எனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்


.
எனது இலங்கைப் பயணம் - பகுதி 10


முல்லைத்தீவு நகருக்கு செல்லும்போது முல்லைத்தீவு மாவட்டச்செயலகம் கண்ணில் பட்டது. கட்டிட அழிவுகள் திருத்தப்பட்டு செயலாற்றிக்கொண்டிருக்கிறது. அதற்கு அண்மையில் இராணுவ முகாம்கள் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களில் காணப்படுகிறது. வீடுகள் கடைகள் என்பன உடைந்து சிதைந்து காணப்படும்போது இந்த இராணுவ முகாம்கள் குவாட்டஸ் என்பன புதிய பொலிவோடு காட்சி தருகின்றன. அதை அடுத்து பெரிய காணியில் விளையாட்டுத் திடல்; காணப்படுகின்றது அதில் இராணுவத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கூடைப்பந்து விளையாடிக்கொண்டிருக்கின்றார்கள்.
முல்லைத்தீவு நகரம் இழவுநிகழ்ந்த வீட்டைப்போல் காட்கியளிக்கின்றது. கடைகள் அவசர அவசரமாக கட்டப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுகின்றது.





அழிந்த ஒரு பிரதேசம் மீளக்கட்டி எழுப்பப் படும்போது மேற்கொள்ளப் படுகின்ற வடிகால் அமைப்போ நகர அமைப்போ அல்லது வர்த்தக வடிவமைப்போ எதுவுமின்றி தாங்களாகவே மீளக்கட்டிய ஒரு சுவரும் கூரையும் கொண்ட கடைத் தொகுதிகளைத்தான் காணமுடிகிறது. அரசும் அரச இயந்திரமும் அரசியல் வாதிகளும் தூங்கிக் கொண்டிருக்கின்றார்களா?  என்மனம் கேள்வியொன்றினை முன்வைத்தது. போரால் முற்றாக சிதைந்த யேர்மன் நாடு ஜப்பான் என்பவை கிராமங்களில் கூட திட்டமிட்ட கிராம அமைப்பை செய்துகொண்டது. ஆனால் மீளக் கட்டப்படும் எம் பிரதேசங்களில் மட்டும் பெட்டிபோன்ற ஒரு கட்டிடம் மட்டும்தான் கட்டப்படுகின்றது. தெருக்கள் குண்டும் குளியும் சேறும் சகதியுமாகவே காட்சிப் பொருளாய் கிடக்கிறது.



மீனவர்கள் வாழும் பிதேசத்திற்கு சென்றபோது வள்ளங்கள் கரைக்கு இழுத்துவிடப்பட்டுக் கிடந்தன. தொழில் முடித்து வந்த தொழிலாளிகளில் சிலர் மரங்களுக்கு கீழிருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள். கடற்கரையோரமாக முள்ளுக்கம்பிகள் சுருளாகப் போடப்பட்டு 300 மீற்றர் இடைவெளியில் இராணுவம் காவல் புரிந்தது. சற்றுத்தள்ளி ஒரு தெருவளைவும் புதிய கட்டிடமும் தென்பட அங்கே சென்றேன். சாரம் அணிந்த சில இளைஞர்கள் வெறும் மேலுடன் படுத்திருந்தார்கள். சுனாமியால் காவுகொள்ளப்பட்ட மக்களின் நினைவாக அவை கட்டப்பட்டிருப்பதாக கூறினார்கள். "யேசுவே என்று மீன்பிடிப்பதில் எந்தத் தடையும் இப்போது இல்லை" என்றான் ஒருவன். "வீடுகள் எல்லாம் உடைந்து கிடக்கிறதே எப்படி சமாளிக்கின்றீர்கள்" என்று கேட்டேன். "எங்களுக்கு சில வள்ளங்களும் வலையளையும் உதவி அமைப்புக்கள் தந்திருக்கினம். எங்களுக்கு என்னம் கொஞ்சம் வள்ளங்களும் வலையளும் கிடைச்சாலே போதும் நாங்க எங்கட தேவையெல்லாத்தையும் பாத்துக்கொள்ளுவம். உவங்கள் போட்டுத்தாற இந்த கொட்டிலுக்குள்ள படுக்கேலுமே இப்பபாருங்க நாங்க இங்கதான் வந்து படுத்திருக்கிறம் ஆனால் பொடி பெட்டையள் படுக்கேலுமே? நாங்க கடலாச்சியட்ட போறத்த மறிக்காம விட்டாங்களெண்டா வீடென்னய்யா மாடியே கட்டிப்போடுவம். ஆனா எத்தின நாளைக்கு இப்படி விடுவாங்களெண்டு யோசினயாயும் இருக்கு". இப்படி அதில் படுத்திருந்த ஒரு நடுத்தர வயதினர் கூறுகின்றார்.அவரை தடுப்பது போல் ஒருவன் " இனி ஒண்டும் நடக்காது பேசாம கிட, பட்ட கஸ்டத்த விட இனி ஒரு கஸ்டமிருக்கா வாறதுக்கு” வேகமாக கூறுகின்றான். அது விரக்தியா நம்பிக்கையா என்று அடையாளம் காண முடியாமல் இருக்கிறது.
நான் தொடர்கின்றேன் " ஆமிக்காறங்கள் இப்படி நிக்கிறாங்கள் உங்களுக்கு ஒரு பிரச்சினையும் தாறதில்லையா? " " எங்களுக்கோ? அவங்களால ஒரு பிரச்சினையும் இல்ல "  இது அதே இளைஞன். "மீனக் கீன தூக்கிப்போட்டு காசுதராம விடுறதில்லையோ?" என்ற கேள்விக்கு. இன்னுமொரு இளைஞன் " ஒரு மீன் தொடமாட்டங்கள்." அழுத்தமாக கூறுகின்றான். நானும் அவர்களை கிளறுவதற்காக மீண்டும் கேட்கிறேன் "சரி இப்ப நல்லாத்தான் இருக்கிறாங்கள் தற்செயலா ஏதாவது பிரச்சின வந்து அவங்களுக்கு கோவம் வந்தா?"  இன்னொருவன் "அண்ண இவ்வளவு காலமும் நாங்க பட்டதவிட கடுமையாவே நடக்கப் போகுது ". விரக்தி அவன் வார்த்தையிலும் முகத்திலும் தெரிகிறது. தலைகளுக்கு கீழ் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு மேலே பார்த்த வண்ணம் கிடந்தபடி கூறுகின்றான் " நானும் போயிருக்க வேண்டிய ஆள்த்தான் தப்பி வந்து இதில கிடக்கிறன். என்ர தம்பி புலியோடபோயிற்ரான் ஏப்பிரல் மாதக்கடசியில அவர் போயிற்ரேரெண்டு தகவல் வந்தது அழுது முடிக்கிறதுக்கிடையில என்னைக் கூப்பிடுறாங்கள் நான் ஒளிச்சிட்டன் வீட்ட வந்தவங்கள் அண்ணன கொண்டு போயிற்ராங்கள் அவருக்கு ஒரு கைக்குழந்த என்னை அனுப்பினா அண்ணன விடலாமெண்டு அண்ணியட்ட சொல்லிப்போட்டு போயிற்ரினம். எனக்கு தகவல் கிடைக்குது வீட்டபோனா கத்திக் குளறிக்கொண்டு அண்ணி கிடக்கிறா.


 நான் என்னம் கலியாணம் கட்டயில்ல சரி நான் போய் அண்ணன எடுப்பம் எண்டு முடிவெடுக்கிறம் என்ர 17 வரிச வாழ்கையில நான் அண்டைக்குத்தான் பயந்தனான் 12 வயசில இருந்து இந்த கடல்ல நான் தொழிலுக்கு போறனான் ஒருநாளும் பயந்ததில்ல. அடுத்த நாள் காலையில தகவல் வருகுது அண்ணன் போயிற்ரேரெண்டு  கொண்டு போய் ஒருகிழமைகூட ஆகயில்ல என்னவெல்லாமோ நடக்குது அண்ணியும் செத்தமாதிரித்தான். வீட்டில வேற பெரியாக்களும் கிடையாது எல்லாரும் சுனாமியில போயிற்ரினம் அந்தா அந்த நாலாவது சுவரில போட்டிருக்கிற பேர் எங்கட குடும்பத்தின்ர பேர்தான்.   (சுனாமியால் இறந்தவர்களின் பெயர்கள் அந்த மண்டபத்தின் தூண்களில் பதிக்கப்பட்டுள்ளது ) அண்ணை செத்து ஒரு கிழம போயிருக்கும் போர் மும்முரமா நடக்குது. என்னை வந்து பிடிச்சுக்கொண்டு போனாங்கள். ஆமிய தடுக்க போறதுக்கெண்டு துவக்கு தாறாங்கள் நான் வாங்கயில்ல என்ர குடும்பக் கதையெல்லாம் சொன்னன் அவங்கள் கேக்கயில்ல. நான் சத்தியம் பண்ணி சொல்லிப்போட்டன் என்னக் கொண்டாலும் சரி நான் துவக்குத் தூக்கமாட்டன் எண்டு. துவக்குத் தூக்கினாலும் சாகத்தான் போறன் தூக்காட்டியும் சாகத்தான் போறன் செய்யிறத செய்யட்டும் எண்டு நினைச்சுப் போட்டன். ஒரு கிழமையா தாங்கள் இடம்பெயரும் இடமெல்லாம் என்னையும் கொண்டு போச்சினம் ஒவ்வொருநாளும் கேப்பினம் துவக்க எடுக்கச் சொல்லி நானும் மாட்டன் எண்டுவன். கடசியா நாங்க இருந்த இடத்த சுத்தி வளைச்சு அடிக்கேக்க அவங்கள் எங்கள விட்டுட்டு ஓடீற்ராங்கள் நாங்க ஆமியட்ட சரணடைஞ்சம் எக்கச் சக்கமான ஆக்கள் ஆமியின்ர அடியில செத்து விழுந்தினம் நான் தப்புவன் எண்டு நினைக்கேல்ல ஒரு கொஞ்சப்பேர் தப்பிஓடி ஆமியட்ட சரணடைஞ்சிட்டம். வவுனியாவில வைச்சிருந்துபோட்டு பிறகு விட்டாங்கள் ". ஒரு நீண்ட பெருமூச்சு விடுகின்றார். உயிர் தப்பி விட்டது உழைக்கவேண்டும் என்ற ஓர்மம் இருக்கிறது. திருமணம் புரியாமலேயே குடும்ப பாரம் சுமக்கும் இளைஞன். அவன் வார்த்தைகளில் நம்பிக்கையும் நம்பிக்கையீனமும் தெரிகிறது. இது நான் சந்தித்த இளைஞன் இப்படி எத்தனை இளைஞர் யுவதிகள் முல்லைத்தீவெங்கும் இருக்கிறார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததுதானே.


சுனாமியால் இறந்தவர்களின் ஞாபகார்த்தமாக ஒரு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. வெள்ளம் அள்ளிக் கொண்டு சென்ற அந்த இடத்திலேயே அந்த மண்டபம் அமைந்திருக்கிறது.நூற்றுக்கணக்கானவர்களின்  பெயர்கள் குடும்பம் குடும்பமாக அங்குள்ள தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளது. நிலத்திற்கு மாபிள் போடப்பட்டு பளிங்கு மாளிகையாக காட்சியளிக்கும் அந்தக் கட்டிடம் வேறு எதற்குமே பயன் படுத்த முடியாதபடி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பணத்தைக் கொட்டி இதை செய்தவர்கள் ஏதாவது தேவைக்கும் பாவிக்க கூடியதாகவும் கட்டியிருக்கலாமே என்ற எண்ணம் என்மனதைக் குடைந்து கொண்டிருந்தது. அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு பொக்கணையை நோக்கிச்சென்றோம்.




பாலம் தொடங்கும் இடத்தில் ஆமியின் காவலரண் இருக்கிறது. வாகனத்தை நிறுத்தி அங்கு செல்ல வேண்டும் என்று கேட்டேன். போகமுடியாது என்று விட்டு ஏன் போக வேண்டும் என்று கேட்டார்கள். கடைசி யுத்தம் நடந்த இடம் அதைப் பார்க்கவேண்டும் என்றேன். அதற்குள் யாரையும் செல்ல அனுமதிக்க முடியாது என்றார்கள்.  பாலம் உடைந்து கிடக்கிறது அதைப்படம் எடுத்துக் கொண்டேன்.


 நந்திக்கடலின் மறுபக்க கரையோரம் செல்ல அனுமதி தந்தார்கள் பல்லாயிரக் கணக்கானவர்களை பிணங்களாக தாங்கிக் கொண்ட அந்தக் கடல் அமைதியாக எதுவும் தெரியாதது போல் கிடந்தது.


 முல்லைத்தீவை விட்டுப்புறப்பட்டு பின் திருகோணமலைக்கு செல்லுகின்றேன்.
முதலில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு செல்கின்றோம்.  கம்பீரமாக காட்சி தருகிறது கோணேஸ்வரர் ஆலயம். கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமர்ந்தானே என்று பாடல்பெற்ற தலமல்லவா.


புதிதாக உயரத்தில் திருத்தவேலைகள் இடம் பெறுகின்றது. செல்லும் பாதையெங்கும் தெருவோரக்கடைகள் நிறைந்து காணப்படுகின்றன. கூடுதலாக சிங்கள் மக்கள் வாங்கும் உணவுப்பண்டங்கள்தான் அந்த கடைகளில் விற்கப்படுகின்றது. கடைகளும் அரைவாசிக்கு மேற்பட்டவைகள் சிங்களவர்களால் நடாத்தப்படுகின்றன. ஆலயத்திற்கு முன்பாக பானை வைத்துப் பொங்கிக் கொண்டிருந்தார்கள் அவர்களும் சிங்கள மக்களாகவே இருந்தார்கள். எங்கள் மக்கள் எங்கே என்று மனது கேட்கத் தொடங்கியது.




கோவிலின் அண்மையில் இருக்கும் இராவணன் வெட்டு அன்று போலவே இருக்கிறது. மலை பிளந்திருப்பதைப் பார்க்கும்போது அழகாகவும் இருக்கின்றது ஆச்சரியமாகவும் இருக்கின்றது. அவற்றைப்பார்த்துக்கொண்டு கன்னியா சென்றோம்.


கன்னியா வென்னீர் ஊற்று கிணறுகள் பெரிதாக கவனிக்கப்படாமல் கிடக்கிறது. அதிகமாக அங்கும் சிங்கள சுற்றுலா பயணிகள்தான் வந்து போகின்றார்கள். அறிவித்தல்களை மூன்று மொழியிலும் பார்க்கக்கூடியதாக இருந்தது. ஏதோ இந்த இடத்திற்கு வந்தபோது மனது வரண்டு விட்டதுபோல் தோன்றியது. கலகலப்பில்லாமல் காய்ந்து கிடப்பது போன்ற எண்ணமே ஏற்பட்டது.


















கன்னியாவில் உள்ள தமிழர்களோடு உரையாடலாம் என்று பார்த்தால் அந்தப்பிரதேசமே ஆளரவமற்று வெறிச்சோடிக் கிடந்தது. வீதி என்ற பெயரில் மண் பாதைகள் அதுவும் சேறும் சகதியுமாக காணப்பட்டது. ஓரிடத்தில் ஒரு சிறிய கடையைக்கண்டு அந்தக்கடையில் இருந்தவருடன் உரையாடினேன்.



எங்கே மக்களைக்காணமுடியாமல் இருக்கின்றதே என்று கேட்டேன். "அவங்கெல்லாம் இடம்பெயர்ந்து போயிட்டாங்க. கன பேர் இந்தியாவில முகாம்வளிய இருக்காங்க வெளிநாட்டுக்கும் போயிருக்கிறாங்கள். சொட்டுச் சொட்டாதான் ஆக்கள் இருக்காங்கள்". என்று கூறி முடித்தார். பெரிய பிரதேசமே ஆட்களின்றி கிடக்கிறது. அத்தோடு இன்னொரு கதையையும் அவர் கூறினார். "மூண்டு மாசத்துக்குள்ள அவங்கவங்கள் வந்து காணியில குடியேறவேணும் குடியேறாதவங்களின்ர காணியள வேறாக்களுக்கு பிரிச்சுக் குடுக்கப்போறமெண்டு பொலிசு அறிவிச்சிருக்கு அதால ஆக்கள் பெரும் பாலும் வந்திருவாங்கள்" என்றார் அவர். ஆனால் இந்தக்காணிகள் ஆருக்கு பிரிச்சுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது என்ற கேள்விக்கு விடைகாணமுடியாமல் மனம்ஏங்கியது. அந்தக் கடையில் நின்ற இன்னுமொருவர் கூறினார் தான் நிலாவெளியைச் சேர்ந்தவரென்றும் நிலாவெளியில் தமிழரும் முஸ்லீம்களும் சகோரமாய்த்தான் இருக்கிறம் எங்களுக்குள்ள ஒரு பிரச்சினையும் இல்லை என்றார் அத்தோடு நிலாவெளி நிறைய முன்னேறி விட்டது என்றார். ( கப்பல் துறை அமைச்சர் ஒரு முஸ்லிம்). நிலாவெளி சென்றபோது அவர் சொன்னது உண்மையாகவே பட்டது.



எனது பயணம் 2010 நவம்பர் மாதம் முதல் 2010 டிசெம்பர் மாதம் வரையில் இடம் பெற்றது. அதன் பின்பு பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை வாசகர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.
  
இந்தக் கட்டுரையின் 10 வது பாகம் இதுவாகும் இதன் முன்னைய பகுதிகளைப் பார்வையிடுவதற்கு இடப்பக்கத்தில் உள்ள மேலும் சில பக்கங்கள் என்ற தலைப்பின் கீழ் எனது இலங்கைப் பயணம் என்ற தலைப்பை கிளிக் செய்யுங்கள்.

7 comments:

kirrukan said...

[quote]என்ர தம்பி புலியோடபோயிற்ரான் ஏப்பிரல் மாதக்கடசியில அவர் போயிற்ரேரெண்டு தகவல் வந்தது அழுது முடிக்கிறதுக்கிடையில என்னைக் கூப்பிடுறாங்கள் நான் ஒளிச்சிட்டன் வீட்ட வந்தவங்கள் அண்ணன கொண்டு போயிற்ராங்கள் அவருக்கு ஒரு கைக்குழந்த என்னை அனுப்பினா அண்ணன விடலாமெண்டு அண்ணியட்ட சொல்லிப்போட்டு போயிற்ரினம். எனக்கு தகவல் கிடைக்குது வீட்டபோனா கத்திக் குளறிக்கொண்டு அண்ணி
கடசியா நாங்க இருந்த இடத்;த சுத்தி வளைச்சு அடிக்கேக்க அவங்கள் எங்கள விட்டுட்டு ஓடீற்ராங்கள் நாங்க ஆமியட்ட சரணடைஞ்சம் எக்கச் சக்கமான ஆக்கள் ஆமியின்ர அடியில செத்து விழுந்தினம் நான் தப்புவன் எண்டு நினைக்கேல்ல ஒரு கொஞ்சப்பேர் தப்பிஓடி ஆமியட்ட சரணடைஞ்சிட்டம். வவுனியாவில வைச்சிருந்துபோட்டு பிறகு விட்டாங்கள். ஒரு நீண்ட பெருமூச்சு விடுகின்றார். உயிர் தப்பி விட்டது உழைகை;கவேண்டும் என்ற ஓர்மம் இருக்கிறது. திருமணம் புரியாமலேயே குடும்ப பாரம் சுமக்கும் இளைஞன். அவன் வார்த்தைகளில் நம்பிக்கையும் நம்பிக்கையீனமும் தெரிகிறது.[/quote]

எல்லா கட்டுரையும் புலிகளையும்,புலிஆதரவாளர்களையும் கூற்றம் கூறியே எழுதப்படுள்ளன......

புலி எதிர்ப்பாளர்கள் குற்றம் புரிந்தால் அதை டமிழ்முரசு சுட்டி காட்டாமைக்கு என்ன காரணமுங்கோ.....

Anonymous said...

(quote )நாங்க ஆமியட்ட சரணடைஞ்சம் எக்கச் சக்கமான ஆக்கள் ஆமியின்ர அடியில செத்து விழுந்தினம் நான் தப்புவன் எண்டு நினைக்கேல்ல

Kirukkan you have to read each and every sentence carefully.
When you read any article please try to get the good things only. Don't try to pick faults.

kirrukan said...

February 21, 2011 9:23 AM
Anonymous said...
(quote )நாங்க ஆமியட்ட சரணடைஞ்சம் எக்கச் சக்கமான ஆக்கள் ஆமியின்ர அடியில செத்து விழுந்தினம் நான் தப்புவன் எண்டு நினைக்கேல்ல

Kirukkan you have to read each and every sentence carefully.
When you read any article please try to get the good things only. Don't try to pick faults.

அவர் எழுதிய எல்லா பயணக்கட்டுரையிலும் ஒரு" புலிவாசம்" வந்திருக்கும் நீங்கள் வேணும் என்றால் அவரது சகல கட்டுரைகளையும் தயவு செய்து படித்து பார்க்கவும்.
அவர் அப்படி எழுத அவருக்கு உரிமை இருக்கு அதே போல் கட்டுரையை படித்து கருத்து எழுத எனக்கும் உரிமை இருக்கு......

நான் கேட்ட கேள்வி புலிகளின் குற்றத்தை எழுதும் அவர் ஏன் புலி எதிர்பாளரின் குற்றத்தை ( சிட்னியில் நடந்த) டமிழ் முரசு பத்திரிகையில் இன்று வரை பிரசுரிக்கவில்லை என்றுதான்.

c.paskaran said...

வருகைக்கும் இடுகைக்கும் நன்றி கிறுக்கன். நான் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் எந்தக் கூட்டல் குறைப்பும் இல்லாமல் சொல்லிக்கொண்டு செல்கின்றேன் இது எனது பயணத்தின் பதிவு மட்டும்தான்.
பத்திரிகையில் எது வருவது எதை தவிர்ப்பது என்பது ஆசிரியர் குழுவின் முடிவுதான். இது எந்தப்பக்கமும் சாயாது என்பது வாசகர்களுக்கு நன்கு தெரியும் என நினைக்கிறேன்.

kirrukan said...

[quote]c.paskaran said...
இது எந்தப்பக்கமும் சாயாது என்பது வாசகர்களுக்கு நன்கு தெரியும் என நினைக்கிறேன். [/quote]

நன்றிகள் பாஸ்கரன்......

எந்த பக்கம் சாயும்
எந்த பக்கம் சாயாது
என்பதும் வாசகர் அறியும்......கிகிகிகி

Anonymous said...

நீங்கள் இலங்கை செல்லும்போது உங்கள் briefcaseஐ எடுத்துச் செல்லவில்லையா?

Anonymous said...

Dear Bhaskaran,

Why in this web U guys have written nothing about ur mentor Chandrahasan's arrest for weird sexual crime. I Know these are hard times for U. U were his Golaya and he was ur Guru. Let me say U and chandrahasan frienship and love affair lasted more than 2 decades and now this sad ending for this. Have U visited him soon after his arrest? Or did u ditched him? By the way have U had any of those under skirt views that chandrahasan filmed?