அரவணைப்பே பேரின்பம் என்பதையே அகமிருத்து !




            
   

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா




பட்டமும் வேண்டாம் பரிசும் வேண்டாம்
பண்புடனே வார்த்தை பகர்ந்தாலே போதும்
உள்ளொன்று வைத்து உரைக்கவும் வேண்டாம்
உண்மையாய் நடப்பதே உத்தமம் ஆகும்

ஏற்றுவது போல தூற்றவும் வேண்டாம்
இரங்குவது போல நடிக்கவும் வேண்டாம்
கூற்றுவன் போல கொல்லவும் வேண்டாம்
குறையின்றி வாழ்வில் நடந்தாலே போதும்

போற்றுவார் போன்று பொய்யராய் நின்று
தூற்றவும் வேண்டாம் தூக்கவும் வேண்டாம்
மாற்றுவே னென்று மயக்கவும் வேண்டாம்
மனமதனைச் செம்மை ஆக்கினால் நன்று

சேற்றினை வாரி கொட்டவும் வேண்டாம்
சின்னத் தனமாகச் செயலாற்ற வேண்டாம்
சோற்றிலே மண்ணை கொட்டவும் வேண்டாம்
சுகமான எண்ணங்களை சுமந்திடவே எண்ணு

நட்பென்று கூறி நட்டாற்றில் விடாதே
அற்பத் தனங்களை அடுக்கியே வையாதே
துன்புறத்து மெண்ணதை துணையாக கொள்ளாதே
என்றைக்கும் மனத்தில் நல்லதையே இருத்திவிடு

வீண்வார்த்தை வீண்தர்க்கம் விலக்கியே விட்டுவிடு
வில்லங்கம் என்பதை விலக்கவே முயன்றுவிடு
விளலுக் கிறைத்த நீராக இருக்காதே
வேதனைகள் போக்கும் வைத்தியனாய் ஆகிவிடு 

ஆண்டவன் இருக்கிறான் என்பதை எண்ணிவிடு
அடுத்தவர் துயர்துடைக்க ஆயுத்தம் ஆகிவிடு
அன்பைவிடப் பெரிது இல்லையென எண்ணிவிடு
அரவணைப்பே பேரின்பம் என்பதையே அகமிருத்து !

No comments: