xxxxxxxxxxxxx   மரணம்  xxxxxxxxxxxxxxxxxx


                                                    ஆக்கம் சௌந்தரி
மரணம் எனக்களித்த

மிகப்பெரிய இழப்பு என் தந்தை

மரணம்தந்த இல்லாமையின் வலி

என் வார்த்தைகளுக்கும் நோகும்

மரணபயம் மறைந்து போனது

நாளைகூட இறந்து போகலாம்

எதையும் சாதிக்காமல் - இந்த

உலகைவிட்டு மறைந்து போகலாம்

இறப்பற்ற வாழ்க்கை என்பது இல்லை

இறந்தபின் என்னை யாருக்குத் தெரியும்

என் நினைவுகள்கூட இல்லாது போகும்

கனவுகளில்,

கடந்துபோன நினைவுகளில்

காலத்தை கரைக்கும் மனிதா

உன்னை படைத்தவன்கூட

மரணத்தை மறைத்தே வைத்தான்

இருக்கும் நாட்கள் மிகவும் சொற்பம்

இருக்கின்ற ஒரே மூச்சும் போனபின்

கூடவருவது மரணம் ஒன்றுதான்


மரணமோர் அற்புதமான கருவி

யாரை எப்போது அணுகுவதென்று

அளவீடு கொண்ட அதிசயக் கண்டுபிடிப்பு

சில மரணங்கள் இயற்கையானவை

சில மரணங்கள் பயங்கரமானவை

சில மரணங்கள் சுவாரஸ்யமானவை

இன்னும்சில ஒருவரிச் செய்தியானவை

மரணம் பொதுவானதல்ல

மிகவும் அந்தரங்கமானது

ஒருவன்போல் இன்னொருவன் பிறப்பதுமில்லை

ஒருவன்போல் இன்னொருவன் இறப்பதுமில்லை


மரணம் வாழ்வின் எதிரியல்ல

இன்றோ நாளையோ என்றோ

ஒரு புள்ளியில் மரணம் சந்திக்கும்

எட்டாத தொலைவில்

வேண்டாத சந்திப்பே மரணமென்ற

கற்பனைசுகத்தில் மிதக்கும் மனிதா

அழையா விருந்தாளியாக

உன் வீட்டுக்குள் நுழைந்து

பாசக்கயிற்றை நேசத்தில் வீச

வாசலில் காத்துக்கிடக்கிறது மரணம்


மரணம் இது விஞ்ஞானிக்கு வியப்பு

ஆன்மீகவாதிக்கு ஓர் பாலம்

என் கவிதைக்கு கருப்பொருள்!


aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

No comments: