தேவையான கோவை

.                                                                        
                 
                                                                                                     அ. முத்துலிங்கம்

மணி வேலுப்பிள்ளை ஒரு கதை சொன்னார். அவருக்கு தெரிந்தவர் ஒருவர் sound economy என்பதை 'சத்தமிடும் பொருளாதாரம்' என மொழிபெயர்த்தாராம். அதைக் கேட்டதும் எனக்கு சத்தமிட்டு அழவேண்டும் போல தோன்றியது. எனக்கு தெரிந்தவர் beforehand என்பதை முன்கை என்று மொழிபெயர்த்தார். இன்னொருவர் துணிந்து செக்கோவ் மேலேயே கைவைத்துவிட்டார். அவருடைய The Lady with the Dog சிறுகதையை 'சீமாட்டியுடன் கூடிய நாய்' என்று மொழிபெயர்த்தார். இவருடன் ஒப்பிடும்போது முதலாமவர் செய்த மொழிபெயர்ப்பு விருது பெறும் தகுதி கொண்டது.

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும்போதுதான் பிரச்சினை என்றில்லை. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் அதேபோலப் பிரச்சினைதான். ஒரு புகழ் பெற்ற இலங்கை எழுத்தாளருடைய தமிழ் நாவலை என் நண்பர் ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். எல்லாம் சுமுகமாகப் போனது. ஒரு பத்தி வந்ததும் நண்பர் அப்படியே அசையமுடியாமல் நின்றார். அவரால் அந்தச் சின்னப் பத்தியிலுள்ள ஒரு வசனத்தைக்கூட மொழிபெயர்க்க முடியவில்லை. அதை என்னிடம் அனுப்பி வைத்தார். நான் அதை இரண்டுதரம் படித்து அது தமிழ்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு தலையில் கைவைத்து அமர்ந்தேன். அதில் எனக்கு விளங்கிய வசனங்களிலும் பார்க்க விளங்காத வசனங்களே அதிகம். நான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கனடாவின் பிரபலமான கவிஞரை தொலைபேசியில் அழைத்து ஆலோசனை நடத்தினேன். தமிழில் விற்பன்னரான பள்ளிக்கூட முன்னாள் தலைமையாசிரியரையும் அழைத்து விசயத்தை சொன்னேன். ஒருவாறாக கனடாவில் உள்ள ஆகத்திறமான நாலு மூளைகளின் கூட்டுத்தொகையின் ஆற்றலால் அந்தச் சின்ன பத்தியை மொழிபெயர்க்க முடிந்தது. தமிழை மொழிமாற்றம் செய்யும்போது இவ்வளவு பிரச்சினை என்றால் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பது எவ்வளவு சிரமமாயிருக்கும் என்பதை ஒருவரின் கற்பனைக்கே விட்டுவிடலாம்.

எங்கள் பழைய இலக்கியங்களில் காணப்படும் பெரும்பாலான சொற்கள் இன்று வழக்கொழிந்து விட்டன. ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை தேடும்போது புதிதாக உண்டாக்கத் தேவையில்லை. பழைய சொற்களுக்கே திரும்பவும் வாழ்வு கொடுக்கலாம். குறுந்தொகையில்

அற்சிரை வெய்ய வெப்பத்தண்ணீர்

சேமச்செப்பில் பெறீஇயரோ' என்று வரும். சுடுநீர் வைக்கும் செப்பைச் சொல்கிறார் புலவர். அது வேறு ஒன்றுமில்லை, thermos flask தான்.

ஆங்கிலத்தில் leftover என்ற சொல் புழக்கத்திலிருக்கிறது. உணவகங்களுக்கு சாப்பிடப் போனால் மீதி உணவை சிலவேளைகளில் பொதிசெய்து தரச் சொல்வோம்; leftover என்றால் தமிழில் மீதி உணவு, மிச்ச உணவு அல்லது எச்சில் உணவு என்று பொருள் படும். ஆனால் எனக்கு திருப்தியில்லை, ஒரு நல்ல தமிழ் சொல்லுக்காக நான் பல வருடங்கள் தேடினேன். பார்த்தால் புறநானூறு மிகச்சுருக்கமாக, அழகாக 'மீதூண்' என்று ஏற்கனவே சொல்லியிருந்தது.

இதே போலத்தான் spare tyre அல்லது stepney போன்ற ஆங்கிலச் சொற்கள். ஒரு வாகனத்தில் பாதுகாப்புக்காக எடுத்துச் செல்லப்படும் உபரி டயர் என்பது பொருள். பழைய காலத்தில் வண்டி கட்டிப்போகும்போது வண்டியின் அச்சு முறிந்துவிடும் அபாயம் இருந்தது. ஆகவே மூன்றாவதாக ஒரு உபரி அச்சையும் காவிச் செல்வார்கள். 'கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்ன' என்கிறது புறநானூறு. நாங்கள் தாராளமாக spare tyre ஐ 'சேமச்சில்லு' என்று அழைக்கலாம்.

கடந்த பத்து வருடங்களாக ஆங்கிலம் - தமிழ் அகராதிக்காக நான் காத்திருந்தேன். எத்தனை அகராதிகள் வந்தாலும், எத்தனை கணினி அகராதிகள் உலவினாலும், சில ஆங்கிலச் சொற்களுக்கு பொருத்தமான வார்த்தைகள் தமிழில் அகப்படுவதில்லை, முக்கியமாக கலைச்சொற்கள். அப்படி கிடைத்தாலும் editor - பிரதி மேம்படுத்துநர், physically challenged - மெய்ப்புலன் அறைகூவலர் போன்ற வார்த்தைகள் வந்து கன்னத்தில் அறையும். வலது குறைந்தவர் என்ற வார்த்தையில் என்ன பழுது. காலம் காலமாக தொடரும் இந்த வார்த்தை ஒருவரையும் இழிவு படுத்துவதாக தெரியவில்லை. வயது குறைந்தவர், வசதி குறைந்தவர், உயரம் குறைந்தவர் என்று நாங்கள் சொல்வதில்லையா?

ரொறொன்ரோவில் ஒரு குழுவின் பலவருட முயற்சியின் முதல் படியாக 14 துறைகளில் 5000 வார்த்தைகள்கொண்ட ஆங்கில - தமிழ் சொற்கோவை வெளிவந்திருக்கிறது. இன்னும் வளரும். இந்தக் குழுவில் பங்காற்றிய அத்தனைபேரும் அவரவர் துறைகளில் விற்பன்னர்கள். கிட்டத்தட்ட ஒரே பொருள் போலத் தென்படும் வார்த்தைகளை கையாளும்போது இந்தக் குழு மயங்காமல் ஆழமாகவும், நுட்பமாகவும் செயலாற்றியிருக்கிறது. ஒரு சரியான சொல்லுக்கும் கிட்டத்தட்ட சரியான சொல்லுக்கும் உள்ள வித்தியாசம் மின்னலுக்கும் மின்மினிப்பூச்சிக்கும் உள்ள வித்தியாசத்தை போன்றது என்று அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெய்ன் சொல்வார். ஆங்கிலத்தில் apartment என்றால் ஒரு கட்டிடத்தொகுதியின் தனிக்கூடம் என்று பொருள்படும். அதேசமயம் condominium என்றால் வசிப்பவர்களுக்கு சொந்தமான வீடுகள் கொண்ட கட்டிடத்தொகுதி என்று அர்த்தம். இப்படியான நுட்பம் தெரியும்படி மொழிபெயர்ப்பு அமைந்திருக்கிறது. Apartment என்பது அடுக்குமாடிக்கூடம் என்றும் condominium என்பது அடுக்குமனை என்றும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

ஆதனம் என்பது பழைய சொல், சொத்து property என்று பொருள்படும் இந்த வார்த்தை இலங்கையில் மாத்திரமே புழக்கத்திலிருக்கிறது. இதை எடுத்து துலக்கி உயிர் கொடுத்திருக்கிறார்கள். Real estate - ஆதனவியல், Realtor - ஆதனவியலர் என்ற எளிமையான புதுச்சொற்கள். சென்னை பல்கலைக் கழகத்தின் ஆங்கிலம் - தமிழ் சொற்களஞ்சியம் Realtor என்ற வார்த்தைக்கு 'நிலவரப் பண்ணைச் செயல் முகவர்' என்று பொருள் சொல்கிறது. ஒரு வார்த்தைக்கு ஒரு வசனம் பொருள். இன்னும் பல பொருத்தமான மொழிபெயர்ப்பு சொற்களை உதாரணம் காட்டலாம். archaic - வழக்கொழிந்த, climax - சுவையுச்சம், anticlimax - சுவையிறக்கம், feedback - பின்னூட்டு, illness - சுகயீனம், euphemism - இடக்கரடக்கல்.

சொற்கோவைக் குழுவில் அங்கத்தினராக பணியாற்றிய அத்தனை பேரும் பாராட்டுக்குரியவர்கள். முக்கியமாக, இதற்கு நிதியுதவி செய்தவரை மறக்கமுடியாது. சடையப்பவள்ளல் இல்லாவிட்டால் இன்று கம்பராமாயணம் இல்லை.

வெண்ணெய் நல் சடையன் வண்மை

மரபுளோன் கொடுக்க வாங்கி

வசிட்டனே புனைந்தான் மௌலி

என்று கம்பர் ராமாயணத்தில் ராமனின் முடிசூட்டு வைபவத்தை பாடுகிறார்.

புலம் பெயர் தமிழர்கள் மத்தியில், அவர்கள் முயற்சியில், இந்த நூல் வெளிவந்ததும் ஒரு முடிசூட்டு விழா போலத்தான். இதை முற்றிலும் சாத்தியமாக்கிய ராஜா மகேந்திரனுக்கும் அவர் மனைவி பாமாவுக்கும் தமிழ் உலகம் கடமைப்பட்டிருக்கிறது.

நன்றி அமுது . com

No comments: