இலங்கை மாணவர் கல்வி நிதியம் (இணை) - அவுஸ்திரேலியா

.
CEYLON STUDENTS EDUCATIONAL FUND-Australia (INC)
இலங்கை மாணவர் கல்வி நிதியம் (இணை) - அவுஸ்திரேலியா
P.O.Box: 317, Brunswick,Vic- 3056, Australia
E.Mail: kalvi.nithiyam@yahoo.com Web: www.csefund.org


இலங்கை மாணவர் கல்வி நிதியம் கடந்த டிசம்பர் 2010 ஜனவரி 2011 காலப்பகுதியில் இலங்கையில் மேற்கொண்ட பணிகள் பற்றிய அறிக்கை.

இலங்கையில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 23 வருடகாலமாக நிதிப்பங்களிப்பின் ஊடாக உதவி வழங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் (C.S.E.F) சமீபத்திய அறிக்கை.உடப்பு நிகழ்வு:

புத்தளம் மாவட்டத்தில் உடப்பு பிரதேசத்தில் உடப்பு தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் ஆண்டிமுனை தமிழ் மகாவித்தியாலயம் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் செல்வி கவித்ரா, செல்வன்கள் ருஷாந்தன், விதுர்ஷன் ஆகியோருக்கான 2010 மே - டிசம்பர் (எட்டுமாதங்கள்) மாதங்களுக்கான நிதிக்கொடுப்பனவு 24,000 ஆயிரம் ரூபா ($233.00) ( ஒரு மாணவருக்கு எட்டாயிரம் ரூபா வீதம்) ஆண்டிமுனை மகாவித்தியாலய மண்டபத்தில் 01-12-2010 ஆம் திகதி நடைபெற்ற வைபவத்தில் வழங்கப்பட்டது. இம்மூன்று மாணவர்களும் ஒரே குடும்பத்தைச்சேர்ந்தவர்கள். வன்னி பெருநிலப்பரப்பில் நடந்த யுத்தத்தில் தந்தையை இழந்தவர்கள். தாயாருடன் உடப்பு பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்து வந்தபின்னர் தாயார் இனந்தெரியாதவர்களினால் கடத்தப்பட்டார். தற்போது இம்மாணவர்கள் மூவரும் பாட்டியாரின் பராமரிப்பில் வளர்க்கப்படுகிறார்கள். நிதிக்கொடுப்பனவு வைபவத்தில் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊர்பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இம்மூன்று மாணவர்களுக்கும் உதவும் அன்பர்: திருமதி சாந்தி ரவீந்திரன்
(Glenwaverley)


திருகோணமலை, மட்டக்களப்பு

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் எமது கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களை கண்காணிக்கும் நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு ( Voluntary Organization For Vulnerable Community Development – VOVCOD) பணிமனையில் 06-12-2010 ஆம் திகதியன்று, அங்கு பணியாற்றும் ஊழியர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் மாணவர்களது கடிதங்கள், சான்றிதழ்களில் இடம்பெறும் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டன. நிதிக்கொடுப்பனவுகள் கிடைத்ததும் தாமதமின்றி பகிர்ந்தளிக்கவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. பணிமனை ஊழியர்களுக்கு நிதியத்தின் பணிகளை விளக்கும் ஒளிப்படக்காட்சியும் காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இந்த அமைப்பின் நிறுவனர் திரு.கணேஷ் அவர்களும் கலந்துகொண்டார்.

கிழக்கு பல்கலைக்கழகம்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் நிதியத்தின் உதவி பெறும் 24 மாணவர்களுக்கான 2010 செப்டெம்பர்- டிசம்பர் ( நான்கு மாதங்கள்) நிதிக்கொடுப்பனவு 07-12-2010 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் பதில் துணைவேந்தர் கலாநிதி பிரேம்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டது. இம்மாணவர்களுக்கு இலங்கை நாணயத்தில் ஒரு இலட்சத்து தொன்னூற்றி இரண்டாயிரம் ரூபா (1,92,000.00 ரூபா) வழங்கப்பட்டது. (நிருவாகச்செலவுடன் $977.66) இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர் பதிவாளர் திருமதி நிசாந்தி நிருமதன்,பேராசிரியர் செ. யோகராசா ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்விலும் நிதியத்தின் ஒளிப்படக்காட்சி காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் பின்னர், மாணவி செல்வி ஜெ. ஜெயராதா, செல்வி என். பிராசாந்தினி ஆகியோரை, அவுஸ்திரேலியாவிலிருந்து இவர்களுக்கு உதவும் அன்பர்கள் செல்வி கீர்த்தனா ஆனந்தகுமார் மற்றும் திரு,திருமதி அல்லமதேவன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து உரையாடினர்.


கல்முனை பிரதேச மாணவர்கள்

08-12-2010 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் கல்முனைப்பிரதேசத்;தில் பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயம் மற்றும் இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி பயிலும் நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களுடனும் அதிபர் ஆசிரியர்களுடன் சந்திப்பும் கலந்துரையாடலும் இடம்பெற்றது.

கம்பஹா மாவட்ட நிதிக்கொடுப்பனவு

11-12-2010 ஆம் திகதி நீர்கொழும்பு விஜயரத்தினம் மத்திய கல்லூரியில் அதிபர் திரு. என். கணேசலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், இக்கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகத்திற்குத்தெரிவான மூன்று மாணவிகளுக்கும் கல்லூரியில் பயிலும் மூன்று மாணவர்களுக்கும் முப்பத்தியைந்தாயிரம் ரூபா (35,000.00) ($379.58) வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டம்

யாழ். மாவட்டத்தில் நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களை கண்காணிக்கும் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் பணிமனையில் (Old Park Road, Jaffna) 17-12-2010 ஆம் திகதி சனிக்கிழமை பணிமனை ஊழியர்கள் மற்றும் அபிவிருத்தி நிலைய நிருவாகிகளுடனான கலந்துரையாடலும் தகவல் அமர்வும் நடைபெற்றது. இச்சந்திப்பில் வன்னியிலிருந்து பணியாற்றும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.யாழ். மாவட்ட நிதிக்கொடுப்பனவு

18-12-2010 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்தில் நிதியத்தின் நிதியுதவி பெறும் மாணவர்களின் நிதிக்கொடுப்பனவு நிகழ்வு நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் காலை 10 மணி முதல் மதியம் வரையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு சிறுவர் அபிவிருத்தி நிலையத்தலைவர் திரு. சி.வி.கே. சிவஞானம் தலைமை தாங்கினார். அமைப்புச்செயலாளர் திரு. பால. தயானந்தன் நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்தார். யாழ். மாவட்டத்தில் பல பாகங்களிலுமிருந்து வருகைதந்த நிதியத்தின் உதவி பெறும் மாணவர்களும் புதிய மாணவர்களும் தாய்மாரும் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சிற்றுண்டியும் மதியபோசன விருந்தும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 113 மாணவர்களுக்கான 2010 அக்டோபர்-டிசம்பர் (மூன்று மாதங்கள்) நிதிக்கொடுப்பனவு (நிருவாகச்செலவு உட்பட) மூன்று இலட்சத்து எழுநூற்றி ஐம்பது ரூபா ($3,033.90) வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நிதியத்தின் உறுப்பினர்கள் திரு,திருமதி யோகநாதன், திரு. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகைதந்திருந்தனர். இந்நிகழ்விலும் நிதியத்தின் ஒளிப்படக்காட்சி காண்பிக்கப்பட்டது.

எழுவைதீவு மாணவி

வன்னி யுத்தத்தில் தனது வலதுகாலை இழந்துள்ள மாணவி செல்வி ஜஸிந்தா தற்போது எழுவைதீவு முருகவேள் வித்தியாலயத்தில் கல்வி பயிலுகின்றார். இவருக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து திரு, திருமதி பவானந்தன் நிதியுதவி வழங்குகின்றனர். இம்மாணவி யாழ்.போதனா மருத்துவமனையில் சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 18-12-2010 ஆம் திகதி மருத்துவமனையில் இம்மாணவியின் உடல்நிலை பற்றி விசாரிக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட நிகழ்வு

வவுனியா மாவட்டத்தில் நெலுக்குளம் கலைமகள் வித்தியாலயம் வவுனியா பல்கலைக்கழக வளாகம் மற்றும் வவுனியா மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து வந்துள்ள போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு நிகழ்வு நெலுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மண்டபத்தில் 14-01-2011 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வித்தியாலய அதிபர் திரு. அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா வளாக முதல்வர் திரு. நந்தகுமார் மற்றும் வளாக விரிவுரையாளர் கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன், பதிவாளர் திரு. ஸ்ரீதரன், முன்னாள் கல்வி அதிகாரி திரு. பொன்னையா மற்றும் VOVCOD ஊழியர்கள் உட்பட ஆசிரியர்கள் ஊர்பொதுமக்கள் மாணவர்களின் தாய்மார் கலந்துகொண்டனர். தைப்பொங்கலை முன்னிட்டு அனைவருக்காகவும் பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்பட்டது.

நிதிக்கொடுப்பனவுகள்:

வவுனியா வளாக மாணவர்கள்: (நிருவாகச்செலவு உட்பட) 61,000.00 ரூபா ($639.27)

வவுனியா நெலுக்குளம் கலைமகள் ம. வி. மாணவர்கள் 27,500.00 ரூபா ($293.41)

வவுனியா மாவட்ட மாணவர்கள் 61. 1,90,000.00 ரூபா ($1,849.92)

மாணவர்களுக்கு சீருடைகள்.

வவுனியாவில் இயங்கும் நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின் (VOVCOD) கண்காணிப்பிலிருக்கும் வன்னியில் நடந்த இறுதிக்கட்டப்போரில் பாதிக்கப்பட்ட 62 மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகள் வழங்கப்பட்டன. இதனை எமது கல்வி நிதியத்தின் தற்போதைய தலைவர் திருமதி மதிவதனி சந்திரானந்த் வழங்கியிருந்தார். அவருக்கு நிதியம் மனமார்ந்த நன்றியைத்தெரிவிக்கின்றது.

முல்லைத்தீவு நிகழ்வு

15-01-2011 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்ற நிதிக்கொடுப்பனவு நிகழ்விற்கு கல்லூரி அதிபர் திரு. சிவலிங்கம் தலைமை தாங்கினார் கல்வித்திணைக்களத்திலிருந்து திரு. உதயசங்கர் மற்றும் நிதியத்தின் உறுப்பினர் திரு. சாந்தலிங்கம் (அவுஸ்திரேலியா) டென்மார்க்கிலிருந்து வருகைதந்த நிலக்கிளி அ. பாலமனோகரன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இங்கு பயிலும் போரில் தாய், தந்தையரை இழந்த 23 மாணவர்களுக்கு 2011 ஜனவரி மாதத்திற்கான நிதிக்கொடுப்பனவு 23 ஆயிரம் ரூபா ($209) வழங்கப்பட்டது. இம்மாணவர்களுடன் தைப்பொங்கல் பண்டிகை மிகவும் எளிமையாகக் கொண்டாடப்பட்டது. இம்மாணவர்கள் குறிப்பிட்ட இவ்வைபவத்தில் தெரிவுசெய்யப்படும்வரையில், இவர்களுக்கு உதவும் அன்பர்கள் தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.வவுனியா VOVCOD பணிமனை சந்திப்பு

19-01-2011 ஆம் திகதி வவுனியா VOVCOD பணிமனையில் நடைபெற்ற சந்திப்பில், இந்த அமைப்பின் ஊடாக உதவிபெறும் போரில் நேரடியாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் விதவைத்தாய்மார் கலந்துகொண்டு தங்களது தேவைகளை தெரிவித்தனர். இவர்களது பிள்ளைகளின் விசேட பயிற்சி வகுப்புகள் தொடர்பாகவும் சில மாணவர்களுக்கு பாடசாலை செல்வதில் எதிர்நோக்கப்படும் போக்குவரத்துப்பிரச்சினைகள் பற்றியும் ஆராயப்பட்டது. நிதியத்தின் உதவிபெறும் வவுனியா வளாக மாணவர்கள் சிலர் இம்மாணவர்களுக்கு விசேட வகுப்புகளை நடத்துவதற்கு முன்வந்திருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சில மாணவர்களின் போக்குவரத்துத்தேவைகளுக்காக துவிச்சக்கர வண்டிகள் பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

முக்கியகுறிப்பு:

இந்தப்பயணத்தில் இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நூற்றுக்கணக்கான போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களை மாத்திரம்தான் நேரில் சந்தித்து உரையாட சந்தர்ப்பம் கிடைத்தது. மேலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உதவிக்காக காத்திருக்கின்றனர். குறிப்பாக கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் எமது கல்வி நிதியத்தின் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படவேண்டும். தாய், தந்தையரை இழந்த மாணவர்கள் உறவினர்களின் பராமரிப்பிலேயே வாழ்கின்றனர். இவர்கள் தங்குதடையின்றி தமது கல்வியைத்தொடருவதற்கு இம்மாணவர்கள் பயிலும் பாடசாலைகளில் மாணவர் விடுதிகள் அமைக்கப்படுவதன் மூலம் எதிர்நோக்கப்படும் நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்படலாம். எனவே அதற்கான வழிவகைகளையும் ஆராயவேண்டும்.

புதிய மாணவர்கள் : போரில் பாதிக்கப்பட்ட பல மாணவர்களின் உதவிகோரும் விண்ணப்பங்கள் அன்பர்களின் உதவிக்காக காத்திருக்கின்றன. உதவவிரும்பும் அன்பர்கள் தாமதமின்றி தொடர்புகொள்ளவும். மேலே குறிப்பிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் கல்வி நிதியத்தின் துணை நிதிச்செயலாளர் திரு. லெ. முருகபூபதி கலந்துகொண்டார்.


Ceylon Students Educational Fund (Inc)
Bank Details
A/C Name: Ceylon Students Educational Fund (inc)
Bank: Commonwealth Bank of Australia
Branch: Brunswick, Victoria 3056, Australia
BSB No: 063 111
A/C No: 1063 4651
Postal Address: CSEF, P.O.Box: 317, Vic- 3056, Australia
Mrs. Mathivathani Chandrananth (Chairman ) (03) 9708 1218
Ms.Sabeena Ulaganathan (Secretary) (03) 8351 9265
Mrs. Vithya Sriskantharajah (Treasurer) (03) 9444 6916


No comments: