கிரிக்கெட் மட்டையின் கதை -பத்ரி சேஷாத்ரி-.

தெருவில் உள்ள நாய்கூட கிரிக்கெட் விளையாடும் காலம் இது! தெருக்குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுவது பார்க்கப் பரவசம் தருவது. அதுவும் கிராமங்களில் கையில் கிடைத்ததை எல்லாம் கிரிக்கெட்டுக்கான கருவிகளாக்கி கோர்ட்னி வால்ஷ் போலத் தங்களைப் பாவனை செய்துகொண்டு ஓடிவந்து வீசும் கை விக்கெட்டுக்கு மேலே வரப் பந்துவீசி, அதனை விவியன் ரிச்சர்ட்ஸ் போல முன்காலை மடக்கி மிட்விக்கெட் திசையில் ஒய்யாரமாக ஒரு புல் ஷாட் அடித்து விளையாடி யாஹூ என்று இந்தக் குழந்தைகள் கத்திக் குதூகலிப்பதைப் பார்ப்பதே ஆனந்தம்தான்!
நம் காலத்தில் நாம் என்னென்னவோ செய்து கிரிக்கெட் விளையாடியிருப்போம்.பந்து என்றால் பாக்கு உருண்டை, தென்னைக் குரும்பை என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதுபோன்ற இயற்கைப் பொருள்களுடன் சில அற்புதமான புதுமைகளையும் படைத்திருக்கிறோம். உதாரணமாக சைக்கிள் டயர் பந்து! பிய்ந்த சைக்கிள் டயரை கத்திரிக்கோலால் ரப்பர் பாண்டுகளாக வெட்டிக்கொள்ளவேண்டும். பாக்குக் கொட்டை, அல்லது சுமாரான உருண்டையாக இருக்கும் ஒரு கல் இருந்தால் போதும். அதைச் சுற்றி ரப்பர் பாண்டுகளைச் சுற்றிச் சுற்றிப் போட்டுக்கொண்டே வந்தால் ஓரளவுக்கு உருண்டையான பந்து கிடைத்துவிடும். கான்கிரீட் தரையிலோ கெட்டியான மண் தரையிலோ அடித்தால் சுள்ளென்று எழும்பும்.
இப்போதெல்லாம் ரப்பர் பந்து, டென்னிஸ் பந்து என்றெல்லாம் வந்து, சிறுவர்களின் கற்பனை வளத்தைக் குலைத்துவிட்டன.
கிரிக்கெட் மட்டையாக நாம் என்னென்னவற்றையோ பயன்படுத்தியிருக்கிறோம். வெறும் குச்சி, மாமரத்தின் பட்டை, பாக்கு மட்டை, கார்ட்போர்டு என்று கண்டதையும் வைத்துத் தெருவில் கிரிக்கெட் விளையாடியிருக்கிறோம்.
ஆனால் இந்த தெண்டுல்கர் போன்றோர் எல்லாம் என்ன பேட்டை வைத்து விளையாடுகிறார்கள் என்று உங்களுக்குத் தோன்றியிருக்குமே? மா, பலா போன்ற மரங்களா? இல்லை வேறு ஏதாவதா?
கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அவ்வப்போது பேட் என்பதைக் குறிக்க வில்லோ (Willow) என்ற சொல்லைப் பயன்படுத்தியதை நான் கேட்டதுண்டு. அப்போது அதன் பொருள் எனக்குச் சரியாகப் புரிந்திருக்கவில்லை. பின்னர் அதுபற்றி நிறைய விவரங்களை அறிந்துகொண்டேன்.

மட்டை பிறக்கும் மரம்
வில்லோ என்பது ஒரு மரக் குடும்பம். இந்த வகை மரங்கள் உலகின் பல பாகங்களில் பயிராகின்றன. இதில் ஒரு குறிப்பிட்ட வகையானது Salix alba Caerulea எனப்படும். இந்த மரத்திலிருந்துதான் கிரிக்கெட் மட்டைகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த வகை மரங்கள் பிரிட்டனில்தான் அதிகமாக விளைகின்றன. இவற்றைப் பிடுங்கி வந்து வேறெங்கிலும் நட்டால், தட்பவெப்ப நிலை அவ்வளவு சரியாக இருக்காத காரணத்தால் அதே அளவு சிறப்பாக வளர்ச்சியும் இருக்காது. இந்தியாவில் ஒரே ஒரு மாநிலத்தில்தான் இந்த வகை மரங்கள் காணப்படுகின்றன. காஷ்மீர்.
பிரிட்டனில் விளையும் இந்தவகை மரங்களை கிரிக்கெட் துறையில் இங்கிலிஷ் வில்லோ என்கிறார்கள். கரெக்ட்! காஷ்மீரில் விளைவதற்கு காஷ்மீர் வில்லோ என்று பெயர்.
உலகெங்கிலும் உயர்தர கிரிக்கெட் பேட் செய்ய இங்கிலிஷ் வில்லோதான் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் காஷ்மீர் வில்லோவில் செய்த மட்டைகளையும் காணலாம். அவை கட்டாயம் தரம் குறைவானவையே.
முதலில் இங்கு தரம் என்றால் என்ன என்று பார்ப்போம். இந்த மரம் கிட்டத்தட்ட ஒரு மீட்டர் விட்டம் கொண்டதாகவும் 20 மீட்டர் அல்லது அதற்குமேலும் உயரம் கொண்டதாகவும் வளரும். இந்த மரத்தின் சிறப்புத் தன்மையே இது எடை குறைவானதாகவும், அதே நேரம் அதிக வலுவுள்ளதாகவும் இருப்பதுதான். சில மரத்துண்டுகளை ஓங்கி அடித்தால் அதிலிருந்து சிராத்தூள் தெறிக்கும். மாமரம் போன்றவை இப்படிப்பட்டவை. ஆனால் தேக்கு போன்றவை மிக உறுதியானவை. தேக்கில் என்ன பிரச்னை என்றால் அதன் அடர்த்தி அதிகம்; எனவே கனம் அதிகமாக இருக்கும். ஆனால் வில்லோ லேசாவாக இருக்கும், அதே நேரம் உறுதியாகவும் இருக்கும்.
இந்த மரத்திலிருந்து கிரிக்கெட் மட்டையைச் செய்ய எப்படி மரத்தை வெட்டவேண்டும்? மரங்கள் வளரும்போது அடுத்தடுத்து அடுக்குகள் ஏற்படும். மரத்தை குறுக்குவெட்டில் பார்த்தால் நிறைய வட்டங்கள் இருப்பதைக் காணலாம். இதைக் குறுக்காக வெட்டினால், நேர்க் கோடுகள் மரத்துண்டில் தெரியவரும்.
இந்தக் கோடுகளைத்தான் grains என்று சொல்வோம். இந்தக் கோடுகள் நேராக, ஒரே சீராக, கிட்டத்தட்ட ஒரே சீரான இடைவெளி கொண்டதாக இருக்கவேண்டும். அப்படி இருக்கும் மரத்துண்டுதான் சிறந்த கிரிக்கெட் மட்டையாக இருக்கமுடியும்.
தேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் மட்டையை வாங்கும்போது அருகில் இருந்து கவனியுங்கள். முதலில் மட்டையைக் கண் மட்டத்துக்குக் கொண்டுவந்து கிரெயினைப் பார்ப்பார்கள். கிரெயின் கோடுகள் நெளியாமல், குறுக்காகச் செல்லாமல் நேராக இருக்கவேண்டும்.
மட்டையின் அடிபாகம் சற்றே வளைந்து காணப்படும். ‘வில்’ (bow) போல வளைந்திருக்கும் என்பார்கள். இது எவ்வளவு தூரத்துக்கு வளைந்துள்ளது என்பதைப் பொருத்து, பந்தை அடிக்கும்போது அதற்கு ‘விண்’ என்று விசை செலுத்தலாம். ஆனால் மிக அதிகமாக வில் வளைவு இருந்தாலும் தடுத்தாடுவதில் சிக்கல் ஏற்படும்.
மட்டையின் பின்பக்கம் முக்கோணக் குறுக்குவெட்டைக் கொண்டது. இந்த வடிவம், எடையைக் குறைக்கவும், அதே நேரம் முன்பக்கத்துக்கு வலு சேர்க்கவும் உதவுகிறது.
தெண்டுல்கர் போன்றோர் கனமான மட்டையைப் பயன்படுத்தவே விரும்புகிறார்கள். ஆனால் அது இளைய ஆட்டக்காரர்களுக்குப் பெரும்பாலும் உகந்ததல்ல. மணிக்கட்டின்மீது கடுமையான அழுத்தத்தைத் தரும். கங்குலி, யுவராஜ் சிங் போன்றோர் இலகுவான மட்டைகளையே பயன்படுத்துவது வழக்கம். அதே நேரம், வில் வளைவு அவற்றில் அதிகமாக இருக்கும். அவர்களது மட்டையால் லேசாகத் தட்டினாலே பந்து பறப்பதுபோன்ற தோற்றம் தரும்.
ஒவ்வொரு கிரிக்கெட் ஆட்டக்காரரும் தங்களுக்கென மட்டையின் எடையைத் தீர்மானம் செய்துகொள்வது அவசியம். டைமிங் என்பது அப்போதுதான் மிகச் சரியானதாகக் கைகூடும்.
கிரிக்கெட் மட்டைகளைச் செய்யும் செய்முறையைப் படங்களாக இந்தத் தளத்தில் பார்க்கலாம்
Nanri: tamilpaper.net

No comments: