உலகச் செய்திகள்

 பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை - டாக்கா நீதிமன்றம் தீர்ப்பு

உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதல் - 3 சிறுவர்கள் உட்பட 26 பேர் உயிரிழப்பு 

டுபாய் விமான கண்காட்சியில் இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கியது - விமானி பலி

வியட்நாமில் வெள்ளப்பெருக்கு ; 43 பேர் உயிரிழப்பு

லெபனான் எல்லையில் இஸ்ரேலின் பாதுகாப்புச் சுவர் - அகற்றுமாறு ஐ.நா. வலியுறுத்து



 பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை - டாக்கா நீதிமன்றம் தீர்ப்பு

17 Nov, 2025 | 04:42 PM
கடந்த ஆண்டு பங்களாதேஷில் நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்புச் சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில், ஷேக் ஹசீனா “குற்றவாளி” என தீர்ப்பளித்த, டாக்கா சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இன்று (17) டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் நீதிபதி, ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய தன் நாட்டு மக்களையே, அவர் கொலை செய்ய உத்தரவிட்டமை உறுதியாகியிருப்பதாக தீர்ப்பின்போது தெரிவித்துள்ளார். 

2024ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பங்களாதேஷ் அரசுக்கு எதிராக மாணவர்களால் நடத்தப்பட்ட பேராட்டங்களை அரசு தீவிரமாக ஒடுக்க நடவடிக்கை எடுத்திருந்தது. இதில் சுமார் 1400 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷேக் ஹசீனா பங்களாதேஷிலிருந்து தப்பிச் சென்று, இந்தியாவில் தஞ்சமடைந்தார். 

78 வயதுடைய ஷேக் ஹசீனா தற்போதும் இந்தியாவிலேயே தலைமறைவாகியுள்ள நிலையிலேயே பங்களாதேஷ் நீதிமன்றம் இவ்வழக்கினை விசாரித்து, அவருக்கு எதிராக மரண தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளது. 

நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை கொல்வதற்கு கொடிய அடக்குமுறையை பிரயோகித்து கடுமையான உத்தரவுகளை பிறப்பித்த குற்றச்சாட்டிலேயே ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   நன்றி வீரகேசரி 





உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதல் - 3 சிறுவர்கள் உட்பட 26 பேர் உயிரிழப்பு  

20 Nov, 2025 | 12:15 PM

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைக் கொண்டு நடத்திய பாரிய தாக்குதலில் 3 சிறுவர்கள் உட்பட குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

ரஷ்யா 476 ட்ரோன்கள்  மற்றும் 48 ஏவுகணைகளை பிரயோகித்து உக்ரைனின் மேற்கு நகரான டெர்னோபிலில் (Ternopil) உள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை நோக்கித் தாக்குதல் நடத்தியதில் உயிரிழப்புகள் ஏற்பட்டதோடு, 93 பேர் படுகாயமடைந்ததாகவும் அவர்களில் 18 பேர் சிறுவர்கள் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

ரஷ்ய X-101 குரூஸ் ஏவுகணைகளே இந்தத் தாக்குதலுக்கு


பயன்படுத்தப்பட்டிருப்பதாக உக்ரைன் விமானப் படையினர் கூறுகின்றனர். 

ரஷ்யாவால் ஏவப்பட்ட 476 ட்ரோன்கள் மற்றும் 48 ஏவுகணைகளில் 442 ட்ரோன்கள், 41 ஏவுகணைகளை உக்ரைன் விமானப்படை சுட்டு வீழ்த்தியதாக அப்படையினர் தெரிவித்துள்ளனர். 

மேலும், உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் அதேவேளை அங்கும் 30க்கு மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். 

உக்ரைன் - ரஷ்யா இடையே நீடித்து வரும் போரானது 1,364வது நாளாக இன்றும் (20) தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.     நன்றி வீரகேசரி 




டுபாய் விமான கண்காட்சியில் இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கியது - விமானி பலி

Published By: Digital Desk 3

21 Nov, 2025 | 06:01 PM

டுபாய் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டுபாயில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் விமான கண்காட்சி கடந்த திங்கள் கிழமை (நவம்பர் 17) ஆரம்பமானது.

இதில் உலகம் முழுவதிலிருந்து சுமார் 1,500 விமானங்கள் பங்கேற்றன. இந்நிலையில் விமான கண்காட்சியின் இறுதி நாளான இன்று வெள்ளிக்கிழமை இந்திய விமானப் படையின் தேஜஸ் போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கண்காட்சியில் ஆயிரக்காணக்கான மக்கள் சாகசத்தை பார்த்துக்கொண்டு இருக்கும்போது இந்த விபத்து நடந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேஜஸ் விமானம் இந்தியாவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவத்தால் தயாரிக்கப்படும் மிக முக்கியமானது எனக் கூறப்படுகிறது. இது மணிக்கு 2200 கிலோ மீட்டருக்கு மேல் வேகமாக செல்லக் கூடியது. மேலும் விமானம் தாங்கி கப்பலில் இருந்து புறப்படவும், அதில் தரையிறங்கும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.   நன்றி வீரகேசரி 






வியட்நாமில் வெள்ளப்பெருக்கு ; 43 பேர் உயிரிழப்பு 

Published By: Digital Desk 3

21 Nov, 2025 | 12:59 PM

மத்திய வியட்நாமில் வார இறுதியில் பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், காணாமல் போன ஒன்பது பேரைத் தேடும் பணி தொடர்வதாக  அந்நாட்டு மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை, 52,000 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. அரை இலட்சம் வீடுகள் மற்றும் வணிக் நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களில் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி 1.5 மீற்றரை கடந்துள்ளது. சில இடங்களில் 1993 ஆம் ஆண்டின் அதிகபட்ச வெள்ள உயரமான 5.2 மீட்டரையும் கடந்ததுள்ளதாக கூறப்படுகிறது.

வியட்நாமின் கடலோர நகரங்களான ஹோய் ஆன் மற்றும் நா ட்ராங்


ஆகியவை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் மத்திய மலைப்பகுதிகளில் உள்ள ஒரு முக்கிய கோப்பி உற்பத்திப் பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சூறாவளியினால் ஏற்கனவே விவசாயிகளின் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.


சில மாதங்களாகவே வியட்நாமில் சீரற்ற வானிலை நிலவுகிறது. கல்மேகி மற்றும் புவாலோய் ஆகிய இரண்டு சூறாவளிகள் ஒன்றன் பின் ஒன்றாக  தாக்கி பல உயிரிழப்புகள் மற்றும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை வியட்நாமில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகள் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

மண்சரிவுகள் முக்கிய வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளை சேதப்படுத்தியதை அடுத்து அவசரகால நிலையை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபலமான சுற்றுலா நகரமான டா லாட்டுக்கான முக்கிய நுழைவுப் பாதையான மிமோசா கணவாயின் ஒரு பகுதி பள்ளத்தில் இடிந்து விழுந்துள்ளமையினால் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இடிந்த பகுதியில் உருவான பெரிய இடைவெளியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாவது தவிர்க்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்


பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பதற்கு அவசரகால தங்குமிடங்களை அமைக்கும் பணிகளில் இராணுவப் படையினரும் பொலிஸாரும் ஈடுப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வியட்நாமில் ஞாயிற்றுக்கிழமை வரை மிதமானது முதல் கடும் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 





லெபனான் எல்லையில் இஸ்ரேலின் பாதுகாப்புச் சுவர் - அகற்றுமாறு ஐ.நா. வலியுறுத்து

18 Nov, 2025 | 05:15 PM

லெபனானின் யாரோன் பகுதியில் இஸ்ரேல் எழுப்பிய சுவரை அகற்றுமாறு இஸ்ரேல் இராணுவத்துக்கு ஐக்கிய நாடுகளின் எல்லை காக்கும் படை வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

லெபனானில் இஸ்ரேல் எழுப்பிய சுவரானது அந்நாட்டின் எல்லையை தாண்டி வருவதாக லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் (Joseph Aoun) குற்றம்சாட்டியுள்ளார். 

அதைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையால் வரைபடத்தில் எல்லையாகக் குறிப்பிடப்பட்டுள்ள நீலக் கோட்டை இந்த சுவர் தாண்டி நீண்டிருப்பதை சுட்டிக்காட்டி, பாதுகாப்புச் சுவரை அகற்றுமாறு இஸ்ரேலுக்கு ஐ.நா.  அறிவுறுத்தியுள்ளது. 

இஸ்ரேல் - காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் களமிறங்கினர். இதனால் லெபனான் மீதும் இஸ்ரேல் போர் நடத்தியது. 

பின், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலையீட்டால் கடந்த ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. 

இதற்கிடையே 2022இல் காசாவுடன் போர் தொடங்கியதில் இருந்தே தனது வடக்கு எல்லையை இஸ்ரேல் பலப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே லெபனான் எல்லையில் இஸ்ரேல் சுவர் எழுப்பியிருந்தது. 

அந்த சுவர், லெபனான் எல்லையை தாண்டுவது போல் அமைக்கப்பட்டிருப்பதாக காரணம் காட்டப்பட்டுள்ள நிலையில், அந்த சுவரை அகற்றுமாறு ஐ.நா இஸ்ரேலுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 






No comments: