மஹாத்மா பாதம் பட்ட மண் -சிறுகதை -ஏ.ஏ.ஹெச்.கே.கோரி


.

தாத்தா, ஒங்களுக்கு ஒரு கவர் வந்திருக்கு என்று ஓட்டமாய் ஓடி வந்தான் கொள்ளுப் பேரன்.  உறையை வாங்கிப் பிரித்துப் பார்த்த பெரிய தாத்தாவுக்குக் கண்கள் அகலமாய் விரிந்தன.

உள்ளே ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு.  புத்தம் புதிய சலவை நோட்டு.

ஒங்ககிட்டக் காட்ட வேண்டாம்னு இருந்தேன். இந்த முந்திரிக் கொட்டப்பய கவரத் தூக்கிட்டு ஓடி வந்துட்டான் தாத்தா என்று பின்னாலேயே வந்த பேரனிடம், “கவர்மேல என்னோட பேர் எழுதியிருக்கு, அத ஏன் என் கிட்டக் காட்டக் கூடாதுன்னு இருந்தே?’ என்று புதிர்மயமானார் தாத்தா.

“ஆமா, என்னடா உள்ளே ரூவா நோட்டு இருக்கு, ஒண்ணும் புரியலியே?’’

அடுத்த வாரம் எலக்ஷன் வருதுல்ல தாத்தா, வோட்டுப் போடறதுக்கு ரூவா தர்றாங்களாம். வீடுவீடாப் போய்த் தர்றாங்களாம்.

“யாரு தர்றாகளாம்?’’................

“வூட்டுக்கு ஐநூறுன்னா,  தொகுதிப் பூராக் குடுக்கறதுன்னா, கோடிக் கணக்குல பணம் செலவாகுமேடா...’’

தப்பு தாத்தா, வூட்டுக்கு ஐநூறு இல்ல.

“அப்ப?’’


வோட்டுக்கு ஐநூறாம்.

“அடப் பாவி மக்கா!’’

“நம்ம வூட்ல மூணு வோட்டு. தனித்தனியாப் பேர் எழுதி மூணு கவர் வந்திருக்கு. எல்லாம் இப்பத்தான் அச்சடிச்சி வந்த மாதிரி சுடச்சுட ஐநூறு ரூவாத் தாள் தாத்தா.

“ஹ்ம். ஒரு வோட்டுக்கு லஞ்சம் ஐநூறு ரூவாயா!’’

“லஞ்சம் தான் தாத்தா, ஆனா ஐநூறு இல்ல. ஆயிரம்!’’

“என்ன பேராண்டி கொழப்புற?’’

“கொழப்பல தாத்தா, இன்னிக்குக் குடுத்த ஐநூறு மொதத் தவணையாம். தேர்தலுக்கு முந்தின நாள் இதே மாதிரி இன்னொரு ஐநூறு வருமாம்!’’

“வோட்டுக்கு ஆயிரம்னா, இந்தத் தொகுதியில மொத்தப் பேருக்கும் குடுக்கறதா வச்சிக்கிட்டா அம்பது கோடி ஆச்சேடா!’’

“இருக்கப்பட்டவன் வாரி வழங்கறான்.

அவன் அப்பன் வூட்டுக் காசையா வாரி வழங்கறான்? பாவப் பணம்டா பேராண்டி அது. அத நாம கை நீட்டி வாங்கினோம்னா அந்தப் பாவம் நம்மளையும் ஒட்டிக்கும்.

“அப்ப தேர்தலுக்கு முந்தின நாள் தர்ற கவர்கள வாங்க வேண்டாம்னு சொல்றீங்களா தாத்தா?’’

இன்னிக்கி வாங்கின கவர்களயும் அவனுங்க மூஞ்சியில விட்டெறியணும்டாங்கறேன்.

ஐயோ, அது ஆபத்து தாத்தா. அவனுங்க ரவுடிப் பசங்க. அவனுங்கள மொறச்சிக்கிட்டோம்னா நம்மள ஒரு வழி பண்ணிருவானுங்க.

நாம எல்லாம் மஹாத்மா பரம்பரைடா பேராண்டி. அடாவடிக்கு அடிபணியக் கூடாது. அராஜகத்துக்கு பயப்படக் கூடாது, லஞ்சங் குடுத்து வோட்டு வாங்கற தேசத் துரோகிகளுக்குத் துணைபோகக் கூடாது, அவனுங்களோட பாவச் செயல்கள்ள நாமளும் பங்குதாரர்களாயிரக் கூடாது.

நீங்க சொல்றதெல்லாம் நியாயந்தான் தாத்தா. ஆனா இவனுங்க கையில தான் இன்னிக்கி ஊரே இருக்கு.  இவனுங்கட்ட நாமல்லாம் மோதவே முடியாது.

“ஒனக்கு பயமா இருந்தா, அவனுங்க வர்றப்ப என்னக் கூட்டிக்கிட்டுப் போய் வாசல்ல வுடு. நா பேசிக்கிறேன்.’’

படுக்கையிலிருந்து கொஞ்சம் எம்பி, நரைத்த மீசையை முறுக்கி விட்டுக் கொண்ட பெரிய தாத்தாவின் பக்கவாட்டில் ஒரு சின்னக்குரல் பெரிசாய் ஒலித்தது.

“நீங்க வேண்டாம் தாத்தா, நானே பேசிக்கறேன் அவங்க கிட்டே...!’’

சபாஷ்டா என்று அவனை இழுத்துக் கட்டிக் கொண்டார் தாத்தா.

“நீ தாண்டா எனக்கு உண்மையான வாரிசு. வா வா, ஒனக்கு  தாத்தா ஒரு கத சொல்றேன். இந்தக் கட்டிலுக்கு அடியில ஒரு தகரப் பெட்டி இருக்கு பார், அத வெளியில இழுத்துத் தொற. பெட்டிக்குள்ள மேலாப்ல ஒரு ஃபோட்டோ இருக்கும் பார், அத எடு.’’

பெட்டியைத் திறந்து கொள்ளுப் பேரன் அந்தப் புராதன கருப்பு வெள்ளைப் புகைப் படத்தைப் பார்த்து முகம் மலர்ந்தான்.

“ஹை, இந்த ஃபோட்டாவுல நா இருக்கேன். தாத்தா!’’

அது நீ இல்லடா கொள்ளுப் பேராண்டி, அது தான் நா. ஒன்னோட கொள்ளுத் தாத்தா.

“நீங்களா தாத்தா? என்ன மாதிரியே இருக்கீங்க!’’

“ஆமாண்டா என் ராசா.   தாத்தா ஒன்ன மாதிரியே இருக்கேன்ல? சரி, ஃபோட்டோல இருக்கற இந்தத் தாத்தா யார்னு தெரியுதா ஒனக்கு?’’

“இது ஒங்க பெரிய தாத்தாவா?’’

“இவர் இந்த தேசத்துக்கே பெரிய தாத்தாடா. ஏன், இந்த ஒலகத்துக்கே இவர் பெரிய தாத்தா.!’’

“ஓ, மஹாத்மா காந்தியா! நெஜம்மாவே காந்தித் தாத்தாவ நீங்க பாத்தீங்களா தாத்தா?’’

“பாக்கறதாவது? அந்த மகானோட காலத்தொட்டுக் கண்ல ஒத்திக்கிட்டேண்டா கொள்ளுப் பேராண்டி!’’

“எந்த ஊர்ல பெரிய தாத்தா? டில்லியா?’’
“நா எங்கடா டில்லிக்கிப் போனேன்? அந்த மஹாத்மா வந்தார்டா என்னத் தேடி! கொள்ளுப் பேராண்டி, நீ நம்ம ஊர் ரயில்வே ஸ்டே‘ன்ல ஒரு கல்வெட்டு வச்சிருக்காங்களே பாத்திருக்கியோ?”

“என்னக் கல்வெட்டு பெரிய தாத்தா?’’

“நீ பாத்திருக்க மாட்ட, அடுத்த தடவ ஒங்கப்பங்கூட ஸ்டேஷனுக்குப் போறப்ப ஞாபகமாப் பாரு.  ஸ்டேஷனுக்குள்ள நொழஞ்சவொடன இடது கைப்பக்கம் வச்சிருக்கு.  1921 இல மஹாத்மா காந்தி நம்ம ஊருக்கு வந்ததப் பத்தி அந்தக் கல்வெட்ல எழுதியிருக்கு. கொள்ளுப் பேராண்டி, இப்ப ஒனக்கு என்ன வயசு?”

பத்து வயசு,  தாத்தா.

“1921 இல மஹாத்மா காந்தி இந்த மதுரக்கி வந்தப்ப எனக்கு ஒன்னோட வயசு தான். பத்து வயசு. இதே மதுரயில வச்சுத்தான் மஹாத்மா காந்தி தன்னோட உடுப்புகளைக் கழட்டி எறிஞ்சிட்டு ஒரு நாலு முழத்துண்ட உடுக்க ஆரம்பிச்சார். மஹாத்மாவுக்கே மனமாற்றத்த ஏற்படுத்தின புனிதமான ஊரப்பா இந்த மதுர. இந்த அருமையான மதுரயில இப்ப அடாவடித் தனம் பெருகிப் போச்சு, லஞ்சங் குடுத்து வோட்டு வாங்கற அளவுக்கு லஞ்சம் மலிலிஞ்சு போச்சு. அரசாங்க ஆஃபீஸ்கள் மட்டும் சீரழிச்சிட்டிருந்த லஞ்சம் இப்ப வீடுகளுக்கும் வந்திருக்கு. காந்திகள் குடியிருக்கற இந்த வூட்டுக்குள்ளேயும் லஞ்சம் புகுந்திருச்சேய்யா!’’

“காந்திகள் குடியிருக்கிற வீடா! நா ஒர்த்தன் தானே பெரிய தாத்தா இந்த வூட்ல காந்தி!’’

“மஹாத்மா காந்தியோட முழுப்பேர் என்ன தெரியுமா ஒனக்கு? மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி. மஹாத்மாவோட மொதல் பேரத்தான் நா என்னோட மகனுக்கு வச்சேன். அதாவது ஒன்னோட தாத்தாவுக்கு. மோஹன்தாஸ். 1946ல மஹாத்மா மறுபடியும் மதுரக்கி வந்தப்ப, சொல்லி வச்சாப்ல மோஹன்தாஸ்க்குப் பத்து வயசு. மஹாத்மாவப் பாக்க நா மோஹன்தாஸக் கூட்டிட்டுப் போனேன். மீனாட்சி அம்மன் கோவில்ல வச்சி மஹாத்மாவ மனசார தரிசிச்சோம். அப்பறம் மோஹன்தாஸ்க்குக் கல்யாணம் ஆகி ஒங்கப்பன் பொறந்தப்ப அவனுக்குக் கரம்சந்த்னு பேர் வச்சேன். கரம்சந்த்க்குக் கல்யாணமாகிக் குட்டிப்பயலே, நீ பொறந்தப்ப ஒனக்கு காந்தின்னு பேர் வச்சேன். ஆகையினால, மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி முழுசா வாழந்த வூடுடா இது.

“மோஹன்தாஸ் தாத்தாவப் பாத்த ஞாபகமே எனக்கு இல்ல பெரிய தாத்தா.’’

“அவன் குடுத்து வச்சவன், போய்ச் சேந்துட்டான். அவன் இப்ப இருந்திருந்தா, அவங் கையிலயும் ஒரு லஞ்சக் கவரக் குடுத்து அவனயும் களங்கப் படுத்தியிருப்பாங்க. இந்தப் பாவப் பணத்தக் தீண்டக் கூடாதுன்னு தான் சீக்கிரமா அவன் போய்ட்டான் போல. நாந்தான் பாவி தொண்ணுத்தியெட்டு வயசு வரக்யும் உசிரோட இருந்து இந்த அசிங்கத்தையெல்லாம் பாக்கணும்ணு விதிச்சிருக்கு.’’

“தாத்தா, தாத்தா, இன்னும் ரெண்டே வருஷத்துல நீங்க செஞ்ச்சுரி அடிக்கப் போறீங்க பெரிய தாத்தா!’’

“அதுக்கு முந்தி நா போய்ச் சேந்துட்டா நல்லாயிருக்குமேடா கொள்ளுப் பேராண்டி. இந்த லஞ்சப் பணத்தத் தீண்டறதுக்கு முந்தி நா செத்துப் போயிருந்தா எவ்ளோ புண்ணியமாப் போயிருக்கும். நா இதத் தீண்டிட்டேனேடா காந்தி. கரை சேர்ற காலத்ல என் வாழ்க்கையில ஒரு கறைபட்டுப் போச்சே!’’

சோர்ந்து போய்ப் பெரிய தாத்தா கண்களை மூடியபடிப் படுத்துக் கொண்டார். அவருடைய விழியோரங்களில் ஈரக்கசிவு.

குற்றவுணர்ச்சியோடு அவருடைய கட்டிலை நெருங்கிக் கரம்சந்த் அவருடைய காதோரம் குனிந்து, இந்த மூணு கவரையும் திருப்பிக் குடுத்துர்றேன் தாத்தா’ என்று முணுமுணுத்ததை அவர் காதில் வாங்கிக் கொண்டாரா என்று தெரியவில்லை.

தேர்தலுக்கு முந்திய நாள் பரபரப்பாய் விடிந்தது.

எட்டு மணி சுமாருக்கு வீட்டுக்கதவு தட்டப்பட்டபோது, மேற்படி நபர்கள் கரன்ஸிக் கவர்களோடு வந்துவிட்டார்கள் என்று உணரப்பட்டது.

அப்பா அம்மா, நீங்க ரெண்டு பேரும் இருங்க, நா போய்க் கதவத் தொறக்கிறேன்’ என்று கதவுக்கு ஓடினான் காந்தி.
கதவைத் திறந்தால், எதிர்பார்த்த மாதிரியே அங்கே கட்சிக்காரர்கள்.
அன்றைக்கு வந்த அதே முகங்கள்.

“அப்பா அம்மா இல்லியா தம்பி?’ என்று விசாரித்தக் குழுத் தலைவனுக்கு விறைப்பாய் பதில் சொன்னான் காந்தி.

“இருக்காங்க, ஆனா இன்னிக்கி நாந்தான் ஒங்க கிட்டே பேசப்போறேன்.’’

“அடிசக்க, சாரு யாரு?.’’

“காந்தி.’’

“ராகுல் காந்தியா, வருண் காந்தியா?.’’

“ஒரிஜினல் காந்தி. ஒங்கப் பேர் என்ன?.’’

“ஓம்ப்பேர் காந்தின்னா எம்ப்பேரு நேருன்னு வச்சிக்கிருவோம்.’’

“ஏன், கோட்சேன்னு வச்சிக்கிருவோமே?.’’

“இந்தாப்பா ஒரிஜினல் காந்தி, வூட்ல பெரியவங்க இருந்தாக் கூப்புடு. நாங்க இன்னும் முன்னூத்திச் சொச்சம் வூடுகளுக்குப் படையெடுக்கணும். கவர்களக் குடுத்துப்புட்டு நாங்க கௌம்பறோம்.’’

“ஒங்கக் கவர்கள நீங்களே வச்சிக்கிருங்க. ஒங்க கிட்டக் கை நீட்டி அந்தப் பாவப் பணத்த வாங்கக் கூடாதுன்னு எங்க பெரிய தாத்தா உத்தரவு. நீங்க அன்னிக்கிக் குடுத்த கவர்களயும் ஒங்க மூஞ்சில விட்டெறியப் போறார் எங்கப்பா.’’

கவர் வழங்க வந்தத் தொண்டர் படையில் சலசலப்புத் தெரிந்தது.

“அண்ணே, பையன் ரொம்பப் பேசறானே, ஒரு கவனிப்பு கவனிச்சிருவோமா என்று ஒருவன் முன்வர,’’ சீ, வேண்டாம்ப்பு சின்னப் பய மேல கைய வச்சா நமக்குத்தான் கவுரவக் கொறச்சல் என்று தலைவன் அவனைத் தடுத்துக் கொண்டிருந்த போது, கதவு மறைவிலிருந்து வெளிப்பட்டான் கரம்சந்த்.

“தம்பி தம்பி, சின்னப் பையன் ஏதோ பேசிப்புட்டான் அதப் பெரிசு பண்ணாதீங்க. விஷயம் என்னான்னா, 98 வயசுத் தாத்தா ஒருத்தர் வூட்ல இருக்கார்.’’

எனக்குத் தாத்தா, இவனுக்குக் கொள்ளுத் தாத்தா.  “காந்தி, நீ சும்மாயிரு அப்பா பேசிட்டிருக்கேன்ல?’’

“அண்ணே, பையனக் கொஞ்சம் அடக்கி வையிங்க. நாங்க கொஞ்சம் வெவகாரமான ஆட்கள். ஒரு டைப்பான தீவிரவாதிங்க.

“ஐயோ, ஒங்களப்பத்தி எனக்குத் தெரியாதா தம்பி? இப்பப் பிரச்சனை என்னான்னா, எங்க தாத்தா இருக்காரே, அவரும் கொஞ்சம் தீவிரவாதி தான். தாத்தா காந்தியத்துல தீவிரவாதி.’’

“அப்ப, தர்ம ஞாயம், நேர்மை, நாணயம் எங்களுக்குத் கெடையாதுங்கறிங்களா?’’

“அப்படிச் சொல்லுவேனா? ஆனா எங்கத் தாத்தாவுக்கு காந்திய வெறி கொஞ்சம் தூக்கலாயிருக்கு. அதனால, வோட்டுப் போடப் பணம் வாங்கக் கூடாது, அன்னிக்கி வாங்கின கவர்களயும் திருப்பிக் குடுத்துரணும்னு பிடிவாதமா இருக்காரு.  இந்த வூட்ல எங்கத் தாத்தா வச்சதுதான் சட்டம். ஆனா தம்பி, எங்க வூட்டு மூணு வோட்டும் ஒங்கக் கச்சிக்கித் தான். அதுல சந்தேகமேயில்ல.’’

அதனால தம்பி, பெரிய மனசு பண்ணி இந்தக் கவர்கள நீங்க வாங்கிக் கிட்டிங்கன்னா எங்களுக்கு மனசு திருப்தியாயிருக்கும். ஒங்களுக்கும் காசு மிச்சமாகும்.

“ஆமா, இந்த மூவாயிர ரூவா பிச்சக் காச மிச்சம் பண்ணித்தான் எங்க அண்ணன் அரண்மன கட்டப் போறாராக்கும்!

ஆனா, எங்களுக்கு இது பிரியாணிச் செலவுக்கு, டாஸ்மாக் செலவுக்கு ஆகும். சரி, கவரக் குடுங்க ஆனா வெளிய மூச்சு விடப்படாது. ஒங்கக் கணக்குல மூவாயிரம் ரூவா எழுதியாச்சு.

ஆனா, ஒண்ண மறந்துராதீங்கண்ணே, காசு தான் வாங்கலியே, வோட்ட மாத்திப் போட்ருவோம்னு மெத்தனமா இருந்திகளோ அப்பறம் நடக்கறதே வேற.

“தம்பி! நாங்க மாத்திப் போட மாட்டோம். நீங்க கௌம்புங்க.’’ அவர்கள் கிளம்பினார்கள்.  சில அடிகள் தள்ளி நின்று தங்களுக்குள் ஏதோ கலந்து பேசிய பிறகு திரும்பவும் கரம்சந்திடம் வந்தார்கள்.

“அண்ணே, எங்களுக்கு நம்பிக்கையில்ல’’ என்று ஆரம்பித்தான் தலைவன்.

“தேர்தல் நேரத்துல ஒங்களயெல்லாம் கண்காணிச்சிட்டிருக்கவும் முடியாது, அதனால ஒங்களுக்கு ஒரு சலுகை தர்றோம். நீங்க மூணு பேரும் நாளக்கி வோட்டுப் போடப் போக வேண்டாம். வூட்லயே டிவி பாத்துக்கிட்டு ஒக்காந்திருங்க. ஒங்க மூணு வோட்டையும் நாங்களே போட ஏற்பாடு பண்ணிர்றோம். என்ன, சரிதானா?’’

“சரி தான் தம்பி. அப்படியே பண்ணிருங்க.’’ தேர்தல் நாள் வந்தது.  தேர்தல் முடிவுகளும் வந்தன-.   நோட்டில் காணும் காந்தியின் கள்ளமில்லாச் சிரிப்பு அந்த நகரெங்கும்  விரிந்து வியாபித்து இருந்தது.    யாரோ அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் இருப்பதாக அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.

மஹாத்மா பாதம் பட்ட அந்த மண்ணின் மைந்தர்கள் பரிதாபமாகத் தோற்றுக் கொண்டிருந்தார்கள்.

மேசையின் மீது கிடந்த அந்தப் பழைய படத்தை மீண்டும் பத்திரமாகப் பெட்டியில் எடுத்து வைக்கச் சொல்லி உறங்கப்போனார் தாத்தா

நன்றி:vadakkuvaasal

1 comment:

kalai said...

தமிழகத்து கலைஞரின் திமுக அரசு ஊழல் செய்து தனது குடும்பத்தின் வருவாயைப் பெருக்கியது. எதிர்ப்பு வர வன்னி அவலம் நடைபெற்ற போது 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விழகப்போவதாக நாடகம் ஆடி மக்களை ஏமாற்றியது. திருமங்கலம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சனநாயகம் தோற்று பணநாயம் வென்றது. இதே போல தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பணம் கொடுத்தால் , ஒரு ரூபாய்க்கு அரிசி, இலவசத்தொலைக்காட்சி கொடுத்தால் வெற்றி பெறலாம் என நினைத்தது. ஆனால் நடந்தது- இதனை அழகாக இக்கதை விளக்கியிருந்தது.