புத்தாண்டே நீ மலர்வாய் - கவிதை- செ.பாஸ்கரன்

.

நம்பிக்கையோடு வரவேற்ற 2010
இன்றுடன் நிறைவடைகிறது
நேற்றுப்போல் நெஞ்சில் தெரிகின்ற
அந்த நாளின் நினைவுகள்
மறையாத வண்ணங்களாய்
மனதில் இருக்கும்போதே
மற்றோராண்டு பிறந்து வருகிறது
பிள்ளையின் கைபிடித்து 
நடைபயிற்றுவித்த நாட்களைப்போல்
விரைந்து சென்றுவிட்ட வருடமும்
என்னால் மறக்கமுடியாததுதான்
மகிழ்வு மட்டுமல்ல துயரமும் கலந்ததுதான்
அந்தவருடம் - இருந்தாலும்
மனதில் நிலைத்து நிற்பவைகள்
சத்தமில்லாத சங்கீதமாய்
ஒலித்துக்கொண்டிருக்கும்
பசுமை நினைவுகள் மட்டும்தான்


தூரதேசத்து உறவுகளின் ஒன்று கூடலும்
பிரிந்துவிட்ட நண்பர்களின் மீள்சேர்க்கையும்
இருண்ட வானில் ஒளிக்கீற்றென
மின்னிக் கிடப்பவை
ஊரின் அழிவோடு
உருக்குலைந்த உறவுகளின்
ஓலமும் கண்ணீரும் கூட
ஒரு நொடிப்பொழுது
உயிரை உலுக்கிவிட்ட அவலம்
கழிகின்ற ஆண்டு காவிச் செல்லட்டும்
மீண்டுமொருமுறை
நான் நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்
புலர்கின்ற புத்தாண்டு
புதுப்பொலிவை அள்ளி வரட்டும்
தென்றலின் வாசத்தையும்
தேசத்தின் எழுச்சியையும்
பறையறைந்து பள்ளுப்பாடட்டும்
விடியலும் வெளிச்சமும்
எனக்கு மட்டுமல்ல
ஊரெங்கும் அள்ளித் தெளிக்க
ஆவலோடு காத்திருப்பேன்
புத்தாண்டே நீ மலர்வாய்
மீண்டுமொரு புது வசந்தமாய்
நாம் மகிழ்ந்து வாழ
புதிய நடை நீபோடு
கண்கள் உறங்காமல் காத்திருப்பேன்
பச்சை வயற்பரப்பில்
பாடித்திரிந்த காலமென
என் நினைவுகளில் நின்றிருந்த காலம்போல்
நீயும் என் நினைவுகளில்
தரித்து நிற்கும் ஆவலுடன்
உனைப்பார்த்திருப்பேன்
நீ மலர்வாய்.



No comments: