போர்க்குற்றங்களுக்கு எதிரான நாள்: மெல்பேர்னில் அனுட்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம்!




தாயகத்தில் கடந்த வருடம் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மனிதப்பேரவலத்தில் படுகொலை செய்யப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்களை நினைவுகொள்ளும் போர்க்குற்றத்துக்கு எதிரான நாள் இன்று செவ்வாய்க்கிழமை அவுஸ்திரேலியா மெல்பேர்னிலும் நடைபெற்றது.

மெல்பேர்ன் நகரின் மத்தியில் அமைந்துள்ள பெடரேஷன் சதுக்கத்தில் இன்று மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.

அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் முதலாவதாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. சதுக்கத்தின் மத்தியில் அமைக்கப்பட்ட உயர்பீடமொன்றில் நிறுவப்பட்டிருந்த பொதுச்சுடரை - கடந்த வருடம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையில் தனது மூன்று உறவினர்களை இழந்த - திருமதி விண்மதி சாந்தகுமாரன் ஏற்றிவைத்தார்.

அதனை தொடந்து இன்றைய போர்க்குற்றவியலுக்கு எதிரான நாள் குறித்தும் தாயக உறவுகளின் அவலநிலை குறித்தும் டீக்கன் ஆண்டகை, சின்மயன் திலகராஜன் ஆகியோரும் உரையாற்றினர். இதனைத்தொடர்ந்து, அவுஸ்திரேலிய சோசலிச கட்சியின் கிறீன் அமைப்பு பிரதிநிதி திரு பீற்றர் பேசுகையில் - சிறிலங்கா அரசு போர்க்குற்ற விசாரணைகளின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். இதனை அடுத்து, "முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம்" என்ற நினைவு பாடலுக்கு சிறுமி ருக்சிதா இளம்குமரன் நடன ஆற்றுகையை வழங்கினார்.

இதனை அடுத்து, கீறீன் லெப்ட் பத்திரிகை ஆசிரியரும், அகதிகள் நலன் அமைப்பின் பிரதிநிதியான சுபோல்டனும் தனது சிறப்புரையை வழங்கியதையடுத்து, நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அவுஸ்திரேலிய பிரதிநிதிகளில் ஒருவரான திருமதி ஜனனி பாலச்சந்திரன் நினைவுரையாற்றினார்.

அடுத்தநிகழ்வாக, மெழுகுவர்த்தி ஏற்றுதல் நிகழ்வு ஆரம்பமானது. கடந்த வருடம் இதே காலப்பகுதியில் தாயகத்தில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களதும் நினைவாக நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து மக்களும் கைகளில் தீபம் ஏந்தி தமது துயரை பகிர்ந்துகொண்டனர். அதன்போது, சதுக்கத்தின் மத்தியில் சிறுவர் - சிறுமியர் கைகளில் தீபமேந்தியபடி மே - 18 என்ற வடிவத்தில் நின்று தமது அஞ்சலியை செலுத்திக்கொண்டனர்.



சிறிலங்கா அரசு கொடுமையான போர்க்குற்றங்களை மேற்கொண்ட ஒரு வருட நிறைவு நாளில் மெல்பேர்ன் தமிழ் இளையோர் அமைப்பு எம்மின மக்கள் அவலத்தை அடையாளப்படுத்தும் விதத்தில் உடல்உள்ளுறுப்பு (Organ Donation) மற்றும் இரத்த தான (Blood Donation) நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அத்துடன், அவுஸ்திரேலியா பிரதமருக்கு கையளிக்கும் கோரிக்கை மனு ஒன்றில் கையெழுத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையும் இளையோர் அமைப்பினார் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வுகளும் இன்றைய தினத்தில் பெடரேஷன் சதுக்கத்தில் நடைபெற்றன. இந் நிகழ்விற்கு பல்லின மக்களதும், ஊடகங்களினதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

குறிப்பாக, உடல் உள்ளுறுப்பு தானத்தில் பெயர்களை பதிவு செய்துகொண்ட பட்டியலை பெற்றுக்கொள்வதற்கு இன்றைய தினம் நிகழ்வுக்கு வருகை தந்திருந்த உடல் உள்ளுறுப்புதான அமைப்பு அதிகாரி செல்வி அனா உத்தியோகபூர்வமாக அந்த பெயர் பட்டியலை பெற்றுக்கொண்டார். தமிழ் சமூகம் முன்னெடுத்துள்ள இந்த உணர்வுபூர்வமான நடவடிக்கைக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வுகளின் இறுதியாக உறுதி உரை இடம்பெற்றது. உறுதிஉரையை திரு. சபேசன் அவர்கள் வாசிக்க அனைத்து மக்களும் அதனை மீளக்கூறி உறுதிப்பிரமாணமாக எடுத்துக்கொண்டனர்.



உறுதியுரை பின்வருமாறு அமைந்தது: -

தமிழீழ தாயகத்தின் விடுதலைக்காக

உறுதியோடு பயணித்த போராளிகளும் மக்களும்

கொடுமையான போராயுதங்களால் கொல்லப்பட்ட இந்நாளில்

தாயக விடுதலையே தமது வாழ்வாக கொண்டு

தம் வாழ்வையே அர்ப்பணித்த

40 000 இற்கும் மேற்பட்ட பொதுமக்களினதும் போராளிகளினதும்

தியாகத்தை நினைவிற்கொண்டு

தமிழீழ மக்களிற்கு சுதந்திரமான கெளரவமான வாழ்வு கிடைத்திட

தமிழீழ தனியரசே பொருத்தமான வழியென கொண்டு

தமிழீழ தேசிய தலைவரின் வழிகாட்டலில்

தொடர்ந்தும் உழைப்பேன் என்று உறுதி எடுத்துக்கொள்கின்றேன்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் - என்ற உறுதிப்பிரமாணத்துடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.

No comments: