மெல்பேர்னில் நடைபெற்ற வைகாசி பேரவல நினைவுகூரல் நிகழ்வு




சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்களை நினைவுகூரும் வைகாசி பேரவலம் நிகழ்வு ஆஸ்திரேலியா மெல்பேர்னில் நேற்று சனிக்கிழமை உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது.

மெல்பேர்ன் கங்கேரியன் சமூக மண்டபத்தில் ஆஸ்திரேலிய தமிழர் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.

சிறப்பான ஒழுங்கமைக்கப்பட்ட மண்டபத்தில் நிகழ்வுகள் மாலை 6 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாயின. நிகழ்வின் ஆரம்பத்தில் ஆறு பேர் தீபங்களுடன் வந்து மண்டபத்தின் முன்பாக அமைந்திருந்த பொதுச்சுடரின் முன்பாக அவற்றை வைத்து வணக்கம் செலுத்தினர்.

சிறிலங்கா சுதந்திரமடைந்த நாள் முதல் அறுபது வருடங்களாக அல்லல்படும் தமிழ்மக்களின் வேதனைகளை வெளிப்படுத்தும் முகமாகவும் அந்த அறுபது ஆண்டுகாலப்பகுதியில் உயிரிழந்த தமிழ் உறவுகளுக்காககவும் ஆறு தசாப்தங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அறுவர் இந்த தீபங்களை ஏந்தி வணக்கம் செலுத்தினர்.

ஆஸ்திரேலிய தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து உணர்ச்சி கானங்கள் இசைக்கப்பட்டன. அதன்பின்னர், சர்வமத பிரார்த்தனை இடம்பெற்றது.

இந்நிகழ்வில், வன்னியில் இடம்பெற்ற கொடிய போரில் தாயக உறவுகள் எதிர்கொண்ட மனிதப்பேரவல காணொலிகள் மேடையில் அமைக்கப்பட்டிருந்த அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் மூன்று ஈழத்தமிழர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பயங்கரவாத குற்றச்சாட்டு வழக்கில் மூன்று ஈழத்தமிழர்களின் சார்பாகவும் வாதாடிய சட்டத்தரணி றொபேர்ட் ஸ்டாறி உரையாற்றினார்.

தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுபயங்கரமான போரினை நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று என்பதை எண்ணும்போதும் அப்படிப்பட்ட நாடு ஒன்றின் குடிமகன் தான் என்று கூறுவதிலும் தான் வெட்கப்படுவதாகவும் ஸ்டாறி கூறினார்.

தமிழ்மக்களுக்கு ஆக்கபூர்வமான பணிகள் எவை ஆயினும் தன்னாலான அளவுக்கு தான் மேற்கொள்ள தயாராக உள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.

அவரை தொடர்ந்து, ஆஸ்திரேலிய கிறீன் கட்சியின் விக்டோரிய மாநில நாடாளுமன்ற உறுப்பினர் கொலின் கார்ட்லன்ட் மற்றும் ஆஸ்திரேலிய தமிழர் பேரவையின் முன்னணி செயற்பாட்டாளர் காஞ்சனா செந்தூரன் ஆகியோரும் உரையாற்றினார்கள்.

அதனை அடுத்து, தாயக அவலம் தொடர்பாக உலகத்தமிழர் பேரவை தலைவர் வணக்கத்துக்குரிய இம்மானுவேலின் விடுத்த அறிக்கையை செல்வி சகானா ஆனந்தன் வழங்கினார்.

அதனை தொடர்ந்து, ஆஸ்திரேலிய தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்ட முல்லைத்தீவு என்ற ஆவண இறுவெட்டு உத்தியோகபுர்வமாக வெளியிடப்பட்டது. இந்த இறுவெட்டின் முதலாவது பிரதியை ஆஸ்திரேலிய கிறீன் கட்சியின் வேட்பாளர் பெற்றுக்கொண்டார்.

நிகழ்வுகளின் இடையிடையே இளையோர்கள் ஆங்கிலத்தில் வழங்கிய உணர்ச்சி கானங்களும் அப்போது மண்டபத்தின் முன்னால் அமைந்த அகலத்திரையில் காண்பிக்கப்பட்ட தாயக உறவுகளின் அவல வாழ்வுக்காட்சிகளும் உணர்வுமயமாகவிருந்தன.

நிகழ்வின் இறுதியாக தமிழின உணர்வாளரும், முன்னணி செயற்பாட்டாளருமான வைத்திய காலநிதி சீவேன் சீவநாயகம் உரையாற்றினார்.

தாயகத்தின் பேரவல நிலையை கவனத்திற்கொண்டு புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கவேண்டிய உறுதியான செயற்பாடுகள் பற்றி அவர் உணர்வு புர்வமாக விளக்கமளித்தார்.

கடந்த வருடத்தில் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலத்தை நினைவுகூரும் இந்நிகழ்வு, இரவு 8.30 மணியளவில் நிறைவுபெற்றது.

- ஆஸ்திரேலிய தமிழர் பேரவை, விக்டோரிய கிளை.

--

No comments: