காலை ஆறு மணிக்கு எழுந்தால் இரவு பதினொரு மணிவரை பங்கஜத்துக்கு வேலை இருந்து கொண்டே இருக்கும். ஒரே மகளான சாரு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள். அம்மாவுக்கு உதவியாக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடமாட்டாள்.
இப்போது நவராத்திரி சீசனாதலால் கொலு அலங்காரமும் சேர்ந்து கொண்டது.
மகளோ காதொலிப்பானை மாட்டிக் கொண்டு கையில் போனை வைத்தபடியாக தலைமுடியையும் விரித்து போட்டபடி ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறாள். இதைப்பார்த்த
பங்கஜத்துக்கு இரத்த அழுத்தம் ஏறவும்,
“அடியே சாரு, ஒரு வேலையையும் செய்றதுல்ல. நல்ல நாளும் இதுவுமாய் கையில போனை வச்சுகிட்டு ஒரே இடத்துல இருக்க. தலைமுடியையாவது பின்னக்கூடாதா? பேய்மாதிரி விரிச்சுப் போட்டிருக்க.”என்றாள்.
“அம்மா, ஏம்மா இந்த ஓரவஞ்சனை. கலைமகள் எப்பவும் தலைமுடியை விரிச்சுப் போட்டபடிதான் இருக்கிறாள். கையில் வீணையை வைத்தபடி ஒரே இடத்தில்தான் இருக்கவும் செய்கிறாள். அவளை போற்றிப் பாடுகிறாய். என்னை தூற்றுகிறாயே அம்மா?”
என்று தாயைக் கேட்டாள் சாரு.
இதைக்கேட்ட தாய் ஆட்டைக்கடித்து மாட்டைக் கடித்து மனிதனையே கடித்த கதையாக இப்ப கலைமகளேயை குற்றம் சொல்லும் அளவுக்கு மாறித்தான் போயிட்ட. உன்னைச் சொல்லிக் குற்றமில்லை இது கலிகாலம் என்றபடி தலையில் அடித்துக் கொண்டாள்.
-சங்கர சுப்பிரமணியன்.
No comments:
Post a Comment