இலங்கையில் யுத்த அநர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து உதவும் இலங்கை மாணவர் கல்வி நிதியம்

முருகபூபதி (ஸ்தாபகர்-நிதிச்செயலாளர்-இலங்கை மாணவர் கல்வி நிதியம்)

அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கியொளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்

--மகா கவி பாரதி.

மகாகவி பாரதியின் பொன்னான வாக்கை புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் ஆதரவுடன் கடந்த 21 ஆண்டு காலமாக அவுஸ்திரேலியாவிலிருந்து நிறைவேற்றிவரும் இலங்கை மாணவர்கல்வி நிதியத்தின் புலமைப்பரிசில் பெற்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமது கல்வியை சிறப்பாக முடித்துள்ளனர். தொடர்ந்தும் இயங்கிவரும் இந்நிதியம் 1989 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இலங்கையில் நீடித்த யுத்த நெருக்கடியினால் தமிழ்ப்பிரதேசங்களில் தந்தையை தாயை அல்லது குடும்பத்தின் மூல உழைப்பாளியான மூத்த சகோதரனை இழந்து பரிதவிக்கும் ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு புலமைப்பரிசில் நிதிக்கொடுப்பனவு மூலம் உதவி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியம், அவுஸ்திரேலியாவில் அரசில் பதிவு செய்யப்பட்ட (Incorporated) நிறுவனமாகும்.

தற்போது சுமார் 200 உறுப்பினர்களுடன் (மாணவர்களுக்கு உதவும் அன்பர்கள்-Sponsors)  இயங்கும் மாணவர் கல்வி நிதியம், கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி கடற்கோளினால் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களுக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வன்னி பெருநிலப்பரப்பில் யுத்த அழிவுகளினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் நிதிக்கொடுப்பனவு மூலம் உதவி வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தமிழ்ப்பிரதேசங்களான திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த மாணவர்களுக்கும் இடம்பெயர்ந்து கம்பஹா மாவட்டத்தில் கல்வியைத்தொடர்ந்த மாணவர்களுக்கும் இந்நிதியம் உதவியது.

ஓவ்வொரு பாதிக்கப்பட்ட மாணவர்களைப்பற்றிய பூரண விபரங்களுடன் தனித்தனி கோவைகள் நிதியத்தின அலுவலகத்திலிருந்து அதன் பிரதிகள் உதவ முன்வரும் அன்பர்களுக்கு வழங்கப்பட்டு நிதிபெறப்பட்டு குறிப்பிட்ட மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

ஒரு மாணவருக்கு மாதாந்தம் 20 அவுஸ்திரேலியன் வெள்ளிகளை(($20Aus.Dollar) வழங்குவதன் மூலம் அன்பர்கள் நிதியத்தின் உறுப்பினர்களாகின்றனர்.

ஆண்டுதோறும் ஆண்டுப்பொதுக்கூட்டத்தையும் மாதாந்தம் பரிபாலன சபைக்கூட்டத்தையும் நடத்திவரும் கல்வி நிதியம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை புதிய பரிபாலன சபையையும் தெரிவுசெய்கின்றது. ஆண்டுதோறும் நிதியத்தின் ஆண்டறிக்கையும் வரவு-செலவு நிதியறிக்கையும் வெளியிடப்படுகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் வவுனியா பல்கலைக்கழக வளாகத்திலும் கிழக்கு பல்கலைக்கழகத்திலும் அனுமதிபெற்ற பல மாணவர்களுக்கு கல்வி நிதியம் நிதியுதவி வழங்கத்தொடங்கியது. வவுனியா செட்டிகுளம் இடைத்தங்கல் அகதி முகாமிலிருந்து வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கு தெரிவான பத்து மாணவர்களுக்கு புலமைப்பரிசு நிதிக்கொடுப்பனவும் அவர்களின் போக்குவரத்துக்கு உதவுவதற்காக துவிச்சக்கரவண்டிகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி கடந்த 09-01-2010 ஆம் திகதி வவுனியா பல்கலைக்கழக வளாகத்தில் வளாக முதல்வர் திரு. இ.நந்தகுமார் தலைமையில் நடந்தது. இந்நிகழ்வில் வவுனியா கல்வி வலய பணிப்பாளர் திருமதி ஒஸ்வால்ட் கலந்துகொண்டு உரையாற்றினர்.

அத்துடன், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ,கம்பஹா மாவட்டங்களிலிருந்து நிதியத்தின் உதவி பெறும் மாணவர்களுக்கும் கடந்த ஜனவரி மாதம் நிதிக்கொடுப்பனவுகள் நேரடியாக மாணவர் ஓன்றுகூடல் நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் நிதியத்தின் ஸ்தாபகரும் தற்போதைய நிதிச்செயலாளருமான திரு. லெ..முருகபூபதி, பரிபாலன சபை உறுப்பினர் டொக்டர் நொயல். நடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் பல பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் உதவவேண்டியிருப்பதனால் இலங்கை மாணவர் கல்வி நிதியம் இரக்கமுள்ள அன்பர்களிடம் உருக்கமான வேண்டுகோளை விடுக்கின்றது.

உதவ விரும்பும் அன்பர்கள் மேலதிக விபரங்களுக்காக தொடர்புகொள்ளலாம்.

T.Phone: 00 61 3 9308 1484

E.Mail: kalvi.nithiyam@yahoo.com
Web: www.csefund.org

No comments: