இலங்கையில் தமிழர் பிரதேசங்கள் - பாகம் 04

.


நாகர்களுக்கும் தென்னிந்தியாவில் வழங்கி இலங்கையிற் பரவிய பெரும் கற்படைப் பண்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று கருதப்படுகிறது. இலங்கை வரலாற்றில் பெரும் கற்படைக் காலப் பண்பாடு பரவியதன் விளைவாக நாகரீக வளர்ச்சி ஆரம்பமாகியது.


இந்தப் பண்பாட்டின் செல்வாக்கு கிறிஸ்துவுக்கு முன் 5ஆம் நூற்றாண்டளவில் ஏற்பட்டது எனக்கருதலாம். பெரும் கற்படைக் கால பண்பாடு என்பது தென்னிந்தியாவில் கி.மு. ஆயிரமாம் ஆண்டளவில் ஆரம்பமாகிப் பரவியதொன்றாகும்.




அது கர்நாடக தேசத்திலிருந்து தெற்கு நோக்கிப் பரவித் தமிழகத்திலும் கேரளாவிலும் ஆந்திர தேசத்தின் சில பாகங்களிலும் பெரும் செல்வாக்கினை ஏற்படுத்தியது.

இப்பண்பாட்டைச் சேர்ந்த மக்கள் இரும்பின் உபயோகத்தை இப்பகுதிகளில் அறிமுகம் செய்தார்கள்.



தமிழகத்திலும் இலங்கையிலும் கர்நாடகத்திலும் புழக்கத்தில் உள்ள கத்தி, ஈட்டி, வாள் முதலிய கருவிகள் பெருமளவிற்கு வடிவமைப்பிலும் அளவிலும் பெரும் கற்படைக் காலத்தில் ஈமக் கல்லறைகளிற் கண்டெடுக்கப்பட்டனவற்றை ஒத்துள்ளன.

பெரும் கற்படைக் காலத்துப் பண்பாட்டு அம்சங்களை அவர்களின் ஈமக் கல்லறைகள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் பல விதமான ஈமச் சடங்குகளை வேறு வேறு கோலங்களில் அமைத்த கல்லறைகள், தாழிகள் போன்றவற்றில் பயன்படுத்தியுள்ளனர்.

பதுக்கை, கல்திட்டை, கல்வட்டம், குடைக்கல், ஈமத்தாழி, ஈமப் பேழை என்பன அவர்களாற் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், சில கல்லறைகளின் அண்மையில் நெடுநிலை என்று சொல்லப்படும் மிக உயரமான நடுகற்கள் காணப்படுகின்றன. இப்பண்பாட்டினுடைய அடையாளங்களாக அமைவன இரும்புக் கருவிகள், கருஞ்செம்மண் கலங்கள் ஆகியனவாகும்.

அவர்கள் கல்லறைகளிலே இறந்தோரின் சடலங்களைச் சில சமயம் முழுமையாகப் புதைத்தனர். சில சமயங்களில் ஈமத்தாழிகளில் சடலங்களை வைத்து அவற்றைப் புதைத்தனர்.

இறந்தவர்களின் சமுதாய நிலைக்கேற்ப சடங்குகளில் வேறுபாடுகள் ஏற்பட்டன. தலைவர்கள், வீரர்கள் இறக்குமிடத்து வாள்களை வைத்து அவற்றின் மேல் சடலத்தை வைத்தார்கள்.

தலை மக்களின் சடலங்களைப் புதைத்த இடங்களிலே நெடுநிலை அல்லது நடுகற்களை நிறுத்தினார்கள். இந்தப் பண்பாடு பரவியதன் காரணமாகக் கிராமிய வாழ்க்கை உற்பத்தி முறை என்பன வளர்ச்சியடைந்தன.

ஈமக் காடுகளுக்கு அண்மையில் அமைந்த சில குடியிருப்புக்களில் பல்லாயிரவர் செறிந்து வாழ்ந்தனர். வேளாண்மையும் வாணிபமும் கைத்தொழில் முறைமையும் விருத்தி பெறுவதற்கு இவர்களே காரணமாயிருந்தனர்.

இரும்புக் கருவிகளை உற்பத்தி செய்வதாற் காடுகளை அழித்து அல்லது காடுகளை வெட்டிப் பரந்த அளவில் வயல் நிலங்களை உருவாக்கினார்கள்.

பெரும் மரங்களை வெட்டிப் பெரும் கட்டிடங்களை அமைக்க முடிந்தது. கடற் பிரயாணங்களுக்கு வேண்டிய நாவாய்களையும் அவர்களாற் செய்து கொள்ள முடிந்தது. மீன்பிடித் தொழில், நீண்ட கடற் பிரயாணங்கள் என்பவற்றிலும் ஈடுபாடு கொண்டனர்.

இந்தப் பண்பாட்டையுடைய மக்கள் கடல் வழியாக இலங்கையை அடைந்தனர். முத்து, சங்கு முதலான கடல் வளங்களும் இரத்தினங்கள் போன்ற மலை வளங்களும் தேக்கு, முதிரை, கருங்காலி போன்ற காட்டு வளங்களும் அவர்களைக் கவர்ந்தன.

தென் இந்திய அல்லது தமிழகக் கரையோரங்களில் இருந்து இலங்கையின் கரையோரங்களுக்கு அவர்கள் சென்று குடியேறினார்கள். அவ்விதமான குடியேற்றங்களின் அடையாளங்கள் புத்தளம், மாந்தை, கந்தரோடை, கதிர்காமம், உகந்தை, கதிரவெளி, அநுராதபுரம் போன்ற இடங்களிற் கிடைத்துள்ளன.

இலங்கையில் இன்னும் வேறு பல இடங்களிலும் அவை காணப்படுகின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் அதற்கண்மையில் உள்ள தீவுகளிலும் முதன்முதலாகக் குடியேறிவர்கள் தமிழகத்தில் இருந்தும் சென்ற பெரும் கற்படைக் காலத்து மக்கள் என்பது இப்பொழுது தெளிவாகியுள்ளது.

அங்கு பழைய கற்காலத்தவர்களும் குறுணிக் கற்காலத்தவர்களும் வாழ்ந்தமைக்கு சான்று இல்லை. இரும்பு ஆயுதங்களால் நிலத்தை வெட்டி கிணறுகளை அமைத்து நீரை பெற்றுக்கொள்ளும் ஆற்றல் கொண்டிருந்ததனாற் பெரும் கற்படைக் கால மக்கள் அங்கு குடியேறினார்கள்.

இலங்கையின் வடமேற்கிலும் கிழக்கிலும் பரவிய அம்மக்கள் அங்கு வாழ்ந்த குறுணிக் கற்காலச் சமுதாயத்துடன் இணைந்து விட்டனர். இலங்கையின் ஏனைய பாகங்களிலும் வாழ்ந்த குறுணிக் கற்கால மக்கள் பெரும் கற்காலப் பண்பாட்டின் அம்சங்களை அறிந்து அவற்றை தாமும் பின்பற்றினார்கள்.



இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களின் மூதாதையர்கள் இந்த பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியிருப்புகளை ஏற்படுத்தி வேளாண்மை, மந்தை வளர்ப்பு, உலோகத்தொழில், மீன்பிடித் தொழில், வாணிபம், மரத் தொழில் முதலான தொழில்களில் விருத்தியடைவதற்கும் அவர்களும் அவர்களின் பிற்சந்ததியினரும் ஏதுவாக இருந்தனர்.

இலங்கைத் தமிழ்ச் சமுதாயம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட உற்பத்தியைக் கொண்டது என்பது இப்போது தொல்லியற் சான்றுகளால் தெரியவருகிறது.

யாழ்ப்பாணத்திலும் வடக்கு வன்னிப் பிரதேசங்களிலும் கிழக்கிலங்கையிலும் அமைந்த குடியிருப்புக்கள் சிறு இராச்சியங்களாக இயங்கின. காலப்போக்கில் அவை இணைந்து கொண்டதினால் அப்பிரதேசங்களில் மத்திய காலத்தில் வளர்ச்சி பெற்றிருந்தன.

வன்னி இராச்சியங்கள் எல்லாம் கி.மு. காலத்துச் சிற்றரசுகளை மூலமாக கொண்டவை. அவை தொடர்ச்சியாக நிலைபெற்றிருந்தன. அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய இராசதானிகளின் காலத்திலும் அவை நிலைபெற்றிருந்தன.

மகாவம்சம் துட்டகாமினியுடைய வடக்கை நோக்கிய படையெடுப்பை வர்ணிக்கும் போது தென்கிழக்கிலங்கையிலேயே அவன் 32 தமிழ் அரசர்களை வென்று அடக்கி விட்டு முன்னேறிச் சென்றான் என்று சொல்கிறது.

வேறும் ஒரு நூல் இந்தக் குறிப்பைக் குறிப்பிடுகின்றது. சீகளவத்துப்பஹரண என்பது அந்நூலாகும். இந்தக் குறிப்பை நவீன கால இலங்கை வரலாற்றில் மறைத்து விட்டார்கள்.

சிற்றரசர்கள் அல்லது குறுநில மன்னர்கள் தனியாகவும் கூட்டாகவும் வன்னி என்று சிறப்புப் பெயரால் குறிப்பிடுவது வழக்கமாகியது. நெடுங்காலமாக நிலைபெற்று வந்த குறுநிலப் பிரிவுகளை ஒரு காலகட்டத்தில் இவ்வாறு குறிப்பிடத் தொடங்கினார்கள்.

இலங்கையின் பல பாகங்களிலே தமிழ் பேச்சு மொழியாக வழங்கியமைக்கு ஆதியான பிராமிக் சாசனங்கள் ஆதாரமாகும். அவற்றிலே தமிழரை பற்றி கூறப்படுகின்றது.

அநுராதபுரம், பெரிய புளியங்குளம், திருமலையில் உள்ள சேருவில, அக்கரைப்பற்றில் உள்ள குடுவில் ஆகியவற்றில் கிடைத்த ஐந்து பிராமிக் சாசனங்களில் தமிழரைப் பற்றிய குறிப்புகள் உண்டு. அவர்கள் அனைவரும் பௌத்த சமயத்திற்கு ஆதரவு வழங்கிப் பிராகிருத பெயரைச் சூடிக் கொண்டார்கள்.
ஆதிகாலத்து இலங்கையில் வாழ்ந்த தமிழர் பெரும்பாலும் பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதற்கு இந்த ஆதாரங்களும் வேறு பல சாசனங்களும் சான்றாக உள்ளன.

அநுராதபுர சாசனம் தமிழர்களாகிய சமணர்களைப் பற்றியும் கப்பலோட்டும் தமிழர்களை பற்றியும் குறிப்பிடுவதோடு, இளபரத எனும் ஒருவனையும் குறிப்பிடுகிறது.

பரதர் சமூகத்தவரையே இலங்கைப் பிராமிச் சாசனங்கள் குறிப்பிடுகின்றன என்ற கருத்தை முன்பு இளைஞரான இத்தாலிய ஆய்வாளர் ஒருவர் முன்வைத்தார். அந்த குறிப்பு அண்மைக்கால ஆய்வுகளினால் உறுதியாகிவிட்டது.

தொடரும்..
கலாநிதி சி.பத்மநாதன்

ஓய்வுநிலை பேராசிரியர்
பேராதனை பல்கலைக்கழகம்
நன்றி யாழ் மண்

No comments: