உலகச் செய்திகள்

முடிவுக்கு வருகிறது கடாபியின் சகாப்தம் திரிபோலியும் கிளர்ச்சியாளர்கள் வசம் கடாபியின் மகன்மார் கைது
Tuesday, 23 August 2011

Gadafiலிபியத் தலைவர் முஅம்மர் கடாபியின் 42 வருட அதிகாரம் முடிவுக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தலைநகர் திரிபோலிக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள் அதன் பல பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.கிளர்ச்சியாளர்கள் திரிபோலிக்குள் நுழையும் போது கடாபியின் படைகளிடமிருந்து சிறியளவிலான எதிர்ப்புகளே கிளம்பியதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் கடாபி எங்கிருக்கிறார் என்பது தெளிவாகவில்லை.

எனினும் கடாபியின் அரசியல் வாரிசாகக் கருதப்படும் அவரது இரண்டாவது மகன் செய்ப்அல்இஸ்லாம் உட்பட அவரது மூன்று மகன்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக கிளர்ச்சியாளர்களின் அதிகார மாற்றத்திற்கான சபை தெரிவித்துள்ளது.

இரு மகன்கள் கைது செய்யப்பட்ட அதேவேளை மூன்றாவது மகன் தானாகவே சரணடைந்ததாகத் தெரிவிக்கப்படும் நிலையில் செய்ப் அல்இஸ்லாமின் கைது மட்டுமே பல்வேறு தரப்பினராலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை,கடாபி அல்ஜீரியா சென்றிருக்கலாமெனக் கருதப்படுவதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.

கடாபி கோழை போன்று நாட்டைவிட்டுத் தப்பியோடியுள்ளதாக லிபியாவின் சுயாதீன தொலைக்காட்சி சேவையொன்று தெரிவித்துள்ள அதேவேளை,ஆபிரிக்க ஒன்றியத்தின் முயற்சிகளின் மூலம் அங்கோலா அல்லது சிம்பாப்வேயை கடாபி சென்றடைந்திருக்கலாமென அல்ஜசீரா செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

இதேவேளை,கடாபியின் சகாப்தத்தின் வீழ்ச்சியைக் குறிக்கும் முகமாக திரிபோலியின் வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடாபியின் ஆட்சியின் மையமாக விளங்கிய திரிபோலியிலுள்ள கிறீன் சதுக்கத்தில் கிளர்ச்சியாளர்களுடன் ஆயிரக்கணக்கான நகரவாசிகளும் இணைந்து தமது மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர்.

கிளர்ச்சியாளர்களின் மூவண்ணக் கொடிகளை அசைத்தவாறும் கைகளைத் தட்டியவாறும் வானத்தை நோக்கிச் சுட்டவாறும் கிளர்ச்சியாளர்களும் மக்களும் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டுவரும் அதேவேளை, சிலர் கடாபி அரசாங்கத்தின் பச்சைக் கொடிகளைத் தீயிட்டுக் கொளுத்தியும் கடாபியின் படங்களைத் தாங்கிய பதாகைகளை அழித்தும் கடாபி மீதான வெறுப்பை வெளிப்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிறீன் சதுக்கத்தைக் கைப்பற்றியதன் மூலம் கடாபிக்கு எதிராகக் கடந்த 6 மாத காலமாக போராடி வந்த கிளர்ச்சியாளர்கள் வெற்றியின் உச்சத்தை எட்டியுள்ளனர்.

கடந்த பெப்ரவரியில் கடாபியின் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையிலான உள்நாட்டுப் போர் ஆரம்பமானதிலிருந்து கடாபிக்குச் சார்பான பேரணிகள் நடைபெறும் மையமாக கிறீன் சதுக்கம் விளங்கியதுடன் இங்கிருந்தே கடாபி தனது ஆதரவாளர்களுக்கு உரைநிகழ்த்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக தொலைக்காட்சி ஊடாகக் கடாபி விடுத்திருந்த செய்தியில் திரிபோலியைப் பாதுகாக்க வீதிகளில் இறங்குமாறு ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

மேலும் கடாபியின் அரசாங்கப் பேச்சாளர் மௌசா இப்ராஹிம் விடுத்திருந்த செய்தியில் ஆயிரக்கணக்கான போராளிகள் தம்வசம் இருப்பதாகவும் இறுதிவரை அவர்கள் போராடுவார்களெனவும் சூளுரைத்திருந்தார்.

எனினும் கடாபியின் படைகள் அவரை விரைவாகக் கைவிட்டிருப்பதைப் போல் தோன்றுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

திரிபோலிக்கும் கடாபிக்கும் பாதுகாப்பளித்து வந்த இராணுவத்தினர் சரணடைந்ததுடன் ஆயுதங்களைக் கீழே போடுமாறு தமது துருப்புகளுக்கும் உத்தரவிட்டதைத் தொடர்ந்தே கிளர்ச்சியாளர்கள் திரிபோலிக்குள் இலகுவாக நுழைந்ததாகக் கிளர்ச்சியாளர்களின் தகவல்களை அமைச்சர் மஹ்மூட் சமõம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒருங்கிணைந்த நடவடிக்கையொன்றின் மூலம் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலிருந்து திரிபோலியை நோக்கி கிளர்ச்சியாளர்கள் முன்னேறியதாகவும் கிளர்ச்சியாளர்களுடன் இணைந்த திரிபோலி வாசிகளுக்கும் ஆயுதங்களும் வெடிமருந்துகளும் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பல மாதங்களாகத் தொடர்ந்த நேட்டோவின் வான் தாக்குதல்களுக்கு மத்தியிலும் இம்மாத முற்பகுதிவரை உறுதியாக அதிகாரத்தைப் பற்றியிருந்த கடாபியின் பிடி தற்போது சடுதியாகத் தளர்ந்துள்ளது.

கடந்த பல வாரங்களாக எவ்வித முன்னேற்றமுமின்றி ஸ்தம்பிதமடைந்திருந்த கிளர்ச்சியாளர்கள் கடந்த இரு வாரங்களில் தந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களைக் கைப்பற்றி கடாபியின் கோட்டையாக விளங்கிய திரிபோலியையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி 22 ஆம் திகதி கடாபிக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பிக்கப்பட்டபோது தொலைக்காட்சி மூலமாக உரைநிகழ்த்திய கடாபி கிளர்ச்சியாளர்கள் வீடு வீடாக அறை அறையாக அங்குலம் அங்குலமாகத் தேடிக் கண்டுபிடித்து கொல்லப்படுவார்களென சூளுரைத்திருந்தார்.

இதுவே கடாபிக்கு எதிரான ஆயுதக் கிளர்ச்சி வலுப் பெறுவதற்கான முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்கள் திரிபோலிக்குள் நுழைந்த போது அரசாங்கத்தின் கோட்டையாக விளங்கும் திரிபோலியிலிருந்து நூற்றுக்கணக்கான மைல் தொலைவிலுள்ள நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள பெங்காஸி நகரிலும் மக்கள் ஆடியும் பாடியும் வாண வேடிக்கைகளைக் கொளுத்தியும் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டிருந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் கைது செய்யப்பட்டுள்ள செய்ப்அல்இஸ்லாம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நெதர்லாந்திலுள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடாபியுடன் மிகவும் நெருங்கிச் செயற்பட்ட செய்ப்புக்கு எதிராக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் கைதாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்து
நன்றி தினக்குரல்


No comments: