எங்க பாட்டன் சொத்து - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 தன்னுடைய ஒளிப்பதிவு திறமையினால் ரசிகர்களிடையே புகழ்


பெற்றவர் ஒளிப்பதிவாளர் எம் . கர்ணன். இவருடைய கேமரா கோணங்கள் ரசிகர்களிடேயே வரவேற்பை பெற்றிருந்தன. ஆரம்பத்தில் டபிள்யு . ஆர். சுப்பராவ் , வி . ராமமூர்த்தி போன்றோரிடம் தொழில் பழகிய கர்ணன் சபாஷ் மீனா, சங்கிலித்தேவன், சாரதா, கற்பகம் , கை கொடுத்த தெய்வம் , மணியோசை போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அதன் போது இயக்குநர்களாக புதிதாக அறிமுகமான கே. எஸ். கோபாலகிருஷ்ணன், பி. மாதவன், ஜம்பு போன்றோருக்கு ஆரம்பத்தில் பக்க பலமாக இருந்து தன் கமரா மூலம் இவர் உதவியிருந்தார். 



 தொடக்க காலத்தில் குடும்பப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்த கர்ணன் பின்னர் சொந்தமாக படக் கம்பனி ஆரம்பித்து பெண்ணே நீ வாழ்க, பெண்ணை வாழ விடுங்கள் ஆகிய இரண்டு படங்களை தயாரித்தார். இவை இரண்டும் குடும்பக் கதைகளை கருவாக கொண்டே உருவாகின. இதில் பெண்ணை வாழ விடுங்கள் படம் உருவான போது முதலில் ஒப்பந்தமான இயக்குநருக்கும் , கர்ணனுக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு பின்னர் படத்தை ஆர். தேவராஜன் டைரக்ட் செய்தார். அதன் பின் இனிமேல் எடுக்கும் படங்களை தானே டைரக்ட் செய்வதென்ற தீர்மானத்துக்கு வந்தார் கர்ணன். 


இந்தக் தீர்மானம் அவர் தயாரிக்கும் படங்களின் போக்கையே மற்றயமைத்தது. குடும்பக் கதைகளை படமாக்குவதை விடுத்து அடித்தடி, ஆக்க்ஷன் படங்களை எடுக்கத் தொடங்கினார் கர்ணன். இந்த மாதிரியான படங்களிலேயே தன் கமரா திறமையை காட்ட முடியும் என்ற அவரின் நினைப்பும் இதற்கு காரணமானது. இவ்வாறு இவர் எடுத்த Cow boy பாணிப் படங்களான காலம் வெல்லும், கங்கா, ஜக்கம்மா ஆகிய படங்கள் வசூலில் வெற்றி பெறவே தனது அடுத்த படத்தை அதிக பொருட்செலவில் , கலரில் எடுக்கத் தலைப்பட்டார் கர்ணன். அப்படி அவர் 1975ம் ஆண்டு எடுத்தப் படம்தான் எங்க பாட்டன் சொத்து. 

 படத்தின் பெயரை பார்த்து இது எதோ காணி நிலம், காசு பணம்

சம்பந்தப்பட்ட பாட்டன் சொத்து என்று எண்ணி விடக் கூடாது. கோவில் திருவிழாவில் யாருக்கு முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்பதில் இரண்டு 'தலை ' களுக்குள் போட்டி. அதில் ஒரு தலை மண்ணில் சாய , வீறு கொண்டு எழும் இளம் சிங்கம் பழி வாங்க துடிக்கிறது. அதன் பின் என்ன , அடிதடி, குத்து ,வெட்டு, ரணகளம் தான் படம் முழுவதும். எந்த இடத்தில், எந்த நேரத்தில் சண்டைக் காட்சி வரும், அது என்ன மாதிரியான சண்டைக் காட்சிக்கு வழி கொடுக்கும் என்பது எல்லாம் யூகத்துக்கு அப்பாற்பட்டது. பனிமலையில் சண்டை, பாலைவனத்தில் ஒட்டகத்தில் சண்டை, மோட்டார் சைகிளில் சண்டை, என்று எங்கும் சண்டை எதிலும் சண்டை! 


ஆனால் பேருக்கு ஏற்றாற் போல் கர்ணன் ஒரு கொடை வள்ளல்தான். வெறும்னே சண்டை , அடிதடி என்று ரசிகர்களை கலங்க வைக்காமல் நிவாரண உதவியும் வழங்கி இருந்தார். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ராஜ்கோகிலாவை கவர்ச்சியாக காட்டி, நீரில் நனைத்து, ஆடைகளில் சிக்கனப்படுத்தி ரசிகர்களை கிறங்கடித்தார் கர்ணன். போதாக குறைக்கு சி. ஐ . டி . சகுந்தலாவும் தன் பங்குக்கு ரசிகர்களை சூடேற்றினார் . 



பத்தாண்டு காலத்துக்குள் நூறு படங்களுக்கு மேல் நடித்து விட்ட

ஜெய்சங்கர் கலரில் நடித்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் எங்க பாட்டன் சொத்து அவருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. படத்தில் அவரின் வில்லன் அசோகன். ஒரே கர்ஜனை, அட்டகாசம் தான் . கூடவே அவருக்கு சப்போர்ட்டாக எஸ் . வி. ராமதாஸ். படத்தின் சண்டைக் காட்சிகளை மாதவன் விறுவிறுப்பாக அமைத்திருந்தார். 


ஜெய்சங்கர் வில்லன்களை வேட்டையாட அவரை வேட்டையாடும் போலிஸ்காரர் சிவகுமார். சில காட்சிகளில் வந்தாலும் டி . கே. பகவதி நடிப்பு நிறைவாக இருந்தது. தேங்காய் சீனிவாசன் , ஏ. கருணாநிதி காமெடி சண்டைக் காட்சிகளுக்குள் அமுங்கி விட்டது. இவர்களுடன் கே. டி. சந்தானம், ராஜ்மல்லிகா, கரிக்கோல் ராஜு, பார்த்திபன்

ஆகியோரும் நடித்திருந்தனர். படத்துக்கு வசனம் எழுதியவர் ஏ. குருசாமி. கண்ணதாசன் பாடல்களுக்கு இசை சங்கர் கணேஷ். பாடல்கள் எடுபடாத போதும் பின்னணி இசையில் பின்னியிருந்தார்கள் இரட்டையர்கள். படத்தின் திரைக்கதையை எழுதி, தயாரித்து , ஒளிப்பதிவு செய்து இயக்கினார் கர்ணன். அந்த வகையில் படத்தின் ஹீரோ என்று அவரையும் குறிப்பிடலாம். 


எது எப்படி என்றாலும் ஜெய்சங்கர், கர்ணன் காம்பினேஷன் நன்றாக எடுபட்டு படம் சக்ஸஸ் ஆனது. கதையை பற்றி கவலைப்படாமல் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் பார்த்தால் ரசிக்கலாம், கிறங்கலாம்!

No comments: