தீபாவளித் திருநாள் சிறப்புடை நாளே !

 




















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்         

மெல்பேண் …. அவுஸ்திரேலியா




தீயவை அகன்றால் நல்லவை மலரும் 

தீபா வளியின் தத்துவம் ஆகும் 

ஆணவ அரக்கன் அழிந்த நன்னாளே 

ஆனந்தத் தீபா வளியாய் ஆனது


அதிகாலை அனைவரும் எழுந்துமே விடுவார் 

அக மகிழ்வுடனே நீராடி மகிழ்வார் 

புத்தாடை அணிந்து புத்துணர் வடைவார் 

அத்தனை மகிழ்ச்சியும் வந்ததாய் நினைப்பார்


தீபா வளியில் தித்திப்பு நிறையும் 

திரும்பிய திசையெலாம் மத்தாப்புச் சிதறும் 

பட்டாசு சத்தம் பரவியே நிற்கும் 

குடும்பங்கள் எல்லாம் குதூகலம் கொள்ளும்


தீபாவளித் திருநாள்  சிறப்புடை நாளே 

இருப்பாரும் மகிழ்வர் இல்லாரும் மகிழ்வர் 

அவரவர் ஆனந்தம் அவரவர்க்கு உரியதே 

அகமகிழ் வுறுவுதே அனைவர்க்கும் பொதுவே


பட்டி மன்றம் பாங்காய் நடக்கும் 

பற்பல இடங்களில் இசையும் ஒலிக்கும் 

நாட்டியம் இருக்கும் நல்லுரை இருக்கும் 

முத்தமிழ் யாவும் முத்தாய் ஒளிரும்


ஆலயம் அனைத்தும் தீபத்தில் ஒளிரும் 

அனைவரும் ஆலயம் நோக்கியே செல்வர் 

அகத்தினில் இருக்கும் அனைத்தையும் கேட்பார் 

அமைதியாய் ஆண்டவன் அடியினைப் பரவுவார்


அம்மா அப்பா உறவுகள் சேர்ந்து 

ஆலயம் சென்றால் ஆனந்தம் பெருகும் 

அன்பும் அறமும் அகத்தில் அமர்ந்திட 

வேண்டியே நிற்பது நல் வரமாகும்


தீபா வளியில் தீமைகள் அகன்றிட 

யாவரும் இறையை வேண்டியே நிற்போம் 

கோபங்கள் தவிர்ப்போம் குணைத்தை இருத்துவோம் 

குவலயம் நலமுற வேண்டுவோம் இறையை !






No comments: