவும் அமைந்துள்ளன.



இப்படி படிப்படியாக மதராஸ் பட்டினம் வளர்ச்சி அடைந்தது. 1947-ம் ஆண்டு, இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு, மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாக சென்னை அமைந்தது. 1956-ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்களைப்பிரித்தபோது, மதராஸ், தமிழ்நாட்டின் தலைநகராகியது. அதன்பின் மதராஸ் பட்டினம் என்ற பெயர் சென்னை நகராக மாறியது. அதைத்தொடர்ந்து, சென்னை மாகாணம் 'தமிழ்நாடு' என்று மாற்றப்பட்டது. 1996-ல் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது. எத்தனையோ மாற்றத்திற்கு பிறகும் இன்றும் கம்பீரமாக நிற்கிறது சென்னை.



அன்று மட்டுமல்ல, இன்றளவும் அனைத்து தரப்பினரும் வாழும் நகரமாக சென்னை அமைந்துள்ளது. இந்தியாவின் அமைதி நகரம் என்று சென்னையை அழைக்கலாம் என்று வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து சென்னைக்கு சுற்றுலா வருபவர்கள் சொல்வார்கள். . (டிஎன்எஸ்)

Nantri: Thenee

No comments: