உலகச் செய்திகள்

*
எகிப்தில் முபாரக்கின் ஆட்சி கலைப்பு ஜனநாயகத்துக்கு வழிசமைக்கவேண்டும்

ஒன்றுபட்ட மக்கள் சக்தியினால் எதனையும் சாதிக்க முடியும் என்பதற்கு எகிப்து சிறந்த உதாரணமாகிவிட்டது. எந்தவொரு வழி காட்டலோ அரசியல் தலைமைத்துவமோ இன்றி இணையத்தளங்களையும் பேஸ்புக் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தி உருவான மக்கள் புரட்சி 18 நாட்கள் தொடர்ந்த நிலையில் இறுதியில் மூன்று தசாப்த கால ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு கடந்த வெள்ளிக்கிழமை முற்றுப்புள்ளி வைத்துள்ளதுடன் புதிய வரலாற்றையும் படைத்துள்ளது.

அதிகாரத்தை வரம்பு மீறி பயன்படுத்தியமை, எதேச்சதிகார ஆட்சிமூலம் மக்களை அடக்கி ஒடுக்கியமை, ஊழல், முறை கேடான ஆட்சிக்கு வழி வகுத்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் ஹொஸ்னி பாரக்கிற்கு எதிராக தொடர்ந்த நிலையிலேயே மக்கள் கிளர்ச்சிகள் தீவிரமடைந்தன. இருந்தபோதிலும் அதன் பாரதூர தன்மையை அவர் அந்தளவு தூரம் கவனத்தில் கொண்டிருக்கவில்லை.



நாளடைவில் சிறுதுளி பெரு வெள்ளம் என்பதை போன்று மக்கள் சக்தி பெருக்கெடுத்ததுடன் கெய்ரோவின் தஹ்ர் சதுக்கத்தை மக்கள் முற்றுகையிட்டு நாட்டின் அன்றாட செயற்பாடுகளை செயலிழக்கச் செய்தனர்.

அதேவேளை, எகிப்திய போராட்டங்கள் உலகின் கவனத்தையும் ஈர்த்தன. அமெக்காவின் கவனம் எகிப்து மீது செறிந்துபோனது.

போராட்டக்காரர்களுடன் முபாரக் சமரச பேச்சு நடத்தவேண்டு மென அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில், இராணுவத்தின் பிரதிபலிப்பு எவ்வாறு இருக்கும் என்று பார்த்தபோது எகிப்திய மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தாங்கள் அடிபணிவதாக எகிப்திய இராணுவம் அறிவித்தது.

இந்த அறிவிப்பு போராட்டக்காரர்களுக்கு வலுச்சேர்த்த அதே வேளை, தனது இராணுவம் அமெரிக்காவும் தன்னை கைவிடுவதாக முபாரக் முதல்தடவையாக உணர்ந்தார். இருந்தும், காலத்தைக் கடத்தி மக்கள் சக்தியை உருக்குலைக்கலாம் என்ற அவரது எதிர் பார்ப்பும் இறுதியில் தப்புக்கணக்காகவே போனது.

இறுதியாக எகிப்தின் துணை ஜனாதிபதியான ஒமர் சுலைமான், ஜனாதிபதி முபாரக்கின் இராஜினாமா குறித்த தீர்மானத்தை கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்ததுடன், இராணுவக் கவுன்ஸிலிடம் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தல் வரையில் நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து 30 ஆண்டு காலமாக நடைமுறையிலிருக்கும் அவசரகாலச் சட்டம் தமது நிர்வாகத்தின் கீழ் நீக்கப்படும் என்று தெவித்துள்ள இராணுவம், அர சியலமைப்பு மாற்றங்களைக் கொண்டுவருவது தொடர்பிலும் நீதியானதும் நேர்மை யானதுமான தேர்தலை நடத்துவது தொடர்பிலும் எகிப்து மக்களுக்கு உத்தரவாதம் அளிப்பதாகத் தெவித்துள்ளது.

இந்த நிலையில், எகிப்தில் நடைபெற்ற மக்கள் கிளர்ச்சியின் பின்னணியில் இராணுவம் ஓர் சதிப்புரட்சியை மேற்கொண்டிருக்கலாம். எகிப்தில் தற்பொழுது நிர்வாகத்திலிருக்கும் தளபதிகள் இந்த ஊமைப்புரட்சிக்கு வித்திட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. இதனை நன்குணர்ந்த நிலையிலேயே முபாரக் தனது பதவியை இராஜினாமாச் செய்ய முன்வந்திருக்கலாம் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு வகையில் மக்கள் புரட்சியை தமக்கு சாதகமாக எகிப்திய இராணுவம் பயன்படுத்திக் கொண்டது. ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டக் காரர்கள் மீதான பலவந்தத்தைப் பிரயோகித்த போதிலும், இறுதியில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் அதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டது. எவ்வாறு இருந்த போதிலும் அடுத்துவரும் நடவடிக்கைகளிலேயே அதன் உண்மையான முகம் வெளிச்சத்துக்கு வரும் என்றும் இருவேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.

மக்கள் புரட்சியின் பாரதூரத்தன்மையை உணராதவராக இருந்த முபாரக் தனது விசு வாசமிக்க இராணுவம் மற்றும் பொலிஸ் படையை கொண்டு முறியடித்துவிடலாம் என்றே எண்ணியிருந்தார். அது முடியாது போன தருணத்தில் தற்போதைய பதவிக் காலம் முடியும்வரை தான் பதவியில் இருப்பதாகவும் வரும் செப்டெம்பர் மாதம் நடை பெறும் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை எனவும் அரசியல் சீர்திருத்தத்தை மேற்கொள்ள தாம் சித்தமாக இருப்பதாகவும் முபாரக் கூறியபோதிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதற்கு மசிந்துகொடுக்கவில்லை.

ஒரு திடீர் திருப்பமாக எதிரணியுடன் அவர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளும் பய னைத்தரவில்லை. ஏதாவது ஒரு வகையில் தனது விசுவாசிகளுடன் ஆட்சிபீடத்தை தக்கவைத்துக்கொள்வதிலேயே முபாரக் குறியாக இருப்பார் என உணர்ந்த எதிர்க்கட்சிகள் அவரது தந்திரோபாய வலைக்குள் சிக்காமல் தவிர்த்துக்கொண்டன. அதேவேளை, ஆர்ப்பாட்டம் தொடரவே செய்தது. இறுதியாக மூன்று தசாப்தங்கள் அரசோச்சிய 82 வயதான முபாரக் மக்கள் எழுச்சிக்கு அடிபணிவதை தவிர வேறு வழி இருக்கவில்லை.

இந்த பின்னணியில் எகிப்தில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சி உலகின் இதர அரபுலக நாடுகளின் தலைவர்களையும் சிந்திக்கவைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு காலகட்டத் தில் பாரக்கிற்கு பகிரங்கமாகவே ஆதரவு தெவித்து வந்த அமெரிக்கா அவர் நாட்டின் தலைமைத்துவத்தை தக்கவைக்க தவறிவிட்டார் என்பதனை அறிந்தவுடன் அவரை கைவிட சற்றும் தயக்கம் காட்டவில்லை.

இதிலிருந்தும் வல்லாதிக்க சக்திகள் தங்கள் நலன்சார்ந்த விடயங் களிலும் மிகப்பெரியதும் சக்திமிக்கதுமான எகிப்தின் எண்ணெய் வளத்திலுமே முக்கிய குறியாக இருக்கின்றனவே தவிர தனிப்பட்ட விடயங்களில் அல்ல என்பது நன்கு புலனாகின்றது.

இதேவேளை எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சிக் கலைப்புக்கு உலகத் தலைவர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளதுடன், உண்மையான எகிப்திய ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்துமாறும் எகிப்திய இராணுவத் தளபதிகளைக் கேட்டுள்ளனர்.

எகிப்திய மக்கள் தங்கள் குரல்களை ஓங்கி ஒலித்துள்ளனர்.

(Their  voices have been heard  and Egypt will never be  the  same ) எகிப்து மீண்டும் முன்னரைப் போன்று இருக்கப்போவதில்லை என்றும் இது எகிப்தின் அதிகார மாற்றத்தின் முடிவல்ல, ஓர் தொடக்கமே (The end  of  Egypt 's  transition  It 's  a  beginning  ) எனவும் அமெரிக்க ஜனாதிபதி முபராக் ஒபாமா கூறியுள்ளார்.

இதேவேளை, எகிப்தின் மக்கள் புரட்சியை வரவேற்பதாகக் கூறும் பல்வேறு உலக நாடுகளும் தங்களுடைய அரசியல் வர்த்தக நலனுக்காகவே கூடிய கவனத்தைச் செலுத்துகின்றன என சுட்டிக்காட்டும் அரசியல் ஆய்வாளர்கள் மத்திய கிழக்கின் புவியியல் முக்கியத்துவம் காரணமாக அமெரிக்கா, சோவியத் யூனியன் போன்ற வல்லரசு நாடுகள் தொடர்ந்தும் தமது கவனத்தை மத்திய கிழக்கு நாடுகள் மீதே வைத்திருக்கும் என்றும் கூறுகின்றனர்.

இதனிடையே மொரோக்கோ, அல்ஜீயா, டியூனீசியா, எகிப்து, லிபியா ஆகிய வட ஆபிரிக்க நாடுகளிலும் சூடான், எதியோப்பியா, சோமாலியா ஆகிய மத்திய ஆபிரிக்க நாடுகளிலும் ஈராக் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் மக்கள் எழுச்சி உருவாவது விசித்திரமான ஒன்றல்ல. காலனித்துவ சக்திகள் தங்கள் கைபொம்மைகள் ஊடாக இப்பிராந்தியங்களில் பொம்மை ராஜ்ஜியங்களை உருவாக்குவதிலேயே இதுவரைகாலம் கவனம் செலுத்தி வந்தன. எனினும் அந்த நிலைமை மேலும் தொடராது என்பதையே ஈரானின் வசையில் எகிப்தும் வெளிக்காட்டியுள்ளது என்று கூறப்படுகின்றது.

மக்கள் கிளர்ச்சி அல்லது புரட்சி வன்றையாகவோ அல்லது அகிம்சையாகவோ உருவெடுக்கும் பட்சத்தில் இறுதியில் அதுவே வரலாறாகவும் மாறிவிடுகின்றது. இந்த கூற்றுக்கு அமைய எகிப் தில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியால் பாரக்கின் எதேச்சாதிகõர ஆட்சி அஸ்தமனமான அதேவேளை மறுபுறம் அது எகிப்தின் ஜன நாயகத்தை உறுதிசெய்வதாக அமையவேண்டுமே தவிர குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க வழி செய்வதாக அமையக்கூடாது.

இவை அனைத்துக்கும் மேலாக, இன்றைய உலகின் போக்குகள் எந்தவொரு நாட்டில் அநீதிகள், ஊழல்கள் இடம்பெறுமோ அதற் கெதிராக அந்த நாட்டு மக்கள் மாத்திரமல்ல; சர்வதேச மக்களே எழுந்துநின்று குரல் கொடுக்கத் தயங்கமாட்டார்கள் என்பதை உணர்த்துவதாகவே அமைந்துள்ளது. இதற்கு எகிப்தின் மக்கள் புரட்சி ஓர் எடுத்துக்காட்டாகிவிட்டது என்பதே யதார்த்தம்.

நன்றி வீரகேசரி

17 வயதுப் பெண்ணுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட இத்தாலிப் பிரதமர்!


விபசாரக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மீது நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
17 வயது யுவதியுடன் பணம் கொடுத்து விபசாரத்தில் ஈடுபட்டார் என்பது தான் இவர் மீதான குற்றச்சாட்டாகும்.

ஆரம்ப கட்ட முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி இவர் மீது குற்றப்பத்திரத்தை இன்று தாக்கல் செய்தார்.

74 வயதான பெர்லுஸ்கோனி விபசாரம் புரிந்து விட்டு அதை மறைக்க முயற்சி செய்துள்ளார் என்று நீதிபதி தனது குற்றப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.


நீதிமன்ற விசாரணைகள் ஏப்பிரல் மாதம் ஆறாம் திகதி ஆரம்பமாகும். பெர்லுஸ்கோனி தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுத்துள்ளார்.

பெர்லுஸ்கோனி ராஜினாமாச் செய்ய வேண்டும் என்று இத்தாலியில் பெண்கள் இரண்டு தினங்களாக ஆர்ப்பாட்டங்களையும். ஊர்வலங்களையும் நடத்தியுள்ள நிலையிலேயே இந்தத் தீர்ப்பும் வெளியாகியுள்ளது.


இருண்ட கண்டத்தில் உதயமாகப் போகும் புதிய தேசம்

திட்டமிடப்பட்டதன் பிரகாரம் சகல செயன்முறைகளுமே சுமுகமாக முன்னெடுக்கப்படுமானால், ஆபிரிக்காவின் மிகப் பெரிய நாடான சூடானின் தென்பிராந்தியம் உலகின் புதிய நாடாகவும் ஆபிரிக்காவின் 54 ஆவது நாடாகவும் எதிர்வரும் ஜூலை மாதம் விளங்கப் போகிறது. கடந்த வாரம் தெற்கு சூடானில் இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பின் இறுதி முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. இதன் மூலம் 99 சதவீதமான தென் சூடானியர்கள் வடக்கில் இருந்து பிரிந்து செல்வதற்கு விருப்பத்தைத் தெரிவித்திருப்பதை அறியக் கூடியதாக இருக்கிறது. அராபிய முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கிற்கும் கறுப்பின கிறிஸ்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தெற்கிற்கும் இடையே இரு தசாப்தங்களுக்கும் கூடுதலான காலமாக நீடித்த இரு உள்நாட்டுப் போர்களுக்கும் (இவற்றில் குறைந்தபட்சம் 20 இலட்சம் பேர் கொல்லப்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது) அவற்றின் பின் விளைவான இனப் பூசல்களுக்கும் பிறகு 2005 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடன் கைச்சாத்திடப்பட்ட சமாதான உடன்படிக்கை முறைப்படியாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கான பெருமை இருதரப்பினருக்குமே உரியதாகும்.

தங்களுக்கென சொந்த நாடு உதயமாகப் போகிறதென்ற மகிழ்ச்சியில் தென் சூடானியர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். சர்வஜன வாக்கெடுப்பின் இறுதி முடிவுகளை சூடான் ஜனாதிபதி ஒமர் அல்பஷீர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். புதிய

தேசத்தை முதலில் வாழ்த்துபவராகத் தானே இருக்க வேண்டுமென்று விரும்புவதாக அவர் கூறியிருக்கிறார். அரசியல் மற்றும் மத சுதந்திரத்துக்கான வேட்கையில் இது முடிவு அல்ல, நீண்ட பயணத்தின் ஒரு தொடக்கமேயாகும். வடக்கு சூடானில் வாழ்ந்துவரும் சுமார் 20 இலட்சம் தென் சூடானியர்கள் சர்வஜன வாக்கெடுப்பில் பங்கேற்பதைத் தவிர்த்திருந்தனர். நிச்சயமாக அவர்கள் பிரிவினைக்கு ஆதரவாகவே வாக்களித்திருப்பார்கள் என்ற போதிலும், தங்களது பகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் ஏதாவது மோசடி இடம்பெறுமேயானால், சர்வஜன வாக்கெடுப்பின் இறுதி முடிவுகளை அது செல்லுபடியாக்கிவிடக்கூடுமென்ற பீதியில் அவர்கள் வாக்களிக்காமல் இருந்துவிட்டார்கள்.நாடு பிரியப் போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து கொண்ட அவர்களில் பல ஆயிரக்கணக்கானவர்கள் ஏற்கனவே எல்லையைக் கடந்து தென்சூடானுக்குள் வந்துவிட்டார்கள். மேலும் இலட்சக்கணக்கான தென் சூடானியர்கள் வடக்கில் இருந்து தெற்கிற்கு வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் சூடானில் இருந்து அரேபிய முஸ்லிம்களும் வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுகள் எத்தகையதாக இருந்தாலும் பெருமளவில் வன்முறைகள் மூளக்கூடுமென்றே ஐ.நா. அச்சம் தெரிவித்திருந்தது. ஆனால், இதுவரையில் இருபகுதிகளுக்குமான பரஸ்பர குடிபெயர்வு வன்முறைகளின்றியதாகவே நடைபெற்றுக்கொண்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. புதிய தேசத்தின் ஜனாதிபதியாகப் பதவியேற்கப்போகும் சூடானிய மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைவரான சல்வாகிர் நாட்டுப் பிரிவினை தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பில் கிடைத்திருக்கும் வெற்றியால் பெருமிதமடைந்தவராகக் காணப்படுகிறார். ஆனால், அவரும் அவரது பிரஜைகளும் எளிதில் சமாளிக்க முடியாத பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இன்னும் 5 மாதகாலத்தில் பிறக்கப்போகும் புதிய தேசம் பிரிக்கப்படாத சூடானின் எண்ணெய் வளத்தில் 80 சதவீதத்தை தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஆனால், சூடான் துறைமுகத்துக்கு எண்ணெயைக் கொண்டு செல்லும் குழாய்க் கட்டமைப்புகள் வட பிராந்தியத்தின் ஊடாகவே செல்கின்றன. சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக அளிக்கப்பட்டிருக்கும் ஆணையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு வெற்றி கொள்ளப்பட வேண்டிய சவால்களில் பிரதானமானது எண்ணெய் வளத்தின் மூலமான வருவாயைப் பகிர்ந்து கொள்வதுடன் தொடர்புடைய சர்ச்சையாகும். கடந்த வருடத்தைய தென் சூடானின் மொத்த வருவாயில் 98 சதவீதம் எண்ணெய் ஏற்றுமதி மூலம் பெறப்பட்டதாகும்.

சூடானின் எண்ணெய் வளத்தின் நான்கில் மூன்று பங்கு தென் சூடானிலேயே இருக்கின்ற போதிலும், வடக்கு சூடானே எண்ணெய்க் குழாய்களையும் சுத்திகரிப்பு நிலையங்களையும் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பிளவுபட்ட நாடு போன்றே நடைமுறையில் இருக்கும் சூடானின் எண்ணெய் வள வருவாயைப் பகிர்ந்துகொள்வதில் இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த உடன்பாடு சர்வஜன வாக்கெடுப்புடன் முடிவுக்கு வர வேண்டுமென்பதே சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகளில் ஒன்று. புதிய தேச உதயத்துக்கு முன்பாக தெற்கிற்கும் வடக்கிற்கும் இடையே ஒளிவுமறைவற்றதும் ஒப்புரவானதுமான வருவாய்ப் பகிர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ள வேண்டியது முக்கியமானதாகும்.

பெருமளவுக்கு மண் வீடுகளையும் குடில்களையும் கொண்டதாக விளங்கும் ஜுபாவைத் தலைநகரமாகக் கொண்டமையப் போகும் தென் சூடான் வருவாயில் தற்போது பெறுகின்ற அரைப்பங்கிற்கும் கூடுதலான பங்கைப் பெறுவதற்கு விரும்பக்கூடும். அதேவேளை தற்போதைய தனிநகர் கார்ட்டூமில் இருக்கும் சூடானிய ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் நாட்டின் தேசியக் கடனான 2800 கோடி யூரோவை புதிய அரசும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தும் சாத்தியம் இருப்பதாக சர்வதேச அரசியல் அவதானிகள் நம்புகிறார்கள். தென்சூடானின் சனத்தொகை தொடர்பில் வெளியிடப்படுகின்ற புள்ளிவிபரங்கள் குறித்து சர்ச்சைகள் கிளப்பப்படுகின்ற போதிலும் தற்போது சுமார் 60 இலட்சம் மக்களே அங்கு வாழ்வதாகக் கணிப்பிடப்படுகிறது. இந்த மக்களுக்கு முறையான உள்ளகக் கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஒரேயொரு வைத்தியசாலையே அங்கேயிருக்கிறது. நைல் நதியோரமாகவுள்ள தென் சூடானின் 1200 கிலோமீற்றர் நீளப்பிரதேசத்தில் இருக்கின்ற ஒரே பாலமும் தலைநகர் ஜுபாவில் தான் அமைந்திருக்கிறது. தென்சூடானில் தற்போது செயற்படுகின்ற கைத்தொழில்கள் என்றால் குடிநீர் தயாரிப்பும் பியர் தயாரிப்புமேயாகும்.

அரசியல் நிலைவரத்தைப் பொறுத்தவரை ஆயுதபாணிக் குழுக்களின் தலைவர்களின் ஒத்துழைப்பை சல்வா கீர் பெற்றிருக்கின்றபோதிலும் சூடானிய மக்கள் விடுதலை இராணுவம் புதிய தேசத்தில் எத்தகைய பாத்திரத்தை வகிக்கப்போகிறது என்பதும் சர்ச்சையை ஏற்படுத்தக் கூடியதொரு விவகாரமாகும். எண்ணெய் வளமுடைய எல்லைப் பிராந்தியமான அபியீயின் அந்தஸ்தும் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. இவ்வாறாக புதிய தேச உதயத்துக்கு முன்னால் பெருமளவு பிரச்சினைகள் விரிந்து கிடக்கின்றன. சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகளை இதுவரையில் நடைமுறைப்படுத்துவதில் காட்டிய அரசியல்பக்குவத்தை எதிர்வரும் கட்டங்களிலும் வடக்கினதும் தெற்கினதும் தலைவர்களும் தொடர்ந்தும் வெளிக்காட்டிச் செயற்படுவார்கள் என்றே உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன.

நன்றி தினக்குரல்


No comments: