.
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா
இருபுறமும் மனைவியரை இருத்திவைத்து இன்பமுறும்
குறிஞ்சிக் குமரனுக்கு கூறவொண்ணா மனக்குறையாம்
அருகிருந்து நாமிருவர் அணைத்தன்பு செய்கையிலே
பெருங்கவலை யாஎன்று தெய்வானை கலங்கி நின்றாள்
குறமகளும் தழுவிநின்று கொவ்வை இதழ் திறந்து
இருவருடன் குலவுகின்றீர் என்னகுறை எனக்கேட்டாள்.
கருவிழியாள் வள்ளியினை கடைக்கண்ணால் பார்த்துவிட்டு
திருமுருகன் வாய்திறந்து தெய்வானையிடம் சொன்னான்
பேராதனையில் அந்த யூனிவசிற்றியிலே
பெருங்கல்வி பெறவந்தோர் பிரதி~;டை எனைச்செய்தார்
ஆராதனை செய்வார் அடிபணிந்து பூசைசெய்வார்
அனுதினமும் வந்திங்கே தொழுதிடுவார் என்றிருந்தேன்
தினமுமொரு காதலியைச் சேர்த்தணைத்துக் கொண்டுவந்து
சிலுமிசங்கள் பண்ணுகின்றார் சிந்தை கலங்குதடி
தினைப்புனத்தில் வள்ளியினை தேடிநான் சென்றுபட்ட
சித்திரவதைகள் என்ன? சிம்பிளாய் இவர்களெல்லாம்
நினைத்தவுடன் நினைத்தவளை நேரமில்லா நேரமெல்லாம்
அணைத்தணைத்துக் களிக்கின்றார் அவளோ மற்றொருநாள்
மனத்தில் அவன் நினைவை மாற்றி எழுதிவிட்டு
தனக்கோர் புதியவனை தாவிப் பிடிக்கின்றாள்
சின்னப் பற்றைகளுள் சிரிப்பொலியும் பிறவொலியும்
கண்ணால் காணவொண்ணாக் காட்சிகள் நடப்பதுவும்
என்ன கொடுமையிது? என்பெயரில் இடம் அமைத்து
எனக்கில்லா இன்பமெல்லாம் இவர்கள் அனுபவிக்க
இருபுறமும் நீங்கள் இருவருமே காவல் நிற்க
ஒருவழியும் தெரியாமல் உங்களுக்கும் புரியாமல்
அழகன் என்று பெயர் இருந்தும் ஆரும்கிடைக்காமல்
இளமையெல்லாம் வீணாகி இதயமெல்லாம் புண்ணாகி
அழுவதற்கும் முடியாமல் அன்றாடம் இதயத்தால்
ஆற்றொணாத் துயரில்நான் அமிழுகின்றே னடிபெண்ணே.
இனியும் பொறுப்பதற்கு என்னால் முடியாது
இன்றே சிவனுக்கு இதையெல்லாம் தெரிவித்து
எனையிந்த இலங்கையிலே எங்கேனும் பிறக்கவைத்து
பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கும் இடம்எடுத்து
பேராதனைக் கேயெனக்கு அனுமதியும் கிடைக்கவைக்க
கோரிக்கை யொன்றினை குறித்தனுப்ப விருக்கின்றேன்.
இல்லையென்று மறுத்திட்டால் இன்றுடனே உங்கள்
இருவரையும் விட்டுவிட்டகன்று எல்லாவற்றையும் களைந்து
கோவணத்துடன் இன்றே குறிஞ்சிக்குச் சென்றிடுவேன்.
தாமதிக்க இனியெனக்கு தருணமில்லை வருகின்றேன்
என்றுசொல்லி வடிவேலன் குன்றைவிட்டு இறங்கிவந்து
இன்ரநெற் கடைதேடிக் கண்டிக்கு நடந்துசென்றான்
செய்வ தறியாது திகைத்துநின்றாள் தெய்வானை
ஒய்யார மொழிவள்ளி ஊமையாய் ஆகிவிட்டாள்
தையல்கள் இனிமேலும் தாமதித்தல் மடமையென்று
பையவேபடி யிறங்கிப் பாதைக்கு வந்தார்கள்
பாதையிலே அவர்கள் பாதங்கள் பட்டதுமே
தேவலோகச் சீருடைகள் திடீரென்று மறைந்தனவே
தேவிகளின் உடைகளிப்போ ரீசேட்டும் பஅன்டுமென
மாறினவே கால்களிலும் வடிவான ஹைஹீல்ஸாம்
சீவிமுடித்த கூந்தல்போய் சிலுப்பா வாம்
செந்தமிழும் தமிங்கிலமாய் சிங்களமும் கலந்ததுவாம்
வளைந்து செல்லும்பாதை வழிநெடுக வேஅவர்கள்
இணைந்து நடக்கையிலே இருபுறமும் பார்த்தார்கள்
அணைந்தபடி இளைஞரெல்லாம் அருகருகே சோடிகளாய்
இணைந்து கிடப்பதனை இருவருமே கண்டார்கள்
இளமைப் பொலிவோடு என்றும் திகழுகின்ற
அழகன் முருகனுக்கு ஆசைவந்த காரணத்தை
மலைவாழ் வள்ளியிப்போ வடிவாய் உணர்ந்துகொண்டாள்
சிலைபோ லாகியங்கு தெய்வானை திகைத்துநின்றாள்.
அந்திப் பொழுதுதாச்சு அரையிருளும் வந்தாச்சு
கந்தன் போனதிசை கண்களுக்குத் தெரியவில்லை
எந்தப் பக்கத்தில் ஏறெடுத்துப் பார்த்தாலும்
சந்துகளும் பொந்துகளும் சரசமிடும் ஒலியாச்சு
முக்கல்களும் முனகல்களும் முன்னர் கண்டறியா
சிக்கலான காட்சிகளும் தெய்வானை வள்ளியினை
வெட்கப்பட வைத்ததனால் விரைந்து நடந்தார்கள்
அக்கணமே அங்கிருந்து அகன்று மறைந்தார்கள்
மாமனா ரிடம்சென்று மால்மருகன் பற்றியொரு
வழக்குரைக்க எண்ணியதால் வள்ளியும் தெய்வாவும்
தேவலோ கத்தின் சிவபெருமான் அரண்மனைக்கு
சீக்கிரமே சென்றார்கள் உமையாளைக் கண்டார்கள்
பரமசிவன் அங்கில்லை பார்வதிக்கும் போனஇடம்
சரியாகத் தெரியாதாம் தங்கையவள் கங்கையுடன்
இரவெல்லாம் இருந்தவராம் இப்போது அவளுந்தான்
இறைவனைக் காணவில்லை என்றுதேடி வந்தாளாம்
“ஈசனைப்போல் என்குமரன் எப்போதும் நல்லவன்தான்
இரண்டுபேர் உங்களுடன் இவன்ஒழுங்காய் இருந்தவன்தான்
ஆசையிப்போ வந்ததெல்லாம் பேரா தனையால்தான்
அவனைத் திருத்திடலாம்” ஆதிபராசக்தி சொன்னாள்
மருமகள்மார் இருபேரும் மாமியார் பார்வதியும்
அருகருகே அமர்ந்திவ்வா றாராய்ந்து அலசுகையில்
முருகனவன் மயில்மீது முக்கண்ண னுடனமர்ந்து
கரிமுகனும் சேர்ந்தங்கே கயிலாயம் வந்தார்கள்.
1 comment:
[quote]“ஈசனைப்போல் என்குமரன் எப்போதும் நல்லவன்தான்
இரண்டுபேர் உங்களுடன் இவன்ஒழுங்காய் இருந்தவன்தான்
ஆசையிப்போ வந்ததெல்லாம் பேரா தனையால்தான்
அவனைத் திருத்திடலாம்” ஆதிபராசக்தி சொன்னாள்[/quote]
பேரா முருகனே இப்படி புலம்பினார் என்றால்
எங்கன்ட சிட்னி முருகன் எப்படி புலம்புவார்?
Post a Comment