மன்னார் சிறுவர் இல்ல சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்; பாதிரியார் கைது
மன்னார் முருங்கன் பகுதியிலுள்ள சிறுவர் இல்லமொன்றைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக தேடப்பட்டு வந்த பாதிரியார் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை  ஆஜர்படுத்தப்பட்டார். அதையடுத்து,  குறித்த பாதிரியாரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்ற நீதவான் திருமதி கே.ஜீவரானி உத்தரவிட்டார்.



  இச்சிறுவர் இல்லத்தினை சேர்ந்த இரண்டு சிறுமிகள் குறித்த பாதிரியாரினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக மன்னார் நீதிமன்றில் கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதி வழக்குத் தொடரப்பட்டது.  அதையடுத்து குறித்த பாதிரியாரை கைது செய்யுமாறும் அச்சிறுவர் இல்லத்தினை மூடி அங்குள்ள சிறுவர்களை பாதுகாப்பான சிறுவர் இல்லங்களில் ஒப்படைக்குமாறும் அதிகாரிகளுக்கு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதையடுத்து தலைமறைவாகி இருந்த அப்பாதிரியார் இந்தியாவில் இருந்து கடந்த 24ஆம் திகதி கொழும்புக்கு வந்த போது நீர்கொழும்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு மன்னார் பொலிஸானுடாக மன்னார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.



வவுனியா சிறையில் 84 கைதிகள் சகாக்களால் பணயக்கைதிகளாக்கப்பட்டனர்
வவுனியா சிறைச்சாலையில் 84 கைதிகள் 11 கைதிகளால் பணயக் கைதிகளாக்கப்பட்டுள்ளனர். வவுனியா வைத்தியசாலையிலிருந்து அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட தமது குழுத் தலைவர் சசியை மீண்டும் வவுனியாவுக்கு மாற்றக்கோரியே இப்பணய நாடகம் இடம்பெற்றுள்ளது. மன்னாரில் சிறுமியொருத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதிரியார் ஒருவரை சசி எனும் கைதி தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அதையடுத்து சசி அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.  சசி தலைமையில் 11 கைதிகள் பாதிரியாரை தாக்கியதாகவும் ஆனால் மற்றொரு குழுவினர் பாதிரியாரை பாதுகாக்க முன்வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் இரு தரப்பிற்கும் இடையில் மோதல் மூண்டது. மேற்படி தாக்குதலின் போது பாதிரியார் உட்பட 3 கைதிகள் காயமடைந்து வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாகவே சசி அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி. சில்வா தெரிவித்துள்ளர். அதேவேளை வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணயம் வைக்கப்பட்டுள்ள கைதிகளை மீட்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக சிறைச்சாலைக்கு வந்ததாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் பணய விவகாரம் தொடர்வதாகவும் அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்
Nanri thenee

No comments: