அகிலன் கவிதை

.


.

துவக்குகளின் நிழல்களிலிருந்து
  தப்பித்தேயாக வேண்டும்



அவனைத் துவக்குகள்
ஒரு நாள் மறித்தன
அவனுக்காக தாங்கள் காத்துக்கொண்டிருப்பதாகச் சொல்லின
அவன் புத்தகங்களும்
அதையேதான் சொன்னதாய்ச் சொன்னான்
தங்களைப் பற்றியும்
புத்தகங்கள் இருப்பதாய் துவக்குகள் சொல்லின
என் எட்டாம் வகுப்பு புத்தகத்தில்
உங்களைப் பற்றி இல்லையே என்றான் அவன்..
‘சரி சரி போ போ’
அவனை அனுமதித்தன துவக்குகள்

அம்மா அவனிடம்
துவக்குகளின் கொலைகள் குறித்துச் சொன்னாள்.
துவக்குகளின் நல்லவை தீயவை
என்கிற பேதம் கிடையாது.
அவை அறிந்தது கொலை மட்டுமேயெனச் சொன்னபோது
அம்மாவின் வெறும் நெற்றியில்
துவக்குகளின் மொழி எழுதப்பட்டிருப்பதை இவன் பார்த்தான்.
துவக்குகளைவிடவும்
புத்தகங்கள் மேலானவையென்றும்
புத்தகங்களின் மூலமும்
புதிய திசைகளைத் திறக்கலாம் என்றும்
அம்மா சொன்னாள்.
அவன் துவக்குகளைவிடவும்
புத்தகங்கள் மேலானவைதான் எனச் சொல்லிக்கொண்டான்.
அம்மா துவக்குகளோடு
கெஞ்சிப் பார்த்தாள்.
துவக்குகள் அம்மாவையும்
குறிபார்த்தன..
அம்மா பைத்தியமாய்த் தெருக்களில் அலைந்தாள்..
துவக்குகள்
மேலும் புதிய அம்மாக்களைத் தேடிப் போயின..
 Nanri:  lumpini.in

No comments: