இரத்த அழுத்தத்துக்கு போடவேண்டிய மாத்திரையை போட்டு படுக்கையில் படுத்திருந்த பரமசிவனைத் தட்டி எழுப்பினான் பேரன் சிவா. பேரன்மேல் மிகுந்த பாசம் அவருக்கு. அவருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனுக்கு கதை சொல்வார்.
இரண்யாட்சசன் பூமியை பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளிந்து கொண்டான் என்றும் மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து கடலுக்குள் ஒளித்து வைத்திருந்த பூமியை மீட்டெடுத்த கதையையும் சொல்லிக் கொடுத்தார். அதேசமயம் கலிலியோ பூமி தட்டையல்ல உருண்டையானது என்று கண்டுபிடித்துக் கூறியதை உலகம் ஏற்றுக் கொண்டதையும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
இவற்றையெல்லாம் கேட்டுவந்த சிவாவுக்கு கலிலியோவுக்கு முன்பே முருகன் உலகம் உருண்டையானது என்பதைக் கண்டுபிடித்து விட்டார் என்ற உண்மை தெரியவந்தது. இதைச்சொல்லவே தாத்தாவை எழுப்பினான் சிவா. படுக்கையிலிருந்து எழுந்த பரமசிவன்,
“என்னப்பா, என்ன வேணும், கதை சொல்லணுமா?” என்று கேட்டார்.
“கதை வேண்டாம் தாத்தா. நீங்க சொன்ன கதையில் ஒரு தப்பு இருக்கு தாத்தா”
“கலிலியோ பூமியை உருண்டைன்னு கண்டு பிடிச்சார்னு சொன்னீங்களே தாத்தா. ஆனால் அதுக்கு முன்னாலே முருகன் கண்டு பிடிச்சுட்டார் தாத்தா” என்றான்.
இதைக்கேட்ட தாத்தா அதிர்ச்சியடைந்தார். என்னப்பா சொல்ற, சொல்றத தெளிவாச் சொல் என்றார். உடனே சிவா சொல்லத் தொடங்கினான். தாத்தா, மாம்பழத்துக்காக சிவன் வைத்த போட்டியில் முருகன் உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார். அவருக்கு விமானம்போல மயில் உதவியது. அதனால்தான் மயிலைத் தேர்ந்தெடுத்தார்.
இல்லாவிட்டால் தேவர்களின் படைத்தளபதியாக கருதப்படும் முருகன் தேரில் அல்லவா ஏறிப்புறப்பட்டிருப்பார். மயிலை விட தேர் வேகமாகவே செல்லும். அப்படிச் செல்லாததற்கு காரணம் அவருக்கு தெரியும் பூமி தட்டையானதல்ல என்று. இப்ப சொல்லுங்க தாத்தா, முருகனுக்கு தெரிந்தது மகாவிஷ்ணுவுக்கு தெரியலையா? தெரிந்திருந்தால் கூர்ம அவதாரம் எடுத்து கடலுக்குள் சென்றிருப்பாரா? என்றான்.
மனிதனான கலிலியோவுக்கே புரிந்த ஒன்று கடவுளான முருகனுக்கு தெரிந்திருக்காமலா இருந்திருக்கும்? மருமகன் முருகனுக்கு தெரிந்த உண்மை மாமா மகாவிஷ்ணுவுக்கு தெரிந்திருக்காதா? சொல்லுங்க தாத்தா என்றான் சிவா.
தாத்தா பரமசிவன் குழம்பினார். அந்த குழப்பத்துக்கு காரணம் குழந்தைகளுக்கு கடவுள் கதையையும் விஞ்ஞானம் போன்ற பொது அறிவையையும் ஒரே நேரத்தில் கற்றுத்தரலாமா என்பதுதான்.
-சங்கர சுப்பிரமணியன்.
No comments:
Post a Comment