காக்க காக்க


                                                                                     அ. முத்துலிங்கம்

இது எல்லாம் சரியாக ஒரு நிமிடத்தில் நடந்து முடியும். நான் கண்ணாடிக்கூண்டுக்கு முன் நிராயுதபாணியாக நின்றேன். அதிகாரி ஒரு நிமிடம் என்றார்.
நான் விட்ட பிழை என்னவென்றால் நியூ யோர்க் டைம் சதுக்கத்தில் நிஸான் வாகனத்தில் வெடிகுண்டு வைத்து அது கண்டுபிடிக்கப்பட்ட சில நாட்களில் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு பயணம் புறப்பட்டதுதான். கனடாவுக்கு விமானத்தில் பறப்பவர்கள் முதலில் அமெரிக்க குடிவரவு அதிகாரிகளைத் தாண்டவேண்டும். அதற்குப் பின்னர்தான் பாதுகாப்பு பரிசோதனை.

அந்த வெள்ளிக்கிழமை பின்மதியம் குடிவரவு வரிசையில் நின்றது குறைந்தது ஆயிரம் பேர் இருக்கும். அப்படி நீண்ட வரிசையை நான் எந்த நாட்டுக் குடிவரவிலும் காணவில்லை. எனக்கு முன் நின்றவர் உயரமான, பொய்தோள்மூட்டு வைத்த கோட் அணிந்த வெள்ளைக்காரர். எனக்கு பின்னால் நின்ற இளம்பெண் முகத்தில் இன்னும் அழுகை மிச்சமிருந்தது. காதலனுக்கு பிரியாவிடை சொல்லிவிட்டு வருகிறாள். ஓர் இரண்டு நிமிடம் அவள் தலை காதலனுடைய உடம்புக்கும் அவளுடைய உடம்புக்கும் நடுவில் இருந்தது. அதை விமானக்கூடத்தில் பலரும் பார்த்தார்கள்.

வரிசையில் ஆட்கள் கூடியதே ஒழிய அதிகாரிகளின் எ\ண்ணிக்கை அதேதான். ஆனால் அவர்கள் கேட்கும் கேள்விகள் அதிகரித்திருந்தன. பயணிகள் கேள்விகளுக்கு சரியாகப் பதிலளித்த பின் அவர்கள் காவிய கடவுச் சீட்டுகளை பரிசோதித்தார்கள். அது அவருடைய கடவுச்சீட்டா, அதில் தெரியும் முகம் அவருடையதா என்றெல்லாம் சோதித்தார்கள். ஒரு விரலை படத்தின் கீழே விட்டு தடவி உறுதி செய்தார்கள். கம்புயூட்டரின் வாயில் கடவுச்சீட்டை தேய்த்தார்கள். குடிவரவைக் கடக்க எனக்கு 45 நிமிடங்கள் ஆகின.

பாதுகாப்பு பகுதியிலும் அதே சனங்கள் வந்து குவிந்தார்கள். இங்கே அதிகாரிகள் முன்பு எப்போதையும் விட இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தார்கள், அவர்கள் நடத்தும் சோதனைகளும் அதிகரிக்கப்பட்டிருந்தன. என்னுடைய முறை வந்ததும் மூன்று அதிகாரிகள் என்னச் சூழ்ந்துகொண்டார்கள். வழக்கமாக ஒருவருக்கு ஒரு அதிகாரிதான். ஒருவர் என்னுடைய கடவுச்சீட்டையும் நுழைவு அட்டையையும் கைப்பற்றிக் கொண்டு மறைந்துவிட்டார். இன்னொரு சீருடை தரித்த பெண் என்னுடைய கைப்பெட்டியை திறந்தாள். கம்புயூட்டரில் இருந்து வந்த வயர் முனையை பெட்டியிலுள்ள பொருள்களில் தடவிவிட்டு வயர் முனையை திரும்பவும் எடுத்துப்போய் கம்புயூட்டரில் செருகினாள். இது ஒருவிதமான புதிய சோதனை. என்னுடன் பயணித்த ஒருவர் அது வெடிமருந்துச் சோதனை என்று சொன்னார். வெடிமருந்து துகள்கள் அகப்பட்டால் அதை கம்புயூட்டர் காட்டிக்கொடுத்துவிடுமாம்.

அதே சீருடைப்பெண் என்னுடைய கைப்பெட்டியை கவிழ்த்துப்போட்டு ஒவ்வொரு பொருளாக வெளியே எடுத்து பரிசோதித்து திரும்பவும் உள்ளே அடுக்கினாள். நான் அடுக்கியதிலும் பார்க்க ஒழுங்காகவும், சமமாகவும், சாமர்த்தியமாகவும் அடுக்கினாள். அடுத்தமுறை சும்மா அள்ளிப்போட்டுக்கொண்டு வரலாம், இந்தப் பெண்ணே அடுக்கிவிடுவாள். எனக்கு முன்னால் நின்ற தோள்மூட்டுக்காரரிடம் பறிமுதல் செய்த தண்ணீர் போத்தல் அவளுக்கு பக்கத்திலே நின்ற கறுப்பு பீப்பாயில் எறியப்பட்டிருந்தது. இன்னும் செண்ட் போத்தல்கள், சவர நுரை குவளைகள், வில்லுக்கத்திகள் என பீப்பாய் நிறைந்து வழிந்தது. சீருடைப் பெண் இலையான் கலைப்பதுபோல கையை அசைத்து என்னைப் போகச் சொன்னாள். வசனம் இல்லாத நாடக பாத்திரம்போல அவள் என்னிடம் ஒருவார்த்தைகூட பேசவில்லை.

என்னுடைய காலணி, செல்பேசி, மேலங்கி, இடைப்பட்டி அனைத்தையும் ஒரு சதுரக்கூடையில் வைத்து எக்ஸ்ரே சோதனை கூட்டுக்குள் தள்ளிவிட்டார்கள். அவை மறுபக்கம் போய்விட்டன. நான் இன்னும் கடக்கவில்லை. ஒரு பெண் ஆயுதம் வைத்துக்கொண்டு எனக்கு முன்னால் சும்மா நின்றாள். நான் தாயார் என்றேன். அவள் தான் பெண்களை மட்டுமே சோதிக்க முடியும் என்றாள். நான் ஆண் பரிசோதனைக்காரருக்காக காத்திருந்தேன். ஆயுதத்தோடு அவர் வந்தபோது நான் கைகளை விரித்து பறப்பதற்கு ஆயத்தமாவதுபோல நின்றேன். அவர் சில கேள்விகள் கேட்டார். உங்கள் பையில் செல்பேசி இருக்கிறதா? இல்லை. பையில் சில்லறைக்காசுகள் இருக்கின்றனவா? இல்லை. உங்களிடம் பெல்ட் இருக்கிறதா? இல்லை. எனக்கு கனடாவுக்கு வந்த புதிதில் காப்புறுதி முகவர் என்னிடம் கேட்டது ஞாபகத்துக்கு வந்தது. உங்களுக்கு RESP இருக்கிறதா? நான் இல்லை என்றேன். உங்களுக்கு RRSP இருக்கிறதா? நான் இல்லை, ஆனால் ரத்த அழுத்தம் இருக்கிறது என்றேன். முகவர் சிரித்துவிட்டு எனக்கு காப்புறுதி விற்காமலே போய்விட்டார்.

கேள்விகள் முடிந்ததும் அதிகாரி என் உடம்பின் சகல பாகங்களையும் கருவியால் தடவி பரிசோதனை செய்து என் உடம்பைத்தவிர நான் வேறு ஒன்றையும் காவவில்லை என்பதை உறுதிசெய்தார்.

சுவரிலே இருந்த பெரிய வட்டக் கடிகாரத்தில் முள் சுழன்றுகொண்டிருந்தது. இன்னும் அரை மணிநேரத்தில் என்னுடைய விமானம் என்னை விட்டுவிட்டு தன்பாட்டுக்கு புறப்பட்டு போய்விடும். நான் அதிகாரியிடம் என் அவசரத்தை சொன்னேன். அப்பொழுதுதான் அவர் இன்னும் ஒரு நிமிடத்தில் முடிந்துவிடும் என்றார்.

அவ்வளவு சோதனைக்கு பின்னரும் திருப்தி இல்லாதவராக தன் கைகளினால் என் உடம்பின் சகல பாகங்களையும் தடவிப்பார்த்தார். இறுதியாக முழு உடம்பையும் மூன்று பரிமாணத்தில் படம் எடுக்கும் கண்ணாடிக்கூண்டுக்குள் நுழைந்து என்னை தலையிலே இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு நிற்கச் சொன்னார். நான் அவர் சொல்லமுன்னரே கைகளை தலையில் வைத்துக்கொண்டுதான் நின்றேன். கண்ணாடிக் கதவுகள் தானாகவே பூட்டி மெல்லிய கிர்ர் சத்தம் எழுந்தது. சிறையில் இருந்து விடுதலை செய்வதுபோல கூண்டுக் கதவை திறந்து என்னை வெளியே விட்டார்கள். நான் சுதந்திரம் அடைந்த களிப்பில் ஒருகணம் நின்றேன்.

என்னுடைய கைப்பை, காலணி, மேலங்கி, பெல்ட், கடவுச்சீட்டு, நுழைவுச்சீட்டு, செல்பேசி எல்லாவற்றையும் சேகரித்தேன். நான் கொண்டுவந்த பொருள்களிலும் பார்க்க இன்னும் கூடிய சாமான்களை எனக்கு தந்துவிட்டார்கள் போலத் தோன்றியது. எண்ணிச் சரிபார்த்தேன். அவை எல்லாம் எனக்கு சொந்தமானவைதான்.

பெரிய வட்டக் கடிகாரத்தில் நிமிட முள் துடித்து நகர்ந்து ஒரு புது நிமிடத்தை ஆரம்பித்தது.

நன்றி amuttu .com

No comments: