சுனாமியே வா!
மீண்டும் ஒருமுறை வா!!
சுனாமியே இனியும் பொறுக்க முடியவில்லை
சுறுக்காய் ஒருமுறை நீமீண்டும் வந்துவிடு
கணக்கு முடிக்கும் கடமை உனக்கு இங்கே
கனக்கவுண்டு ஒருமுறை வா!
முன்னர் சென்ற எந்த மூலைக்கும் போகாதே
இன்னும் விழுந்தவர்கள் எழமாட்டா திருக்கும் அந்த
மண்ணுக்குச் செல்லாதே, வா இங்கே கெதியாய் வா!
புலம்பெயர்ந்த தமிழர்களில் போக்கிரிகள் யாரென்று
இனங்காட்டி இழுத்துச் செல்! இங்கே வா!
எந்தத் தவறையும் இழைத்தோரை விட்டிடலாம்
வந்த நிவாரணத்தை வழியிலே தடுத்தவரைக்
கொன்று சிதைத்துக் குழியிலே புதைத்துவிடு
வாரிச்சுருட்டி வருமானம் எடுத்தவரை
வாரி நீ இழுத்து உன் வயிற்றில் நெரித்துவிடு
வாரிசுகளுக்குப் பகிர்ந்தவரை
நேரிரண்டாய் வகிர்ந்துவிடு
இந்தவகை செய்த எந்த மனிதருக்கும் இரங்காதே
இழுத்துச் சென்று காறி உமிழ்ந்துடலை
கரையில் எறிந்துவிடு.
கூவிஅழைத்து மக்களிடம் நன்கொடைசேர்த்துவிட்டுக்
கொமிசன் பெற்றவரைத்
தாவிப்பிடித்துத் தலையைத்திருகி
தரையில் வீசிவிடு
கழகங்கள் சேர்த்தபணக் காசோலையைக்
கச்சிதமாய் தமது வங்கிக் கணக்கில் போட்டு
ஊருக்குப் பணம் அனுப்பிப் பலருக்கு உதவியதாய்ப்
போலிக்கணக்கெழுதி போட்டோ பிரதிகாட்டுகின்ற
ஊழல்பெருச்சாளிகளின் உயிர்குடிக்க ஒருமுறைவா!
கொல்லப்பட்டாரெங்கள் குடும்பத்தவர் என்று
வெள்ளைக்காரனிடம் இலவச விமானச் சீட்டினை
பல்லைக்காட்டிப் பௌவியமாய் இரந்து வாங்கி
உல்லாசப்பயணம் செய்த உலுத்தர்களை
கொல்லாமல்விட்டால் கொடுமை, வந்துவிடு!
உன்னால் அகதியானோர்க்கு உதவவென்று உலகமெல்லாம்
தம்மால் ஆனவற்றை மக்கள் தானமாய்த் தந்தார்கள்
சேர்ந்த பணத்தையெல்லாம் அந்த மக்களுக்குச்
சேராமல் தடுத்தோரை
சாட்சியில்லை யாரும் என்றெண்ணித்
தமக்காய் எடுத்தோரை
நாராய்க் கிழித்து நரம்பும் எலும்புகளும்
கூறுபலவாகிடவே கொண்டுபோக ஒருமுறை வா
ஊரும் உலகும் தீயோரை உணரட்டும்
உன்பழியும் சிறிதே அதனால் தீரட்டும்
ஓங்கி எழுந்து ஒருமுறை வா!
No comments:
Post a Comment