.
இலங்கையிலிருந்து குடியுரிமை கோரி, அவுஸ்திரேலியா வரும் அகதிகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து மாதங்களாகக் கணிசமான அளவு குறைந்துள்ளது. எனவே குடியுரிமை கோரும் அகதிகளின் விண்ணப்பங்களைப் பரீசீலனை செய்வதை நிறுத்துவதற்கு முடிவெடுத்துள்ளதாக அவுஸ்திரேலிய தொழிற்கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 9ஆம் திகதியிலிருந்து அவுஸ்திரேலியாவை வந்தடைந்த 49 படகுகளில் மூன்று படகுகள் இலங்கையிலிருந்து வந்தவை. இது குறித்த பரீசீலனை ஜூலை மாதம் தொடங்கியது. இதன் பிறகு இலங்கையிலிருந்து எந்தப் படகும் அவுஸ்திரேலியா வரவில்லை.
இலங்கையில் சமாதான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதன் காரணமாக இம்மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என குடிவரவு மற்றும் கலாசார கூட்டிணைப்பு கல்வி நிலையப் பணிப்பாளர் ஜேம்ஸ் ஜூப் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான 26 வருடகால யுத்தம் கடந்த ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
அகதிகளாக வருவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனினும் இலங்கையில் போரினால் கிராமங்களும் குடியிருப்புக்களும் அழிந்துள்ளதால் மக்கள் இன்னமும் முகாம்களிலேயே தங்க வேண்டியுள்ளது என ஜேம்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே நேற்று மற்றுமொரு படகு 33 பயணிகளுடனும் 2 மாலுமிகளுடனும் கண்டுபிடிக்கப்பட்டதாக குடிவரவு திணைக்கள அதிகாரி ஸ்கொட் மெரிசன் தெரிவித்துள்ளார்.
அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்,
"ஒரு நாட்டிலிருந்து படகுகளின் வருகை குறையும் போது, இன்னொரு நாட்டிலிருந்து சட்ட விரோத குடியிருப்பாளர்களின் வருகை அதிகரிக்கிறது" என்றார்.
அதேவேளை, ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் அகதிகளை தடைசெய்வதை நிறுத்துமாறு ஐ.நா மனித உரிமை ஸ்தாபனம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கான ஊக்குவிப்பு காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment