மனமகிழும் வகையினிலே மற்றவரை வைத்துவிடு !

 





         














மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா




பசி சென்றபின்னர் சாப்பிட அழைக்காதே 
மனம் உடைந்தபின்னர் மன்னிப்பு கேட்காதே
தாகம் இருப்பாரின் தாகத்தைத் தணித்துவிடு
தலையையினைத் தடவி தண்ணளியைக் காட்டு

பரிசுகள் கொடுத்து பரிகாசம் செய்யாதே
பசிக்கின்ற  வேளை உணவளிக்க தயங்காதே
ஏங்குவார் யாவரையும் ஏளனம் செய்யாதே
இரக்கமே எல்லோர்க்கும் இறையீந்த சொத்தாகும் 

உறவாடி உறவாடி  உயிரெடுக்க முனையாதே
உள்ளொன்று வைத்துப் புறமொன்று உரையாதே
கள்ளநிறை மனத்தோடு கட்டியே அணைக்காதே
கருணையுடன் யாவரையும் கட்டியே அணைத்துவிடு

உன்கருத்தை உட்செலுத்த ஒருபோதும் முயலாதே
உன்விருப்பம் நிறைவேற மற்றவரை வருத்தாதே
மனமுடைய வைத்துவிட்டு மருத்துவனாய் மாறாதே
மனமகிழும் வகையினிலே மற்றவரை வைத்துவிடு

எல்லாமே தெரியுமென எடுத்தெறிந்து நடக்காதே
எல்லாரும் உன்னடிமை என்றுமே எண்ணாதே
சொல்லாலே கொல்லாதே சூழ்ச்சிகள் செய்யாதே
நல்லவற்றை செய்வதற்கு நாளுமே எண்ணிவிடு 

துயர்கொடுக்கும் நீயும் அயர்வடைந்து போய்விடுவாய்
அயர்வடையும் உனைநோக்கி ஆருமே வரமாட்டார்
இறைமட்டும் இரங்கி ஏந்திடவே வந்திடுவார்
கறையான உன்னெண்ணம் கரைந்தோடும் அப்போது !



No comments: