கிளிக் கண்ணிகள் (சென்றவாரத்தொடர்ச்சி)

 



இயற்றியவர்

பல்மருத்துவ கலாநிதி

பாரதி இளமுருகனார்

 



பழந்தமிழ்ப் பெருமையைப் பறைசாற்றி வருவோர்தம்

வழக்கத்தில்; ஓம்பாரடி - கிளியே

வாய்ச்சொல்லில் தீரரடீ!

 

 



 

 




நடைமுறையில் ஓம்பிடாத நனிசிறந்த விழுமியங்கள்

நாளடைவில் நலியுமன்றோ? கிளியே

நாளும்புழங் கச்சொல்லுவாய்!

 

வாய்பேசாச் சீவன்களை வேள்வியென்ற பாவனையில்

கோயிலில் உயிர்ப்பலியா?  - கிளியே

கொடுமையிற் கொடுமையடீ!

 

மனதைச் சலவைசெய்தே சைவர்களை மதம்மாற்றத்

தினமும் முயலுகிறார் கிளியே

சிறுநெறி ஈனரடீ!

 

செந்தமிழ் வளர்ப்போரைத் தேடிஇனங் கண்டுகொண்டேன்

சிந்தை மகிழுதடீ கிளியே

தேன்றமிழும் வாழுமடி!

 

நாடுதோறும் தமிழ்ப்பள்ளி நல்லதமிழ் பயிற்றிடவே

பாடுபடும் தொண்டர்களைக் - கிளியே

பாராட்ட வேண்டுமடி!

 

மறக்காது செய்ந்;நன்றி மாண்பைப் போற்றுபவர்

சிறப்பாக வாழ்கின்றார் -  கிளியே

சீரியரை வாழ்த்திடடீ!

 

நல்லோரும் வாழ்வதனால் நாட்டில் நிறைந்தமழை

எல்லோர்க்கும் பெய்யுதடீ கிளியே

இறைவனின் கருணையோடீ!

 

அன்று தமிழிற் பூசை ஆற்றிய முறைமையெலாம்

இன்றினித்; தொடர்ந்திடுமோ கிளியே

ஏற்காரோ தமிழ்மந்திரம்?

 

முன்னோர்கள் இயற்றிவந்த முறையான தியானமுறை

இன்றோங்கிப்; பரவுதடீ கிளியே

ஈடேற்றம் தோன்றுதடி!

 

நிராதார யோகமதை நித்தம் பயில்வோரை

பராபரன் ஏற்பானடி கிளியே

பற்றையும் பற்றாரடி!

 

செந்தண்மை அந்தணராய்;ச் சிறந்திடச் சாதியேது?

இந்துமதம் மறுக்கலையே! கிளியே

எல்லோர்க்கும்; தகுதி உண்டே!

 

மூப்படைந்த பெற்றோரை முறைப்பிள்ளை கைவிட்டால்

காப்பதற்கு அரசாங்கம் - கிளியே

கரம் நீட்டும் நாடிதுவே!

 

பல்லினத்து மக்களையும் பாசத்துட ணணைத்து

நல்லனசெய் நாடிதுவே கிளியே

நன்றிசொலி வணங்குவமே!  

 

ஓம்புதல் - நடைமுறையில் பாதுகாத்தல்;

விழுமியங்கள் - சிறந்த பண்புகள்  சிறுநெறி - இழிந்த வழி சீரியர்- உயர்ந்தோர்  முறைமை வழக்கம்  நிராதார யோகம் - தற்போதம் இழந்து பரம்பொருளை நினைந்தவண்ணம் பற்றற்ற நிலையில் இயற்றும் தியானம் பராபரன் - பரம்பொருள் செந்தண்மை அந்தணரர்; - சிறப்பான குணங்களைக் கொண்ட பெரியோர்;

No comments: