காதலனும்..சந்தேகக் காதலியும்...கொஞ்சி விளையாடும் தமிழ்

.
சந்தேகம் ...தன்னைத்தானே நம்பாதது சந்தேகம்..அதுவும்..காதலன்பால்..காதலிக்கு வந்துவிட்டால்...

தன்னைத்தவிர அவனை வேறு யாரும் ஏறெடுத்துப் பார்க்கக்கூடாது என்ற 'பொசசிவ்னஸ்' உள்ள காதலியாய் விட்டால்..அவனது நிலை திண்டாட்டம்தான்..

காதலனை பெண்களெல்லாம் கண்ணால் கண்டு ரசிக்கின்றனர்..அவன் பரந்த மார்பை கண்களாலேயே உண்கின்றனர்..இதை காதலி பார்த்துவிட்டாள்..கோபம் தலைக்கேறுகிறது..காதலனைப் பார்த்து..இனி நான் உன்னைத் தழுவ மாட்டேன்..நீ கற்பு நெறி கெட்டவன் என்கிறாள்..அவனிடம் ஊடல் கொள்கிறாள்.



பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு

பெண்ணாக இருப்பவர்கள் எல்லோரும் ..உன்னை பொதுவாக எண்ணி கண்களால் உன்னை ரசிப்பதால்..நீ கற்பில்லாதவன் ஆகிறாய்..ஆதலின் இனி உன் பரந்த மார்பை நான் தழுவ மாட்டேன்..

இப்போது காதலனுக்கு தும்மல் வருகிறது..தும்முகிறான்..அவன் தும்மல் போலியானது என எண்ணுகிறாள் அவள்..இப்படி தும்முவதால் அவரிடம் உள்ள கோபம் நீங்கி..'நீடூழி வாழ்க" என அவரை வாழ்த்தி பேச ஆரம்பிப்பேன் என எண்ணுகிறார் என எண்ணுகிறாள்.இதிலும் சந்தேகம்..

ஊடி இருந்தேமாத் தும்மினார் யார்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து

(ஊடல் கொண்டிருந்தபோது தும்மினார்..ஊடலை விடுத்து அவரை 'நீடூழி வாழ்க' என வாழ்த்துவேன் என நினைத்து..)

காதலியை மகிழ்விக்க என்ன செய்யலாம்..என மண்டையைக் குடைந்துக் கொண்டு..மலர்மாலையை தான் அணிந்துக் கொண்டால் அவள் மகிழ்வாள் என எண்ணியவன்..பூமாலை ஒன்றை அணிந்து. அவள் முன் வருகிறான்..அவளோ அவன் எண்ணியதற்கு மாறாக..வேறொருத்திக்குக் காட்டவே அவன் அப்படி அணிந்ததாக எண்ணி மேலும் சினம் கொள்கிறாள்

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று

கிளையில் மலர்ந்த பூக்களை மாலையாய் கட்டி நான் அணிந்துக் கொண்டிருந்தாலும், வேறொருத்திக்காகவே அணிந்திருக்கிறீர் எனக் கூறி கோபம் அடைகிறாள்

அவள் சினம் தணிக்க காதலன் 'எல்லோரையும் விட நான் உன்னிடம் காதல் மிகுதியாய்க் கொண்டுள்ளேன்' என்கிறான்..உடனே அதையும் தவறாக எடுத்துக் கொண்டு யாரைக் காட்டிலும்..யாரைக்காட்டிலும் என ஊடல் அதிகம் கொள்கிறாள்.

யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று

யாரைக்காட்டிலும் உன்னிடம் நான் காதல் அதிகம் கொண்டுள்ளேன் என சாதாரணமாகச் சொன்னதைக் கூட தவறாக எடுத்துக் கொண்டு..'யாரைக் காட்டிலும்...யாரைக்காட்டிலும்..' எனக் கேட்டு மிகவும் ஊடல் கொள்கிறாள்

சரி..இவளிடம் என்ன சொன்னால் திருப்தி அடைவாள் என காதலன் யோசித்து..'இப் பிறவியில் உனை பிரியமாட்டேன்' என்கிறான்.உடனே..மறுபிறவி என்று இருந்தால்..அப்போது என்னைவிட்டுப் பிரிவாயா' என கண்ணீர் விடுகிறாள்...

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்

'இப்பிறவியில் யாம் பிரியமாட்டோம்' என்று நான் சொன்னதும்..அவ்வாறாயின் மறு பிறப்பு என்று ஒன்று உண்டோ..அப்போது நம்மிடம் பிரிவு ஏற்படும் என்கிறாயா? என கண்ணீர் விடுகிறாள்..

காதலன் பாவம் என்ன செய்வான்..எதைச் சொன்னாலும் மாட்டிக் கொள்கிறான்.

   நன்றி :   tvrk .  blogspot 

No comments: