குடியேறியவர்களின் தேசமா இந்தியா


.

                                                                               சத்யானந்தன்

தமிழ் நாட்டில் ஆரிய திராவிட பேதம் பேசிய திராவிடக் கட்சிகள், வட இந்தியாவில் ஹிந்துத்வம் பேசி வரும் அமைப்புகள் இவர்கள் கட்டமைத்த இந்திய அடையாளம் என்னும் பிரம்மாண்டம் ஒரு பலூனைப் போலத் துளைக்கப் பட்டு விட்டது.

இணைய தளம் தவிர ஊடகங்களில் அல்லது வேறு எந்த மன்றத்திலும் சாத்தியமில்லாதது தமிழ் அல்லது இந்திய அடையாளம் எது என்பது பற்றிய விவாதம்.



எனவே தான் அடையாளம் பற்றிய ஒரு தருக்க ரீதியிலான தீர்ப்பை உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ளது. 5.1.11 அன்று வெளியான இந்தத் தீர்ப்பு இந்திய வரலாறு பற்றிய கள ஆய்வு, ஆவணம் மற்றும் புரிதல் தொடர்பான இயங்குதலில் ஒரு திருப்பு முனை.

தலித்துகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளில் அனேகத்தில் புகார் பதிவே நடைபெறுவதில்லை. குற்றப் பத்திரிக்கை வழக்கு என வந்தால் ஒரே காரணம் ஊடகத்தில் வெளிவந்து வேறு வழியின்றிப் போனதே. (ஊடகங்கள் தலித்துகளுக்கு எதிரான திசையில் மட்டுமே செல்பவை. சலசலப்புக்கான ஒரு கதையாகவே தலித்துகளின் அவலங்களை அவை தேர்வு செய்யும்)

13.5.94 அன்று நந்தாபாய் என்னும் ஆதிவாசிப் பெண் (பில் என்னும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்) மகராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் அஹமது நகர் என்னும் ஊரில் நிர்வாணமாக இழுத்துச் செல்லப் பட்டு அடித்து அவமானப் படுத்தப் பட்டார். ஒரு மேல் சாதி இளைஞர் இவரைத் திருமணம் செய்து கொள்ளாமல் இவருடன் வாழ்ந்து முதலில் ஒரு குழந்தையைத் தந்து பின்னர் மறுபடியும் அவரைக் கருவுறச் செய்தார். அப்போது அந்த ஆணின் குடும்பம் அந்த ஆளுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்த போது தலித் பெண்ணுக்கு இத்தகைய கொடுமை அரங்கேற்றப் பட்டது.

'செஷன்ஸ் கோர்ட்' டில் இந்தக் கொடூரச் செயலைச் செய்த நால்வருக்கு "Scheduled Caste and Scheduled Tribes (Prevention of Atrocities) Act 1989" ன் கீழும் IPCயிலும் மூன்று தனித் தனி தண்டனையாக மொத்தம் நான்கரை ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் அப்பீல் செய்த குற்றவாளிகள் உயர்நீதிமன்றத்தில் இதை வெறும் IPCன் கீழ் வரும் குற்றமாகக் கருதச் செய்து நான்குபேருக்கும் தலா ரூ.5000 அபராதம் (அந்தப் பெண்ணிடம் வழங்கப்பட) என்னும் அளவு எளிய தண்டனை பெற்றதுமன்றி அதை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். (Scheduled Tribe அத்தாட்சி பாதிக்கப்பட்ட பெண்ணால் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க இயலவில்லை என்பதே உயர் நீதி மன்றம் குறிப்பிட்ட காரணம்.)

நால்வரது மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்து வழங்கிய தீர்ப்பில் உயர் நீதி மன்றம் எப்படி இதை “Scheduled Caste and Scheduled Tribes (Prevention of Atrocities) Act 1989” ன் கீழ் விசாரிக்கத் தேவையில்லை என்று கருதியது என்பதை வினவியதுடன் இந்தியாவின் இந்தியரின் பூர்வீகம் பற்றிய ஆழ்ந்த ஆராய்ச்சி பூர்வமான பதிவுகளைச் செய்துள்ளது. பின்வரும் இப்பதிவுகள் ஆணித்தரமானவை. “ World Directory of Minorities and Indigenous People” ன் ஆதாரப்படி 'பில்' (Bill) என்னும் பூர்வகுடியினர் (Aborigines) 17ம் நூற்றாண்டில் ஈவிரக்கமின்றி தண்டிக்கப்பட்டும் கொல்லப்பட்டும் அழிவுற்றனர். 'பில்' போன்ற பூர்வ குடியினர் இந்தியாவின் உண்மையான மூத்தகுடிகளுமானவர் 8% மட்டுமே. 92%ஆன ஏனைய இந்தியர் வெளியிலிருந்து இந்தியாவுக்குள் வந்தவரே. வட அமெரிக்காவில் தற்போது உள்ளவருடன் ஒப்பிடத்தகுந்தவரே 92%ஆன ஏனைய இந்தியர். வட அமெரிக்காவுக்கு உள்ளே வந்தவர் 400 500 வருடத்துக்குள் வந்தவர் என்றால் பழங்குடி அல்லாத இந்தியர் 10000 வருட காலத்துக்கு முன் வந்தவர்.

உலக வரலாற்றில் மக்கள் வளமான வாழ உகந்த இடங்களை நோக்கி கடினமான சூழல்களிலிருந்து பெயர்ந்து செல்வது எப்போதும் நடந்திருக்கிறது. நீண்ட சமவெளிகள் விவசாயத்திற்குத் தோதாக அன்னிய தேசத்தவரை ஈர்த்தன.

உருதுக்கவி 'ஃபிரக் கோரக்புரி'யின் கவிதையில் " ஹிந்த் என்னும் நிலப்பிரதேசத்திற்கு உலகின் பிறபகுதி மக்கள் கூட்டமாக வந்து ஹிந்துஸ்தானத்தை உருவாக்கினர்." எனவும் Cambidge History of India நூலில் திராவிடர் இந்தியப் பூர்வ குடியினரிடமிருந்து வேறு பட்டவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பூர்வ குடியினர் குள்ளமான தோற்றமும் அகன்ற மூக்கும் உடையவர். இவர்களது பாரம்பரியத் தொடர்பு ஸ்ரீலங்காவின் வெட்டாக்கள் செலபஸ் பகுதியின் தளாக்கள், சுமத்ராவின் படின்கள் மற்றும் ஆஸ்திரேலியப் பழங்குடியினருடன் ஆனது.

குடியேறிய திராவிடர்கள் சமவெளியிலும் பூர்வ குடியினர் மலைகளிலும் வாழ்ந்தனர். காலப்போக்கில் தம் மொழி மற்றும் பழக்க வழக்கங்களை ஆக்கிரமிப்பாளரிடம் பறி கொடுத்தனர் பழங்குடியினர். ஒரு கலப்புக் கலாசாரத்திற்குப் பழகினர். குறிப்பாகத் தென்னிந்தியாவில் இக்கலப்படம் கிட்டத்தட்ட முழுமையடைந்தது. திராவிடர் இந்தியப் பூர்வ குடியினர் அல்லர் என்பதற்கான மற்றொரு காரணம் ஆஸ்திரிய மொழியின் கூறுகள்
திராவிட மொழிகளில் மட்டுமன்றி இந்திய மொழி பலவற்றிலும் உண்டு. "முண்டா" என்னும் பழங்குடியினரின் மொழியை திராவிட மொழி பாதித்துள்ளது. இந்திய மொழிகள் பலவும் ஆஸ்திரிய மொழி இந்திய ஐரோப்பிய இந்தியச் சீன மொழிக் கலப்பும் பெற்றுள்ளன. காலப்போக்கில் திராவிடருக்கும் "முண்டா" மொழி பேசிய பழங்குடியினருக்கும் சில உருவ ஒற்றுமைகளும் தென்பட்டன. வட இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் திராவிட மற்றும் இந்திய ஐரோப்பிய வழியாக ஐரோப்பிய அலை வீசிய போது ஆரியர்கள் வடமேற்கு இந்தியா வழியாக ஐரோப்பிய மொழிக் கூறுகளையே கொணர்ந்தனர்.

ஆரியருக்கு முன்னரே திராவிடர் இங்கே இருந்திருந்தாலும் திராவிடர் பூர்வகுடி என்று சொல்ல ஏதுமில்லை. திராவிடர் எங்கிருந்து வந்தார்கள் என்னும் கேள்விக்கான பதிலில் "பிராகுயீ" என்னும் தீவின் பெயர் கண்டிப்பாக வரும். இது பலூசிஸ்தானின் மலைகளுக்கு இடைப்பட்டதாகும். மேற்கு வழியே இந்தியத் துணைக் கண்டம் வந்தவரது வழியில் உள்ளது இந்தப் பிரதேசம்.

ஏன் திராவிடர் இந்தியாவிலிருந்து பலூசிஸ்தான் சென்றிருக்கக் கூடாது என்னும் தருக்க அடிப்படையிலான கேள்விக்கான விடை இந்தியர் ஆதிகாலம் தொட்டே வந்தாரை வரவேற்றவரே ஒழிய வெளிச்சென்று அரசுகளை நிலங்களைக் கைப்பற்றியதே இல்லை.

"முண்டா" மொழி பேசிய பழங்குடியினர் பெரிதும் சோடாநாக்புர் (ஜார்க்கண்ட்), சத்தீஸ்கர், ஒரிஸ்ஸா, மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் உள்ளனர். உதகமண்டலத்தின் தோடர்களும் அந்தமான் பகுதியின் கோண்ட் சந்தால் மற்றும் மஹாராஷ்டிராவின் 'பில்'
இனத்தாரும் பூர்வகுடியினரே.

எனவே குடியேறியவரின் 92% ஆக்கிரமிப்பில் உள்ளதே தற்போதைய இந்தியா. பண்பாடு, தோற்றம், மொழி, உணவு, உடை எனப் பல விதங்களிலும் வேறுபட்ட மக்களில் நீக்ரோ, ஐரோப்பிய, மங்கோலிய அடையாளம் உடைய இந்தியர்களையும் காண முடிகிறது. நம்மைவில் நிலப் பரப்பிலும் மக்கட்தொகையிலும் பெரியதான சீனாவை ஒப்பிட்டால் அங்கே 95% மக்கள் மங்கோலியத் தோற்றம் உடையவர். மாண்டாரின் சைனீஸ் என்னும் எழுத்து வடிவைப் பயன்படுத்துகின்றனர். ஹான் சைனீஸ் என்னும் இனப்பிரிவிலேயே 95% சீனர்கள் அமைகின்றனர். இவ்வாறாக ஒரே பூர்வீகமும் இனமும் கொண்டவர் சீனர்.

இந்தியாவோ வெவ்வேறு பண்பாட்டையும் நம்பிக்கைகளையும் மொழிகளையும் கொண்டது. அரசியல் சாசனமே அனைவரையும் ஒரே நாடாக இணைக்கிறது.

பூர்வகுடியினரான பழங்குடியினருக்கு இழைக்கப்படும் அநீதிகள் அரசியல் சாசன விதிகளை மீறி இன்றும் தொடர்கின்றன. 'பில்' இனத்தவரின் வீரத்தை ராணா ப்ரதாப் சிங் பாராட்டியிருக்கிறார். ஆனால் அம்மக்களை அசுரர் என்றும் ராட்சசர் என்றும் வேட்டையாடிய சரித்திரமும் இருக்கிறது.

மகாபாரததில் ஏகலைவனுக்கு துரோணர் இழைத்த அநீதி பழங்குடியினரை நாம் எப்படி நடத்தி வந்திருக்கிறோம் என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டு.

அவனுக்கு எதுவும் சொல்லித் தராமல் அவனது கட்டை விரலையே 'குரு தக்ஷிணை'ாகக் கேட்டது எவ்வளவு அவமானகரமானது?

பழங்குடியினர் பிறரை விடவும் நேர்மையுடனும் உண்மையுடனும் நற்பண்புகளுடனும் விளங்குவதை பெரும்பாலும் காண்கிறோம். ஏனையரது குற்ற நடவடிக்கைகள் இவரோடு ஒப்பிட மிகமிக அதிகம்.

காலங்காலமாய் பழங்குடியினருக்கு நாம் இழைத்த அநீதியை சரி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

மேதகு நீதிபதிகள் தமது கருத்துக்கள் ஆராய்ச்சிக்கு உரியவை என்று குறிப்பிட்டாலும் பல பொதுத் தன்மைகளை நாம் ஆரிய திராவிடரிடையே காண்கிறோம். புருஷார்த்தங்கள் தர்ம, அர்த்த, காம, மோட்சம் என்பது உபநிடதக் கருத்து. அறம் பொருள் இன்பம் என்றார் வள்ளுவர். ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் எனும் சிலப்பதிகாரப் பா கர்ம வினை என்னும் ஹிந்து நம்பிக்கையே. பசு வழிபாடு மற்றொரு பொது அடையாளம்.

அவ்வளவு தூரம் எதற்கு? ராமாயண கால பாணியில் அரசியல்வாதியும் சினிமாத்துறைக்காரரும் தனது ஆண் வாரிசுக்கு முடி சூட்டி மகிழ்வதில்லையா இன்றும்?

தனது பாரம்பரியப் பெருமை பேசும் அதிகார மைய்யங்கள் சமூக நீதி பெண்ணுரிமை மற்றும் மனித நேயம் நோக்கி ஏன் நகருவதில்லை?

உச்ச நீதிமன்றத்தீர்ப்பு இக்கேள்விக்கான விடைகளுள் ஒன்று

Nanri thinnai.com

1 comment:

kirrukan said...

[quote]இவர்களது பாரம்பரியத் தொடர்பு ஸ்ரீலங்காவின் வெட்டாக்கள் செலபஸ் பகுதியின் தளாக்கள், சுமத்ராவின் படின்கள் மற்றும் ஆஸ்திரேலியப் பழங்குடியினருடன் ஆனது.[/quote]

சிறிலங்காவின் பூர்விக குடிகளுக்கு சரித்திரம் இருக்கு திராவிடர் வந்து ஏறு குடிகள் .....நல்ல கட்டுரை ஆய்வுங்கோ.....தமிழன் மீது தமிழன் கோபப்படலாம் அதற்க்காக இப்படியா?