உ
சிவமயம்
மும்மைமா மலப்பற்றின்
தளைய கற்றி
மூவுயிரும் ஈடேறத் தோன்றாத் துணையாய்
இம்மையிலும்
தொடர்ந்துவரும் எழுமையி லுமடியர்
எடுத்திடுமெப் பிறப்பினிலும் அருள்பா லித்தே
செம்மைவாழ்
வளித்தெமக்குப் பதஞ்சே விக்கும்
சிவனவனின்; தேவதூதனாய்ப் புட்ட
பதியில்
தம்மையுமிப்
புவியிலுள்ளோர் தரிசித்தே உய்யத்
தவப்பேற்றால் உதித்தவரே சத்யசாய் பாபா!
பத்தர்கள் நினைவுகூர்ந்து
விழா வெடுத்துப்
பாபாவின் நூற்றாண்டு பிறந்த நாளை
எத்திக்குங்
கொண்டாடி மகிழும் வேளை
இறைதூதன் எமக்கருளிப் போந்த நல்ல
தித்திக்கும்
அருளுரையைச் சிந்தைக் கெடுத்துச்
சீராக அறுகுணசீ ரமைப்பைச் செய்து
அத்தனருள் கூர்ந்தெம்மை
வழிந டத்தி
அருள்வரென நம்பியவர் அடிகள் தொழுவாம் !
சாய்பாபா தங்கியிருந் தருள்பா லித்த
தலங்களெல்லாம் தரிசிக்க விழைந்து அடியேன்
ஓய்வெடுத்து நான்குமுறை சென்ற போதெலாம்
ஒப்பரிய திருப்பாத தரிசனம் பெற்று
மெய்மறந்த அனுபவத்தை மீழ நினைத்தால்
மேனியெலாம் புல்லரிக்கும்! விழிநீர் சிந்தும்!
ஐயனவன் அருட்பார்வை வழிந டத்தி
ஆற்றுப்ப டுத்திவரும் பேறுதா னென்னே!
தாய்பார்க்கும்
கனிவோடு ஒருநாள் நானும்
தங்கியிருந்த வரிசைக்கு முன்னால் நின்று
சேய்போன்று
கைகூப்பி நின்ற வென்றன்
செவ்விரல்கள் வைத்திருந்த திருமுகம் தன்னை
வாய்விட்டுத்
தாவென்றார் வாங்கிய பின்னர்
வண்ணத்திருக் கைதூக்கி“மிக்க மகிழ்ச்சி” எனத்தேன்
தாய்மொழியாலென்
தலைதொட்டு ஆசீர்வ தித்தார்!
தாங்கவொணா இன்பதிர்வால் கண்பனிக்க நின்றேன்!.
பாங்கறிந்து பயனறிந்து பாரின் திசையெலாம்
பரவியதே பாபாவின் சிவநெறி வீச்சு!
தேங்குமவர்
அருள்வாக்கால் திருவிழி சிந்தும்
திருநோக்கால் ஆன்மீகம் சிறக்கப் பெற்று
ஓங்கியுயர்ந்
தேவாழ்வில் உகைத்தோர் தொகையை
ஒழுகலாறில் திளைத்தெழுந்த உத்தமர் கணக்கை
ஈங்கெனது சொன்மணியால்
இயம்பப் போமோ?
இன்பொழுகு பத்தரவர் இதயம் வாழ்த்தும்!
அன்புதிர்க்கும்
அருள்விழியால் நோக்கும் போது
அற்புதமாய் மின்சக்தி போன்ற உணர்வு
என்பெல்லாம்
ஊடுருவி இன்பம் பெருக்கும்!
இனந்தெரியா பேராற்றல் அவரிற் கண்டேன்!
இன்றந்தத் திருவுருவை
எங்கு காண்போம்?
இறைமைந்தன் நூற்றாண்டுப் பிறந்த நாளை
மன்பதைகள் அகிலமெலாம்
கொண்டாடும் வேளை
மறைபாடி மனமலரைத் தூவித் துதிப்போம்!
இயற்றியவர்
பல்மருத்துவ
கலாநிதி பாரதி இளமுருகனார்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அரும்பதவிளக்கம் -
மும்மை – முற்பிறப்பு
மாமலம் - இருண்மலம் ஆணவமலம்
தளை - கட்டு
மூவுயிர் – விஞ்ஞானகலர் (ஆணவமலம் மட்டும் உள்ளவர்) பிரளயாகலர் -
ஆணவம் கன்மம் ஆகிய இருமலங்கள் உள்ளவர்கள் சகலர்(ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்களும்
உள்ளவர்கள்)
தோன்றாத்துணை - வெளிக்காட்டாது உடனிருந்து உதவுவது
எழுமை – ஏழ் வகைப் பிறப்பு
பதம் - முத்திநிலை
அறுகுண சீரமைப்பு – மனிதனிடம் உள்ள காமம் சினம் பயம் பொறாமை கவலை போட்டி ஆகிய ஆறு குணங்களை ஒழுங்குபடுத்துவதாகும்
அத்தன் - இறைநிலையில் உள்ளோன்
உகைத்தோர் - உயர்வெழும்புதல்
ஒழுகலாறு - ஒழுக்க நெறி
மன்பதை – மனித இனம்
மறை - திருமுறை
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------








No comments:
Post a Comment