தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்-3…..சங்கர சுப்பிரமணியன்.

அங்கிருந்து மறுபடியும் கீழ்தளம் சென்று வாடகை வாகனத்தைப் பிடிக்க வேண்டும்.

எவருக்கும் ஆங்கிலம் சிறிதும் தெரியவில்லை. குடிவரவுச் சோதனையில் இருப்பவர்கள் கூடவார்த்தைகளை அளந்தே ஆங்கிலத்தில் பேசுகின்றனர். விளக்கம் கேட்டு எந்த பதிலையும் பெறமுடியாது. ஆதலால் டெர்மினல் இரண்டுக்கு சென்று சிம் கார்டு வாங்கும் முயற்சியைக் கைவிட்டேன்.

ஒரு வழியாக கீழ்த்தளம் வந்து வாடகை வாகனங்கள் நிற்கும் இடத்தை அடைந்தேன். நான் தங்கும் ஹயட் ஓட்டலின் விலாசத்தை சீனமொழியில் மொழிபெயர்த்து பிரிண்ட் எடுத்திருந்தேன். தவிர, வீசேட் மற்றும் கூகுள் மொழிபெயர்க்கும் ஆப்களையும் தரவிறக்கம் செய்து தயார் நிலையில் வைத்திருந்தேன். ஆனால் சிம் கார்டு வாங்காததால் அவற்றைப் பாவிக்க இயலவில்லை.

இருப்பினும் விலாசத்தை பிரிண்ட் எடுத்திருந்ததால் தயக்கமின்றி இருந்தபோது அத்தி பூத்தாற்போல் என்பார்களே அதேபோல் ஒரு அதிசயம் நடந்தது. ஓரளவு ஆங்கிலம் தெரிந்த ஒருவர் அங்கிருந்தார். அந்த தண்டாயுதபாணியே தண்டத்துடன் வந்து கடவுள் இருக்கான் குமாரு என்பதை நிரூபித்தார். ஆனால் அதற்குபிறகு ஒன்டைம் பாஸ்வேட் போல தண்டபாணி சீனாவைவிட்டு கிளம்பும்வரை வரவேயில்லை.

அவரின் உதவியுடனும் என்னிடமிருந்ந சீனமொழியிலிருந்த விலாசத்தின் ஊடாகவும் வாகன ஓட்டுனரின் தலையின் பின்புறம் ஒளிவட்டம் தெரிந்ததைப் போன்ற ஆறுதலோடு கிட்டத்தட்ட ஒருமணி நேரப்பயணத்திற்கு பிறகு ஓட்டலை வந்தடைந்தோம். வாடகை வாகனத்துக்கு பணம் கொடுக்கவேண்டும். கையில் சீனாவின்
யுயன் எடுத்துச் சென்றிருந்தேன்.

கூகுள் கொடுத்த தகவலின்படி பயணித்த தூரத்துற்குண்டான பணம் மற்றும் இரவுப் பயணத்துக்கான அதிகம் பணம் எல்லாவற்றையும் கணக்கிட்டு வைத்திருந்தேன். முதல் அனுபவம் சீனர்களின் மேல் நன்மதிப்பை உருவாக்கியது. ஓட்டலில்
இருபத்திநான்கு மணிநேரமும் வரவேற்கும் வசதியிருந்ததால் பிரச்சனை ஒன்றுமில்லை மொழிப்பிரச்சனையைத் தவிர.

ஓட்டுநரின் கைபேசியில் இருந்த மொழிபெயர்ப்பு செயலியின்

உதவியாலும் சைகை மொழியாலும் ஒருவாறு சமாளித்து அறைக்கு வந்து சேர்ந்தோம். ஆள்பாதி ஆடைபாதி என்ற பழமொழி தோற்றுப்போனது. டிப்டாப்பாக டை, கோட் என்று கம்பீரமாக வரவேற்பில் இருந்து வரவேற்றவருக்கு ஒற்றைச் சொல்கூட ஆங்கிலத்தில் தெரிந்திருக்கவில்லை.

அதைப்பற்றி நடந்த ஒரு அனுபவத்தைச் சொல்கிறேன். தங்கும் அறையில் காபி தயாரிக்கும் சாதனம் இருந்தது. அதில் காபி புல்லட் என்ற காபித்தூள், சர்க்கரை மற்றும் பால்கலந்த புல்லட்போல் மூடியிருக்கும் சிறு டப்பாவை வைத்து சாதனத்தை இயக்க வேண்டும். சுடுதண்ணீருடன் கலந்து காபி வெளிவரும். பால் கலந்திருப்பினும் வெளிவந்த காபி கருப்பாகவே இருந்தது.

எங்களுக்கு பால் தேவைப்பட்டது. மில்க் என்றால் அவர்களுக்கு தெரியவில்லை. கவ்மில்க் என்று சொன்னேன். அவர்களுக்கும் தெரிந்ததுபோலவும் இருந்தது. தெரியாதது போலவும் இருந்தது. அதன்பின் மாடுபோல் “மா” என்று கத்த காண்பித்தேன். மடுவில் பால் கறப்பதுபோல் விரல்களால் அபிநயம் செய்து பசுவிடம் பால் கறப்பது மாதிரி கறந்தும் காண்பித்தேன்.

கறந்ததுமட்டுமின்றி டம்ளரில் பால் குடிப்பதுபோல் சைகைமூலம்

குடித்தும் காண்பித்தேன். அவர்கள் முகத்தில் ஒளி தெரிந்தது. இதைப்புரிய வைக்க என்னுடன் சேர்ந்து நான்குபேர் ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்தது. போனஸாக என் மனைவியிடமிருந்து பாராட்டும் கிடைத்தது. நன்றாக அபிநயம் பிடிப்பதாகவும் பரதநாட்டியக்கலை ஞானம் இருப்பதாகவும் சொன்னதால் பெருமையடைந்தேன்.

கிட்டத்தட்ட இரவு இரண்டு மணியளவில ஓட்டலில் அறைக்கு வந்து சேர்ந்தோம். அறையில் எல்லாமே எலக்ட்ரானிக் மயம்தான். சுவரில் ஸ்விட்ச் ஒன்றும் தென்படவில்லை.

டார்க் பரௌன் நிறத்திலான ப்ளாஸ்டிக் சுவரோடு சுவராக பதிந்திருந்தது. அதில் மிகச்சிறிய எழுத்துக்கள் பொன்வண்ணத்தில் மின்னின. அதைத் தடவிப்பார்த்தேன். திடீரென நுழைவு அறையில் ஒளிபிறந்தது.
பட்டணத்தில் பூதம் படத்தில் பூதம் “ஜீபூம் பா” என்று சொல்லி அழைத்ததும் பூதம் வருவதுபோல் சுவரில் மின்னிய எழுத்துக்களை தொட்டதும் விளக்கு எரிகிறது.

என்னடா இது என்று ஆராய்ந்து பாரத்தேன். அப்பறம்தான் தெரிந்தது. இதுவா சங்கதி என்று தெரிய வந்தது. காபிமெஷின் என்ற எழுத்தைத் தொட்டதும் அந்த இயந்திரம் இருந்த பகுதியில் இருந்த இடத்தில் மட்டும் ஒளிபிறந்தது. இப்படி ஒவ்வொரு இடத்தைத் தொட்டதும் ஒவ்வொரு இடத்தில் விளக்கு எரிந்தது. படுக்கைக்கு அருகில் இருந்த அலங்கார விளக்குகளைத் தவிர ஒளிவரும் இடம் தெரியவில்லை.

மேலும் ஒன்றிரண்டு இடங்களைத் தவிர ஒளி எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் அமைத்திருந்தார்கள். எந்த இடத்திற்கு வெளிச்சம் தேவையோ அதைப்பற்றிய எழுத்தின்மேல் தொடவேண்டும். தொட்ட இடத்தை மறுமுறை தொட்டால் வெளிச்சம் மறைந்துவிடும். தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் கை பட்டுவிடப் பட்டுவிட மலரும் என்ற பழைய திரைப்படப்பாடல் ஞாபகத்துக்கு வந்தது.

சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகு அறிவொடு படைத்து விட்டாய் என்ற பாரதியார் கவிதையும் நினைவுக்கு வந்தது. என்ன இது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறாய் என்று திரும்பவும் மாடசாமி அண்ணாச்சி குறிக்கிடுகிறார். இல்லை என் கற்பனையைத்தான் சொல்கிறேன் என்றேன்.

குழம்பாதீர்கள் முடிச்சை அவிழ்த்து விடுகிறேன். தொட்டுவிடத் தொட்டு எரியும் பின் கைபட்டுவிட பட்டுவிட அணையும் என்ற கற்பனை இந்த இடத்திற்கு பொருந்துகிறதல்லவா? சரி, தொட்டுவிட தொட்டுவிட இருக்கட்டும் நாம் விட்ட இடத்துக்கு வருவோம். குளியலறையும் கழிப்பறையும் தானியங்கி முறையில் இயங்கியது.

கழிப்பறையில் கூட எல்லாமே ரிமோட்தான். டாய்லட் வெப்பநிலை

மற்றும் சீட்டைத் திறந்து மூடுவது முதல் ப்ளஷ் பண்ணுவது வரை எல்லாமே ரிமோட்தான். இவற்றை எல்லாம் புரிந்துகொள்ளவே வெகு நேரமாகியது. நான் துபாய், சிங்கப்பூர், மலேசியா, சென்னை பெங்களூரு மற்றும் கேரளாவில் பலமுறை ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கிறேன். இந்த மாதிரி வசதிகளை பார்த்ததில்லை.

முதல்நாள் இரவு பயணக்களைப்பால் நல்ல நித்திரை. விடிந்ததும் சிம் கார்ட் வாங்க புறப்பட்டோம். நல்லவேளையாக ஆஸ்திரேலியாவில் இருந்து வரும்போதே விமானநிலையத்தில் சிம்கார்ட் வாங்க முடியாவிட்டால் மாற்றுவழியையும் கண்டுபிடித்து வைத்திருந்தேன்.

அந்த மாற்றுவழி என்னவென்றால் நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து 1.2 கிலோமீட்டரில் தொலைவில் இருந்த சைனா மொபைல் கடையில் பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான்.

காலை எழுந்தவுடன் முதல் வேலையாக சிம் கார்ட் வாங்க சைனா மோபைல் வாங்க புறப்பட்டு கீழே வந்தோம். மெல்பனில் இருந்து செல்லும்போதே கூகுள் வரைபடத்தோனு
விலாசத்தை அச்செடுத்து எதற்கும் இருக்கட்டும் என்ற முன்னேற்பாடுடன் வைத்திருந்தோம். வரவேற்பில் ஒன்றுக்கு மூன்றுபேர் இருந்தனர்.

வந்துபோகும் சீனர்களிடம் மிகவும் அட்டகாசமாக பணியாற்றும் பாங்கைப் பார்த்து பிரமித்தேன். அத்தனை சுறுசுறுப்பு. நன்றாக ஓடும் வாகனம் நடுரோட்டில் நின்றதுபோல் எங்களைப் பார்தததும் அவர்கள் நிலைமை ஆகியது. சத்திரசிகிச்சை நடத்தும் இடத்தில் இரண்டு மூன்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் நோயாளியைச் சுற்றி நின்று கொண்டிருப்பது போல் எப்போதும் எங்களுக்கு மொழித்தடையை நீக்க மூன்று நான்குபேர் சூழ்ந்து கொள்வார்கள்.

-சங்கர சுப்பிரமணியன்.

No comments: