அபயகரம் நிகழ்வு என்பார்வையில்

 .

                                                                        நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்அபய கரம் ஆமாம் நாதியற்ற ஈழம் வாழ் குழந்தைகளின் நல்வாழ்வை மனதில் கொண்டு அந்த நிக்கற்ற சிறாருக்கு அபய கரம் கொடுக்கும் சேவை நிறுவகம் இது.

வருடா வருடம் கலை நிகழ்சிகளை நடத்தி அதன் மூலம் பெறும் பணத்தை ஈழத்திற்கு அனுப்பி சேவை செய்பவர்கள். இந்த வருடம் தமது 18 ஆவது ஆண்டாக இந்த கலை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். இதன் இயக்குனராக இருந்து சமூகத் தொண்டு செய்யும் தம்பதியரை யாவரும் அறிவார்கள். பல சிவானந்தன்கள் எமது சமூகத்தில் இருப்பதால் இவர் அபயகரம் சிவானந்தன் எனவே அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு வெற்றிகரமான ஆணின் பின் ஒரு பெண் இருப்பதாக கூறுவார்கள் யாவரின் அன்பையும் பெற்ற பரமேஸ் சிவானந்தன் தான் அந்தப்பெண்.


நிகழ்ச்சி எப்பொழுதும் போல 6 .30 மணிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கே ஆரம்பித்தது . பார்வையாளர்கள் 45 நிமிடங்களுக்கு முன் மண்டபத்தில் போய் அமர்ந்ததும் நிதி


எதற்காக சேகரிக்க படுகிறது என்பதை மக்களுக்கு உணர்த்த ராமகிருஷ்ணன் அநாதை இல்ல சிறாரின் வாழ்வும் துர்காபுர மகளிர் இல்ல வாழ்வும் திரையில் காண்பிக்கப்பட்டது. 2 , 3 வயதே மதிக்க கூடிய சிறுவர்முதல் 16 , 17 வயது வரையுள்ள இளைஞர் யுவதிகள் அங்கு வாழ்வதை நாம் உணர்ந்தோம். அதுமட்டுமா இன்று நாடு இருக்கும் நிலையில் இங்கு வாழ கிடைத்த சிறுவர் அதிஷ்டகாரர். இந்த உதவி எதுவும் இல்லாது வாழும் பல்லாயிரமான சிறுவர் எமது நாட்டில் இருக்கிறார்கள். ஆடம்பரத்தில் வாழும் எம்மவருக்கு இந்த திரை காட்சி நாம் செய்ய வேண்டிய சமூகத் தொண்டை எமக்கு எடுத்துக் கூறுவது போன்று அமைந்தது பல பார்வையாளர்கள் அதை உணர்ந்தனர். சிலர் எமது பிள்ளைகள் இதை பார்க்க வேண்டும் அப்பொழுது தான் அவர்களும் புரிந்து கொள்வார்கள் என பேசிக் கொண்டனர்.

ஸ்ரீமதி கீதா கனேஸ்வரனும் அவரது சிஷ்யர்களும் இணைந்து குரு சமர்ப்பணம் என்ற இன் இசை விருந்தை வழங்கினார்கள். கீதா கர்நாடக சங்கீத மேதைகளான செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர், D . K ஜெயராமன் போன்றோரிடம் இசை பயின்றவர். அது மட்டுமல்ல சென்னை மியூசிக் அகாடமி போன்ற சபாக்களிலே விருதும் பெற்றவர். அவர் தயாரித்த இசை நிகழ்ச்சி தங்கு தடை இன்றி இனிமையாக அமைந்தது. 18 பேரும் சேர்ந்து இசையை எந்த பிசிறும் இன்றி சுத்தமாக இசைத்தனர். ஒத்திசையாக புல்லாங்குழலை சங்கர் அனந்த சயணனும் மிருதங்கத்தை ஆதவன் செல்வநாதனும் , தபேலாவை கிஷான் ஜெயந்திரனும் கடத்தை கிருஷாந் சேகரமும் வழங்கினார்கள். அத்தனை பேரும் இணைந்த இசை நிகழ்ச்சியை இனிமையாக தரமாக தயாரித்த கீதா கணேஸ்வரன் எமது பாராட்டுக்கு உரியவரே.


மேலும் இசைக்கு மெருகூட்டியது திரையில் காண்பித்த காட்சிகள். குரு சமர்ப்பணம் ஆதலால் கீதாவின் குருவாய் அமைந்தவர்களான செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர்,


D . K ஜெயராமன் மற்றும் மகாராஜபுரம் சந்தானம் போன்றோரின் உருவ படங்களும் காண்பிக்கப்பட்டது. அவர்கள் எம்மை விட்டு போய் விட்டார்கள் ஆனால் அவர்கள் விட்டுப்போன பாரம்பரியம் வாழ்வதை சிட்னியில் கீதா மூலம் கண்டோம். இது தான் இந்திய குருசிஷ்ய பாரம்பரியம். இதுவே இசையின் பாரம்பரியமும் கூட.

காம்போதியில் "வாங்கும் எனக்கு இருகை ஆனால் வழங்கும் உனக்கு பலகை முருகா" என பாடும்போது திரையிலே பழனித்திருவிழாவை கண்டோம். தியாக பிரமத்தின் பஞ்சரத்தின கிருத்தியில் ஒன்றான ஆரபி சாதிஞ்சனே என ஆரம்பித்தபோது தியாக பிரம்ம தம்புரா, சப்பளாக் கட்டை சகிதம் பாடிக்கொண்டு செல்வதை திரையில் காண மெய்சிலிர்த்தது. அவ்வாறே தில்லை சிதம்பரம், குருவாயூர் பாலகோபாலன் கோயில்கள் அழகிய வண்ணப்படங்கள் நேர்த்தியான சிற்பவடிவங்கள் அத்தனையும் இசையுடன் இணைந்து காதுக்கு மட்டும் விருந்தாக அமையாது திருஷ்டி காவியமாக அமைந்த இசை நிகழ்ச்சி யாவரையும் கவர்ந்தது. மொத்தத்திலே இசையுடன் ஹேத்திர யாத்திரைக்கு எம்மை எல்லாம் இட்டு சென்றார் கீதா கணேஸ்வரன்.

இசை நிகழ்ச்சியை அடுத்து திருமதி பத்மரஞ்சனி உமாசங்கர் நாட்டிய நிகழ்ச்சி தயாரிந்திருந்தார். பத்மரஞ்சனி யாழ் பல்கலைகழகத்தின் நுண்கலை பட்டதாரி. பின் யாழ் பல்கலைகழக நுண்கலை பீட நாட்டிய பிரிவின் தலைமை இயக்குனராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். யாழ்பாணத்தில் தனது இளம் வயதில் திரு ஏரம்பு சுப்பையாவிடம் நாட்டியம் பயில தொடங்கி சாந்தா பொன்னுத்துரையிடம் ராமநாதன் கலைகல்லூரியில் பயிற்சி பெற்றவர். சென்னை கலாசேத்ரா விரிவுரையாளரிடம் நட்டுவாங்கம் கற்றவர்.

இடை வேளைக்கு முன்பு திருமதி பத்மரஞ்சனி உமாஷங்கரின் மாணவிகள் ஆனந்த நர்த்தனன் நடராஜ பெருமானின் பாடல்களை ஆடினார்கள். மிக பெரிய நாட்டிய குழுவாக ஆடிய மாணவிகள் நாட்டியதிலே விறுவிறுப்பும் நளினமும் துவங்கியது பாடல்களின் தெரிவு மிகமிக அருமை. வாத்திய இசை முழங்க பத்மரஞ்சனியின் அருமையான நட்டுவாங்கத்துடன் இனிய குரலில் சொல்சுத்தமாக சிவரதி பாட எந்த தொய்வும் இல்லாது அருமையாக நிகழ்ச்சி நடைபெற்றது. அலை அலையாக ஆடல் நங்கையர் மேடையில் தோன்றும் அழகும் தடங்கல் இன்றி நாட்டியம் நடந்ததும் அரை மணி நேரம் போனதே தெரியவில்லை. 5 -6 வயது மாணவியரில் இருந்து அழகிய இளம் நங்கையர் வரை ஆடினார்கள். சின்னஞ் சிறுசுகளின் ஆடலின் அழகை யாவரும் ரசித்தார்கள்.
உடை அலங்காரங்கள் மிக மிக நேர்த்தியாக அமைந்திருந்தது. இடைவேளையின் பின் திரு யாழ்பாணம் வீரமணி ஐயர் அவர்களால் இயற்றப்பட்ட மண்சுமந்த மேனியார் என்ற மாணிக்கவாசகரை மையமாக கொண்ட நாட்டிய நாடகத்தை தயாரித்திருந்தார் பத்மரஞ்சனி. வாதவூரர் இருந்த மர நிழலில் அமர்ந்திருந்த சிவனாரிடம் ஞானம் பெற்றமை, அரசன் குதிரை வாங்க கொடுத்த செல்வத்தில் திருத்தலம் செப்பனிட செலவு செய்தமையால் அரசன் கோபத்திற்கு ஆளாகிறார். வாதவூரரின் பொருட்டு இறைவன் நரிகளை பாரியாக்கி மதுரைக்கு அனுப்புகிறார் பாரி நரியானது வாதவூரரும் அரசனால் தண்டிக்கப் படுகிறார். வைகை பெருக்கெடுத்தமை பிட்டுக்கு மண் சுமந்த பெருமான் பிரம்பால் அடிபட்டார். அரசன் தனது பிழையை உணர்கிறான். இதுவே கதை.

வீரமணி ஐயரின் முத்திரை பதித்த பாடல்கள் ஈழத்தமிழருக்கு பெருமை சேர்த்த கவி நினைத்த மாத்திரத்திலே கவிதை எழுதும் வரம்பெற்றவர். அவரது அபார திறமை பல பெரிய கலையர்களின் பாராட்டை பெற்றது. கல்கி முதல் ருக்மணி தேவியார், சிவாஜா போன்றோரால் பாராட்டப்பட்டவர். அவரை எனது நாட்டிய குருவாக பெரும் பாக்கியம் பெற்றவள் நான். அவரது அருமையான பாடல்களை சிவரதி கேதீஸ்வரன் உருக்கமாக உணர்ச்சியுடன் பாடினார். நாட்டிய நாடகம் என்றால் உணர்சிகளை புரிந்து பாடவேண்டும். சிவரதியோ அவரது பாடலால் எம்மை எல்லாம் உருக்கிவிட்டார். நாட்டிய நாடகத்தில் வெற்றிக்கு சிவரதியின் பங்கு அளப்பெரியது.நாட்டிய நாடகம் முக்கிய பாத்திரங்களுடன் முழு நாட்டிய கலைஞர் இணைக்கப்பட்ட விதம் நாட்டிய நாடகத்திற்கு அழகூட்டியது. குறிப்பாக வைகை பெருக்கெடுத்து ஓடும
காட்சி   அத்தனை பெரும் இணைந்து நதியை உருவகித்தமை அழகாக அமைந்திருந்தது. முக்கிய பங்கேற்ற கலைஞர்கள் தம்தம் பாத்திரத்தை உணர்ந்து நடித்தார்கள். வந்தியாக தோன்றிய ஷர்மிளா குலத்திலகே அபார திறமை சாலியே. அரசனாக தோன்றிய அஷ்வினி யசொதாஸ் கோபத்தை திறமையாக காண்பித்தார். அரசனுக்கு ஏற்ற உடல்வாகு இயற்கையாக அமைந்து விட்டது அவருக்கு. சேனாதிபதியான அஞ்சனா சூரியகுமார் அரசனிடம் முறையிடுவது அருமை. குதிரைகளின் அளப்பரிய எண்ணிக்கையை தன் ஒரு ஆடலாலேயே காட்டிவிட்டார். அவரது ஆடல் திறமையால் வெறும் மேடையே குதிரைகளால் திறந்துவிட்ட பிரமையை ஊட்டினார்.

மாணிக்கவாசகராக முக்கிய பாகம் ஏற்ற சிவனுஜா உமாசங்கர் பாத்திரத்தை உணர்ந்து ஆடினார். சிவன் மறைந்த காட்சியில் அவரது திறமை புலப்பட்டது. மண்சுமந்த நந்தினி ரவிசுமதி துடுக்குத்தனம் நிறைந்த  ஆடல் அவரை நல்ல குணசித்திர பாத்திரமாக்கியது. வைஷ்ணவி உமாசங்கர் கதை கூறுபவராக தோன்றினார். அழகாக பரதம் ஆடினார். இத்தனை தொகையாக மாணவிகள் இருந்ததால் கதை கூறுவதற்கு மூவரோ நால்வரோ இணைந்திருந்தால் மேலும் சோபிக்கும் என்பது என்கருத்து. ஒத்திசை கலைஞர்களாக கிருஷாந்த சேகரம் மிருதங்கம். Dr ஐங்கரன் காந்தராஜா தபேலா, சாந்தி சண்முகசுந்தரம் வீணை, தேவகி விக்னேஷ் புல்லாங்குழல் வாசித்தனர். அவர்களுடன் கைஷாயணி கருணாகரன் கீபோர்ட் வாசித்து நாட்டிய நிகழ்ச்சியை சோபிக்க செய்தனர்.

ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபன நிகழ்ச்சி தயாரிப்பாளரான மகேஸ்வரன் பிரபாகரன் தனது கம்பீரமான குரலால் நாட்டியத்தின் இடையே கதை கூறினார். அவ்வப்போது அவர் குரல் கேட்டபோதும் அவர் நாட்டியத்துடன் ஒன்றிவிட்டார் என்றே கூறலாம். அபயகரம் மீண்டும் ஒரு வெற்றிகரமான நிகழ்ச்சியை நடத்தி முடித்தது பெருமை சேர்த்தது.

2 comments:

Anonymous said...

Music programme of par excellence. Superb choice of quality classical rendition. Keep up the tradition of quality music.Very well done

Anonymous said...

I was at the program too and i loved it. Can i request that you post a group picture where everyone can be seen. My favourite character would have to be the arasan as i felt the emotions she portrayed. Please put up some arasan pictues soon.

thank you

p.s i think Mrs padma ranjini Umashankar should do more programs as she provides a quality and polished entertainment that transports the audience to the time in which her dances take place