மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் -பகுதி 6


.
                                                                                                         பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா                                              
பிரிவினால் வாடல்


கணவன்-மனைவி, காதலன்-காதலி என்பவர்கள் ஏதேதோ காரணங்களால் சில வேளைகளில் பிரிந்திருக்கவேண்டி ஏற்பட்டுவிடுகிறது. அந்த நேரங்களில் தங்கள் பிரிவுத் துயரங்களை அவர்கள் வெளியிட்டபோது எழுந்த பாடல்கள் மிகவும் அருமையானவை. கவிநயம் மிக்கவை. இலக்கியச் செறிவு நிறைந்தவை. அத்தகைய பாடல்கள் சிலவற்றை இப்பகுதியில் காணலாம்.




காதலர்களுக்கிடையே ஏற்படுகின்ற பிரிவு இருவகையானது. கருத்தொருமித்த காதலர்கள் புறக்காரணிகளால் பிரிந்திருக்க நேரிடுவது ஒருவகை. இது துன்பத்திலும் இன்பத்தைத் தருவது.  பழைய நிகழ்வுகளை நினைப்பதிலும், புதிய கனவுகளில் மிதப்பதிலும் அந்தப் பிரிவுக் காலத்தில் ஒருவகை இன்ப வேதனை இதயத்தினுள் பரவிக்கொண்டேயிருக்கும்.

அடுத்தவகையான பிரிவு, காதல் முறிந்துவிட்ட, அல்லது கருத்து வேறுபட்ட காதலர்களுக்கிடையேயானது. நிரந்தரமாகக்கூடியது. வேதனையைக் கொடுப்பது. வெறுப்பினை வளர்ப்பது.

இவற்றிலே முதலாவது வகை நெஞ்சிலே நீங்காத நினைவுகளோடு வாழ்வது. ஒருவர் மற்றவருக்காகவே வாழ்வதான உணர்வுகளோடு வாழ்வது. மட்டக்களப்பு நாட்டுப்பாடல்களிலே இத்தகைய சம்பவங்களைச் சித்தரிக்கும் பாடல்கள் அநேகம் உள்ளன.

கடலே இரையாதே
கற்கிணறே பொங்காதே
நிலவே எறியாதே - என்ர
நீலவண்டார் வருமளவும்

இந்தப் பாடல் ஒரு பெண் தனது கணவன் வீடு வந்து சேரும் வரை இயற்கையின் இன்பம் தரக்கூடிய நிகழ்வுகள்கூட நடைபெறுவதை விரும்பாதவளாய் இயற்கையிடம் வேண்டுகோள் விடுப்பதுபோல உள்ளது. தெளிந்த நிலவு ஒளிரும் சாமத்தில், தென்றல் வீசுகின்ற நேரத்தில், இரைகின்ற கடலின் ஓரத்தில், அவர்களது வீட்டு முற்றத்தில் இருவரும் அனுபவித்த இன்பம் அவளது இதயத்திலே இனிக்கும் நினைவுகளை எழுப்புகிறது. அதனால்தான், அவன் வீடுவந்து சேரும்வரை, வாடுகின்ற அவள் மனதில், இன்பத்தை நாடுகின்ற அந்த நினைவுகளை வெறுக்கின்றாள். அவற்றைத் தூண்டுகின்ற நிகழ்வுகளை நிறுத்தும்படி இயற்கையிடம் வேண்டுகின்றாள். அத்தோடு மட்டும் நின்றாளா? ஏன் என்று காரணத்தை விளக்கி அவள் மேலும் பாடுகின்றாள் இப்படி-

இரவிலே வீசும்
இளங்காற்றும் சந்திரனும்
அரவாத வாள்போல- இப்போ,
அறுக்குதே என் மனசை

தனது கணவன் தன்னருகே இருக்கும்போது எல்லையில்லா இன்பத்தைத் தந்த அந்த தென்றலும் நிலவும் இப்போது வாளினாலே அறுப்பதுபோலத் தன் மனதை அறுக்கின்றனவே. அதுவும் தீட்டப்படாத வாள் என்பதிலேயுள்ள கருத்துச் சுவை எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது?  கூரிய வாள் என்றால் ஒரே தடவையில் அறுத்துவிடும். வலி குறைவாக இருக்கும். கூர்மையற்ற, தீட்டப்படாத வாள் என்றால் சித்திரவதை அல்லவா செய்யும்? அதுபோலத்தான் இப்போது அந்தத் தென்றலும், நிலவும் அவளைச் சித்திரவதை செய்கின்றன என்று கூறுகின்றாள்.

வெளியூர் சென்றவன் வருவதற்குத் தாமதமாவதால் அவளால் தாங்கமுடியவில்லை. வருடத்தில் ஒருமுறைதான் நெற்பயிர் செய்யப்படுகின்ற ப+மியிலே, மழையை நம்பி வேளாண்மை செய்யும் விவசாயி, எப்போது மழைவருமோ என்றெண்ணி வானம் பார்த்துக் காத்திருப்பதைப்போல, தனது இரண்டு கண்களும் சோர்ந்துவிடுமளவிற்கு கணவனின் வரவுக்காகக் காத்திருக்கும் அவள் தன் உள்ளக்கிடக்கையைத் தோழியிடம் பாடலாக வெளிப்படுத்துகிறாள்-

ஒருபோக வேளாண்மைக்கு
உயர்வானைப் பார்ப்பதுபோல்
இருகண்ணும் சோர எந்தன்,
இராசாவைப் பார்த்திருக்கேன்

நீரின்றிக்;காய்ந்து கிடக்கும் நிலம் மழை வந்தால் நனைந்து வளம் பெற்றுப் பயிர் செழிக்கும். அது போல அவன் வந்தால் அவள் மனம் குளிர்ந்து இன்பம் கொழிக்கும். எவ்வளவு அருமையான உவமானத்தோடு இந்தப்பாடல் அமைந்திருக்கிறது! மேலும் சொல்கிறாள்-

வருவார் வருவாரென்று
வழிபார்த்திருந்து
குறிபார்த்த நெல்லுக்
குடமும் பயிராச்சே

ஆம். குறிபார்ப்பதற்காக வீட்டினுள்ளே வைத்திருந்த தண்ணீர் நிரம்பிய குடத்தின் அடியிலே ஆதாரமாகப் பரப்பிப் போடப்பட்டிருந்த நெல்மணிகள் முளைத்துப் பயிராக வளர்ந்தும் விட்டன. ஆனால் அவனோ இன்னும் வரவில்லை. அவளாலோ இனியும் தாங்க முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைக்க இப்படிப் பாடுகிறாள்-

வெள்ளி விடிவெள்ளி
வெள்ளாப்பில் மறையும் மட்டும்
சொன்ன கதையெல்லாம்
சொர்ப்பனமாய் மறந்தாரோ

வானத்திலே, நட்சத்திரங்கள் தோன்றும் மாலை நேரத்திலே இருந்து மறுநாள் அவை மறைகின்ற நேரம் வரை, விடியவிடியத் தன்னை இன்பத்திலே ஆழ்த்தி பேசிய
ஆசை வார்த்தைகளையெல்லாம் வெறும் கனவுபோல மறந்துவிட்டாரா தன்கணவர் என்ற அவளது பரிதவிப்பை எவ்வளவு எளிதாக உணர்த்துகிறது இந்தப்பாடல்.

இவ்வாறு அவள் கவலையோடு இருக்கும்போது, வீட்டுக் கொல்லைப் புறத்திலேயிருந்து காகம் ஒன்று கரைகிறது. காகம் அப்படிக் எத்தியெத்திக் கரைந்தால், வீட்டுக்கு யாரோ வரப்போகிறார்கள் என்று சொல்வார்கள். அவள் காகத்தைப்பார்த்துக் கேட்கிறாள்.-

காகம் இருந்து நீ
கால்கடுக்க ஏனழுதாய்
மன்னன் சேதியை நீ
மனங்குளிரச் சொல்லாமல் ?

நேற்றும் இந்தக் காகம் இப்படித்தான் கரைந்தது. யாரயாரோவெல்லாம் வந்தார்கள். தன் கணவன் மட்டும் வரவில்லை. காகத்தின் மீது கோபம் வருகிறது அவளுக்கு. அதைத் துரத்துகிறாள்.

கத்தாதே காகம்
கரையாதே புன்காகம்
எத்தாதே காகம்
எறிஞ்சிடுவேன் கல்லாலே.

காகத்தின் மீது அவளுக்கு இப்படிக் கோபம் வருவதற்குக் வேறெரு காரணமும் இருக்கிறது. நேற்று காகம் கரைந்தவுடன் கணவன் வரப்போகின்றான் என்று அவள் எவ்வளவோ ஆயத்தங்கள் செய்திருந்தாள்.

கோழியொன்றைப் பிடித்து அடைத்து வைத்திருந்தாள். அவன் வந்து அதை உரித்துத் தருவான். புpன்னர் அவன் குளிப்பதற்காக தண்ணீர் நிறைத்து வைத்திருந்தாள். அவன் குளித்துவிட்டு வருவதற்கிடையில் சமைத்து முடிக்கவேண்டுமே என்பதற்காக சமையலுக்கான இதர வேலைகளையெல்லாம் செய்து வைத்திருந்தாள். எல்லாம் வீணாகிவிட்டது. அவன் வரவேயில்லை. தன் ஆத்திரத்தைக் காக்கையைத் தவிர வேறு யாரிடம் காட்டமுடியும் ?  காகத்தைத்துரத்திவிட்டு தன்னந்தனியாகப் புலம்புகின்றாள்-

கோழி அடைச்சி வைச்சேன்
கொழியரிசி குத்திவைச்சேன்
தாழத் துலாத் தாழ்த்தி
தண்ணீர் நிறைச்சி வைச்சேன்
தேங்காய் துருவி வைச்சேன்
தேவைக்கு அரைச்சி வைச்சேன்
பாங்காய்ச் சமைப்பதற்குப்
பட்ட கஷ்டம் எவ்வளவோ.

இவ்வாறு கணவன்-மனைவியருக்கிடையேயான பிரிவுத்துயரை எடுத்தியம்பும் பாடல்கள் ஏராளமாக உள்ளன.
இனி, காதலர்களுக்கிடையே, மணம்முடிக்காத முறைமச்சான்-மச்சாள் உறவு உள்வர்களுக்கிடையே நிகழ்ந்த பிரிவுகளில் எழுந்த பாடல்களைக் கவனிப்போம்.

மச்சான் வீட்டுக்கு வந்தால் அவள் மனமெல்லாம் பூப்பூக்கும். ஒளிந்து நின்று அவனை ஓரக்கண்ணால் பார்ப்பதிலும், கனிந்த மொழியிலே அவனோடு கதைப்பதிலும் எத்தனை கோடி இன்பம் அவளுக்கு. வீட்டு முற்றத்திலே நின்று தன் சுற்றத்தோடு அவன் கதைத்துக்கொண்டிருக்கும்போது, அவன் கண்ணிலே தான் படவேண்டு;மே என்பதற்காக ஏதோ ஒரு சாக்கிலே கிணற்றடிக்குச் செல்வாள், கோழிக் குஞ்சுகளைக் கூவியழைத்துத் தீனி போடுவாள், கழுவிய ஆடைகளைக் காயப் போடுவதுபோல வெளியிலே செல்வாள். அவன் வீPட்டுக்கு வந்தபோது இப்படியெல்லாம் செய்யும் வண்ணம் மனதிலே மகிழ்ச்சி கூடியது. வீட்டைவிட்டுச் சென்றபோது சோகத்தில் மனம் வாடியது. அதனால் இப்படிப் பாடியது-

வாறனெண்டு வந்தால் இப்போ
வாசலெல்லாம் தங்க நிறம்
போறனெண்டு போனால் இப்போ
பூப்பூத்து மடிந்த விதம்

இந்தப் பாடல் இப்படியும் வழங்குகிறது-

வந்தாரெண்டா ஓரழகு
வாசலெல்லாம் தங்க நிறம்
போட்டுட்டுப் போனாரெண்டால்
பூப்பூத்து ஓய்ந்ததுபோல்

பெண்களின் முகத்தை நிலவுக்கு ஒப்பிடாத கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால் நாட்டுப்பாடலிலே ஓர் ஆணின் முகத்தை நிலவுக்கு ஒப்பிடுகிறாள் அவனது முறைப்பெண். அவன் வீதியிலே வரும்போது, வளவைச் சுற்றிவர மறைத்துக் கட்டியிருக்கும் வேலியில் ஏற்பட்ட சிதைவுகளால் வேலி ஆங்காங்கே உயர்ந்தும் தாழ்ந்தும் இருப்பதினாலும், வேலியில் நிற்கும் மரங்களின் இலைகுழைகளினாலும், அவனின் முகம் மறைவதும் தெரிவதுமாக - உயர்வதும் தாழ்வதுமாக இருக்கும். அது, நிலவு மெல்லமெல்ல மேலெழுந்து வருகின்றபோது அவ்வப்போது முகிலில் மறைவதும் வெளியில் தெரிவதுமாக இருக்குமே அதைப்போல அவளுக்கு இருக்கிறது. அந்த ஏக்கம் இப்படிப் பாடலாக வருகிறது-

நெற்றிக்கு நேரே
நிலாக்கிளம்பி வாறதுபோல்
வேலிக்கு மேலால மச்சான்ர,
வெள்ளைமுகம் காண்பதெப்போ ?

சோளம் விதைக்கும்போது அவன் சொல்லிவிட்டுப் போயிருந்தான் அது பயிராக வளர்வதற்கு முன்னர் நான் உன் முன்னால் வந்து நிற்பேன் என்று. ஆனால் சோளம் வளர்ந்து பயிராகியும் விட்டது. அவன் வந்து சேரவேயில்லை. கவலை ஒருபுறம், கோபம் மறுபுறம் அவளை வருத்தினாலும் மச்சானைக் குறைசொல்ல மனமில்லாமல் தன் சோகத்தை இப்படிச் சொல்கிறாள்-

சோழன் விதைக்கக்குள்ள
சொல்லிற்றுப் போனதுபோல்
சோழன் பயிராச்சே மச்சான் நீ,
சொன்னகதை பொய்யாச்சே

அவனை வழிமேல் விழி வைத்துப் பார்த்திருந்து அவளது கண்களும் பூத்துப்போயின. வுpரைவில் வருவேன் என்று சொல்லிப் போனவன் இன்னும் வரவில்லை. அவர் வருவதை நீயும் காணவில்லையா என்று நிலாவிடம் கேட்கிறாள்.

பார்த்த கண்ணும் பூத்துப்
பகலும் ஒரு நிலாவாரே
வார்த்தை சொல்லிப் போன என்ர
வண்டு வரக் காண்கிலையோ

தன்னை மலராகவும் தன் காதலனை அந்த மலரை நுகர்கின்ற வண்டாகவும் பாவனைசெய்து காதலி பாடுகின்ற இதுபோன்ற பாடல்கள் நிறையவே உண்டு.

நாளாக நாளாக அவளுக்கு நம்பிக்கை தளர்கிறது. தன்னையறியாமல் தவறேதும் செய்துவிட்டோமோ? அவன் வரவு தாமதிப்பதற்கு அதுதான் காரணமோ என்று மானம் கலங்குகிறது. வாய் புலம்புகிறது.

பொன்னெழுத்துக் கோப்பையிலே
பொரிச்ச கறி திண்ட மச்சான்
என்னைவிட்டுப் பிரிய நான்
என்ன குற்றம் செய்தேனோ?

அவன் இப்படி நீண்ட நாட்களாக தன்னை நினைத்தும் பார்க்காமல் இருக்கலாமா? தான் சிறுமியாக இருந்தபோது ஓடிப்பிடித்து விளையாடி, உள்ளம் நெருங்கி உறவாடி, கூடிக்கதைகள் பல பேசி தன் கூச்சமெல்லாம் போக்கியவன், இப்போது தன் கன்னிப் பருவத்தின்போது தன்னைக் கண்ணெடுத்தும் பாராமல் இருப்பதன் காரணமென்ன என்று ஓர் அப்பாவிபோலக் கேட்கிறாள்.

    குஞ்சிப் பயிரிலே
கூச்சம் தெளிவிச்ச மச்சான்
கதிரு குடலையிலே
கைபறிய விட்டதென்ன

குஞ்சிப்பயிர் என்பது அவளது சிறுபராயத்துக்கும், கதிருகுடலை என்று கதிர்விடுகின்ற - காய்க்கின்ற - பயிர் அவளின் கன்னிப்பருவத்திற்கும் எத்தனை அர்த்தங்களோடு உவமிக்கப்பட்டிருக்கிறது இந்தப்பாடலிலே!

பெண்கள் மட்டுமல்ல பிரிவினால் துயருறும் ஆண்களும் பாடிய பாடல்கள் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்களிலே ஏராளமாக உள்ளன.



சின்னஞ்சிறு வயதுமுதல் சேர்ந்து பழகி, பருவம் வந்தபின்னர் மணம்முடித்த முறைமச்சாளை தன் வேலை நிமிர்த்தமாகப் பிரிய நேரிட்ட ஒருத்தனின் ஓலம்போலல்லவா இது இருக்கிறது?

ஆசைக்கிளி வளர்த்து
அக்கரையில் கொண்டுவைத்துப்
பேசிப்பழகமுதல் அதை,
பிரிந்துவிட்டு வந்தேனே

அவளைக் கண்டு கன நாள் சென்றுவிட்டதால் இப்போதெல்லாம் சாப்பாடுகூட சரியாக்ச செமிப்பதாயில்லை அவனுக்கு.

கண்டுக்கிளியாரைக்
கண்டுகதை பேசாமல்
உண்ணுகிற சோறும்
உறங்கவில்லை இப்பொழுது

கண்டுக்கிளியைக்
கண்டுவெகு நாளானதினால்
உண்ணுகிற சோறு என்,
உடலிரே ஒட்டுதில்லை

இன்று, அவள் இல்லாமல் சாப்பாடு அவனுக்கு சமிக்கவில்லை. ஆனால் அன்று அவள் கொடுத்த சாப்பாடு இன்னும் மறக்கவில்லை.

அன்னப்பசுங்கிளியே நீ
ஆக்கிவைச்ச சோறுகறி
சூத்திரத்து நூல்போல
சுத்துதடி நாவினிலே

வயலிலே உழவுவேலை நடக்கிறது. கலப்பையினை இழுக்கும் காளைமாடு களைப்பினால் நடக்க மறுக்கிறது. அதை நடக்கவைத்து வயலை உழுவதற்கு அவன் படுகின்ற அவஸ்தை கொஞ்சநஞ்சமல்ல. அந்த நேரத்தில்கூட, அவித்த நெல்லைக் காயவைப்பதில் தனது மனைவி; கஷ்டப்படுவாளே என்ற கவலைதான் அவனது நெஞ்சிலே எழுகிறது.

நடவாக் கிடாமாடும்
நானும் இந்தப் பாடுபட்டால்
காயாப் புழுங்கலும் என்,
கண்மணியும் என்னபாடோ ?

இதே வேளை வீட்டிலேயுள்ள அவள் மனமோ வெயிலிலே நின்று வேலைசெய்யும் கணவனை நினைத்து வெதும்புகிறது.

பொழுது கிளம்பிப்
பூமி இந்தச் சூடு சுட்டால்
தட்டாத் தரையில் அவர்
தங்கமேனி எப்படியோ

ழூழூழூழூ    ழூழூழூழூ    ழூழூழூழூ

அவன் வெளியூர் சென்றிருந்ததால் ஒருவரையொருவர் காணாது தவித்துக்கொண்டிருந்த மச்சானும் மச்சாளும் நீண்டநாட்களுக்குப் பின்னர் முதன்முதலாகச் சந்திக்க நேரும்போது எப்படியிருக்கும்? மனது துடிக்கும். கண்கள் பனிக்கும். வார்த்தை வெடிக்கும். அந்த நிலையில் அவன் பாடும் பாடல் எப்படியிருக்கும்?

மூணுநாள் மட்டிலேயும்
மூலையிலே வந்து நின்று
மண்ணால் எறிஞ்சேன் உன்ர
மனசறிய வேண்டுமென்று

ஓ.. வந்து மூன்று நாட்களாகிவிட்டதா? தன்னைப்பார்க்க அவன் வந்திருந்தும் தன் கண்ணில் படவில்லையே என்று துக்கமும், அதற்காகவே அவனோடு ஒருவித கோபமும் வருகிறது அவளுக்கு. தன் துக்கத்தை நையாண்டியோடு வெளிப்படுத்துகிறாள்.

கல்லால் எறிஞ்சால் மச்சான்
காயம் வரும் என்று சொல்லி
மண்ணால் எறிஞ்சி மச்சான்
மச்சிமுறை கொண்டாடுறார்
அவனுக்கு அவளின் துக்கமும் தெரிகிறது. நக்கலும் புரிகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் சரணாகதியொன்றே சரியான வழி என்று இப்படிப் பாடுகிறான்-

மண்ணால் எறியவில்லை மச்சி என்னை
மாறாக எண்ணாதே
மருதாணிதானும் மச்சி உன்
மலர்மேனி தாங்காதே

அவ்வளவு மென்மையானவள் நீ என்று சொல்லி அவள் மனதைக் குளிரவைத்து மேலும் சொல்கிறான்-

பூவையரே மச்சி
பொரிச்சரிசி நிறத்தாளே உந்தன்
சிரிச்ச முகம் காணாமல்
தியங்கித் தவித்தேனே

இப்படி அவன் சொன்னதும் இமயத்தின் உச்சியிலிருந்து தடாலென்று அடிவாரத்திலே விழுந்ததுபோல எல்லாம் மறந்தாள். அவனது அன்பிலே நனைந்தாள. பாடல் புனைந்தாள்.

நன்றாகச் சொன்னீர்கள்
நான் பட்ட கயிற்றமெல்லாம்
ஒன்றா இரண்டா நான்
உங்களுக்குச் சொல்லிவிட

இப்படிச் சொல்லும்போது அவள் கண்கள் கலங்குகின்றன. கண்ணீர்த் துளிகள் விழுவோமா இருப்போமா என்று தளம்புகின்றன. அவனது கைகளோ  அவளை அணைப்போமா, கண்ணீரைத் துடைப்போமா என்று தயங்குகின்றன. இனியும் அவளை இப்படிக் கலங்க விடலாமா ? அதனால், சம்மத்ததைச் சொல்லிவிடு. தாலிகட்டப் பெண்கேட்டுத் தூது அனுப்புகிறேன் என்று ஆறுதல் வார்த்தை கூறுகிறான்.

காசி தரட்டோ மச்சி
கதைச்சிருக்க நான் வரட்டோ
    தூது வரக்காட்டிடட்டோ - இப்போ
சொல்கிளியே வாய்திறந்து

திடீரென்று இப்படிக் கேட்டதும் அவள் திகைத்துவிட்டாள். அவனைக் கவலைப்படுத்திவிட்டோமே என்று பதைத்துவிட்டாள். அதனால் பதிலொன்றை உடனே இப்படி விட்டாள்.

கலங்காத மச்சான்
காசுபணம் என்ன செய்யும்
குலைபோட்ட வாழைமரம்
கூடுமெண்டாச் சம்மதந்தான்
குலைபோட்ட வாழைமரம் - அதாவது - பலபிள்ளைகளைப் பெற்ற தனது தாய் சரியென்று சொல்லிவிட்டால் தனக்குச் சம்மதந்தான் என்று சொல்லி இவ்வளவு நேரமும் அவனை உபசரிக்காமலே இருந்துவிட்டோமேயென்று உடனேயே சாப்பிட அழைக்கிறாள்.

பாலால் அரிசரித்துப்
பன்னீரால் உலை வாத்துவைத்து
நெய்யால் கறி சமைத்தேன்
என்ர நேசக்கிளி சாப்பிடுங்கோ

இப்போது சோகம் மறைந்து சுமுக நிலை திரும்பிவிட்டதல்லவா? எனவே வழமையான நையாண்டியுடன் அவன் பதிலாகப் பாடுகின்றான்.

வாழைக்காய் மந்தம்
வழுதிலய்காய் சிறு கிரந்தி
கீரையோ வாதம் என்ர
கிளிமொழிக்கு என்ன கறி?

அதற்குப் பதிலாக அவள் என்னென்ன சாப்பாடு இருக்கிறது என்று சொல்லி, கடைசியில் கிரந்தி என்று அவன் சொன்ன வழுதிலங்காய் (கத்தரிக்காய்) சுண்டலும் இருக்கிறது என்று நையாண்டிக்கு நையாண்டியாகச் சொல்கிறாள்.

அரிசி சமைச்சிருக்கு
ஆட்டிறைச்சி ஆக்கிருக்கு
வடிவாய்ப் பொரிச்சிருக்கு
வழுதிலங்காய் சுண்டிருக்கு

ழூழூழூழூ    ழூழூழூழூ    ழூழூழூழூ


சாப்பிட்டு முடிந்ததும் முற்றத்தில் கதைத்துக்கொண்டு இருக்கிறார்கள். மற்றவர்களும் வீட்டிலே இருப்பதால் சற்றுத் தள்ளித்தள்ளியே அமர்ந்திருக்கிறார்கள்.

அளவான நிலவு, இதமான தென்றல், அழகான மச்சாள் பக்கத்தில், தனியாக அவனோடு முற்றத்தில்.. .. ஒரு விதமான உணர்வு புதிதாக எழுந்தது அவன் நெஞ்சத்தில்!

குறுக்கால் பிளந்த
கொவ்வைப் பழமொன்றை
நறுக்கென்று கடித்துண்ண
நான் கனவு கண்டேனே

கனவிலே அவளை முத்தமிட்டதாகக்கூறி, அப்போதைய தன் ஆசையை இப்படி நாகரிகமாக, நாசூக்காகக் கூறுகின்றான்.

சட்டென்று அவள் பதில் கூறுகிறாள். காலம் வரட்டும் அப்போதுதான் உன் கைக்கு எட்டுவேன் என்பதுபோல-

மச்சானே மாம்பழமே
மாமிபெத்த ஓவியமே
எட்டாத பழத்திற்கு நீ
கொட்டாவி விட்டதென்ன?

இவ்வாறு பகிடியாகப் பாடிவிட்டு அவள் உடனே கிளுக் என்று சிரித்துவிடுகிறாள் - அடக்கமுடியாமல். அந்தச் சிரிப்பை அவள் பச்சைக்கொடி காட்டுகிறாள் என்றெண்ணி அருகேவா என்று அழைக்கிறான். எப்படி?

அக்கரையில் கொக்கே
அணில்கோதா மாம்பழமே
இக்கரைக்கு வந்தியெண்டா
ஒரு இனித்தகனி நான் தருவேன்

முற்றத்திலே இருவரும் ஒருவரோடெருவர் கதைக்கும் தூரத்தில்தான் இருக்கிறார்கள். அதுவே அவனுக்கு அதிக தூரம்போல இருக்கிறது. அதனால்தான் அக்கரையில் இருக்கிறாய் என்று அவள் இருக்கும் தூரத்தை அதிகப்படுத்திக் காட்டுகிறான். அவள் தன்னோடு நெருங்கி அமரவில்லையே என்று குத்திக்காட்டுவது அதன் நோக்கம்.

ஆசை அவளுக்கும் இருக்கிறது. ஆனால் பண்பாடு தடுக்கிறது. தாலி ஏறும் வரை தள்ளியே பழகுவதுதானே பண்பாடும் பாதுகாப்பும்? அதனால்,

ஓருசாண் மெத்தையில
ஒண்ணரைச்சாண் பலகையில
தள்ளிப்படு மச்சான்
ஒரு சொல்லுக்கிடம் வையாமல்

என்றுசொல்லி, வெளியே திண்ணையிலே கட்டில் இருக்கிறது உங்களுக்கு. தப்பாக மற்றவர்கள் கதைக்க இடந் தராமல் தள்ளியே இருப்போம் என்று முற்றுப்புள்ளி வைத்தாள் அவனது ஆசைக்கு - தற்காலிகமாக.

No comments: