புராதன இலங்கையில் பௌத்த பிக்குகளும் பௌத்த சங்கமும் - பாகம் 03 - சாந்தினி அருளானந்தம் யாழ் பல்கலைக்கழகம்

.

பௌத்தர்களின் வழிபாட்டு மையமாக தூபிகளும், விகாரைகளும் விளங்குகின்றன. சிறப்பாகத் தூபி வழிபாட்டு இடமாகவும், விகாரை பௌத்த துறவிகள் தங்குகின்ற இடமாகவும், கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் மையமாகவும் காணப்படுகின்றது.

பாளிஇலக்கியங்கள் தேவநம்பியதீச மன்னன், மகிந்ததேரரும் அவரது குழுவினரும் தங்குவதற்காக மகாவிகாரையைக் கட்டிக்கொடுத்தான் எனக் கூறுகின்றன.

இவ்விகாரையே இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது விகாரையாகும். இதனையடுத்து இலங்கையின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்பவர்கள் விகாரைகள், தாதுகோபுரங்கள் முதலியவற்றை நிறுவுவதையும், பிக்குகளை ஆதரிப்பதையும் பிரதான கடமையாகக் கருதிச் செயற்பட்டனர்.

ஓர் ஆட்சியாளன் தனது பதவியை நிலைநாட்ட இப்பணிகளை மேற்கொள்ளவேண்டியிருந்தது. மகிந்ததேரர் இலங்கைக்கு வந்த புதிதில் ஆண்களே பௌத்த துறவிகளாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

தேவநம்பியதீசனின் தம்பியின் மனைவியாகிய அனுலா 500 தோழிகளுடன் பிக்குணியாவதற்கு விரும்பினாள். அதனை அறிந்த மகிந்த தேரர் தனது சகோதரியாகிய தேரி சங்கமித்தையே பெண்களைப் பிக்குணிகளாக்குவதற்குப் பொருத்தமானவள் என்றும் , பேரரசனுக்குத் தூதுக்குழுவை அனுப்புமாறும் ஆலோசனை கூறினார்.

இதன் பிரகாரம் புத்தர் ஞானம்பெற்ற போதி மரக்கிளையுடன் இலங்கையின் வடபகுதியிருந்த ஜம்புக்கோளப் பட்டினத்தினூடாக சங்கமித்தை அநுராதபுரத்தை வந்தடைந்ததாகவும், மகாமேகவனம் உள்ளிட்ட பல இடங்களில் அக்கிளை நாட்டப்பட்டதாகவும் மகாவம்சம் கூறுகின்றது.

இதனைத் தொடர்ந்து அனுலாவும் அவளுடன் 500 பெண்களும் பிக்குணிகளாக்கப்பட்டனர். இதன்மூலம் இலங்கையின் வரலாற்றில் முதன் முதலாகப் பெண்கள் பிக்குணிகளாக சங்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டதைக் காணலாம்.

அதேவேளை அரசமரத்தை நாட்டி வழிபடும் மரபு பௌத்தத்தில் பிரதான இடத்தைப் பெற்றிருப்பதை இன்றுவரைக் காண்கின்றோம்.

ஏறக்குறைய 1300 ஆண்டுகால வரலாற்றுப் பெருமைமிக்க அநுராதபுர காலத்தில் அறிமுகமாகிய பௌத்தம் இலங்கையின் அரச சமயம் என்ற அந்தஸ்தைப் பெற்றதுமன்றி, பௌதத்தை, பௌத்தசங்கத்தை ஆதரிப்பவரே இலங்கையின் அரசபதவியை நிலைநிறுத்த முடியுமென்பதையும் , பிற்காலத்தில் புனித தந்ததாதுவினை யார் வைத்திருக்கின்றாரோ அவரே நாட்டின் ஆட்சியாளராகலாம் என்பதையும் நிலைநிறுத்தியது.

இத்தகைய பின்னணியே இன்றும் இலங்கையின் அரசியலில் பௌத்தசங்கமும், பௌத்ததுறவிகளும் முக்கியத்துவம் பெறுவதற்கு காரணமாக இருந்து வருகின்றது.

முற்றும்.


நன்றி யாழ் மண்

No comments: