இலங்கைச் செய்திகள்

 கொழும்பு துறைமுக மனித புதைகுழியின் அகழ்வு நிறைவு, நூற்றுக்கும் மேற்பட்ட மனித எலும்புகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழியின் அடுத்த அகழ்வு: 2 கோடி ரூபாய் நிதிக்கு அனுமதி

இந்திய - இலங்கை பிரதமர்கள் சந்தித்து பேச்சு



கொழும்பு துறைமுக மனித புதைகுழியின் அகழ்வு நிறைவு, நூற்றுக்கும் மேற்பட்ட மனித எலும்புகள் மீட்பு

Published By: Vishnu

17 Oct, 2025 | 03:52 AM

கொழும்பு துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் மீட்கப்பட்ட புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரின் உயர் பாதுகாப்பு வலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்மசிங்கவின் ஆட்சிக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி தொடர்பான வழக்கு, 2025 ஒக்டோபர் 13 திங்கட்கிழமை கொழும்பு நீதவான் கசுன் காஞ்சன திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புகள் குறித்து வைத்திய பகுப்பாய்வை ஆரம்பிக்குமாறு விசேட சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகேவுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அகழ்வாய்வில் இருந்து மீட்கப்பட்ட குறைந்தது 106 பேரின் மனித எலும்புகள் ஏற்கனவே குற்றக் காட்சி விசாரணை பொலிஸாரின் (SOCO) காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் நீதிமன்றம் மூலம் பகுப்பாய்வுக்காக ஒப்படைக்கப்பட உள்ளன.

கொழும்பு துறைமுகத்தில் அகழ்வாய்வுப் பணிகள் விசேட தடயவியல் சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகே மற்றும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் சோமதேவ ஆகியோரால் நடத்தப்பட்டன.

ஒக்டோபர் 13 ஆம் திகதி நீதிமன்றத்தில், எதிர்கால வைத்திய பகுப்பாய்வு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டுமென பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வோஷான் ஹேரத் கோரிக்கை விடுத்தார்.

கொழும்பு துறைமுகத்திற்குச் செல்லும் புதிய அதிவேக வீதியை நிர்மாணிப்பதற்காக பூமியைத் அகழ்ந்தபோது ஜூலை 13, 2024 அன்று அந்த பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய செயலக வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன.

இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்த பின்னர், கொழும்பு புதுக்கடை மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்கவின் உத்தரவின் பேரில், செப்டெம்பர் 5, 2024 அன்று அந்த இடத்தில் அகழ்வாய்வு பணிகள் ஆரம்பமாகின.

தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட கொழும்பு துறைமுக மனித புதைகுழியிலிருந்து குறைந்தது 106 பேரின் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இது நாட்டில் இதுவரை அகழ்வாய்வு செய்யப்பட்ட நான்காவது பெரிய மனித புதைகுழியாக பதிவாகியுள்ளது.   நன்றி வீரகேசரி 






செம்மணி மனித புதைகுழியின் அடுத்த அகழ்வு: 2 கோடி ரூபாய் நிதிக்கு அனுமதி

Published By: Vishnu

15 Oct, 2025 | 04:33 AM

இலங்கையின் இரண்டாவது பெரிய புதைகுழியில் மேலும் இரண்டு மாத அகழ்வாய்வு பணிகளுக்காகக் கோரப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் நிதியை, நீதி அமைச்சு வழங்கியுள்ளது.

நிதி கிடைத்தாலும், தற்போது யாழ்ப்பபாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழி பிரதேசத்தில் பெய்து வரும் மழை காரணமாக, அடுத்த கட்ட அகழ்வாய்வுப் பணிகளை ஆரம்பிப்பது சாத்தியமில்லை என அகழ்வாய்வு நிபுணர்கள் கூறுகின்றனர்.

செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கு, திங்கட்கிழமை (13), யாழ்ப்பாணம் நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அகழ்வாய்வுப் பணிகளுக்காகக் கோரப்பட்ட 1.9 மில்லியன் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளதாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) சட்டத்தரணி பூரணி ஜோசப் மரியநாயகம், வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

"மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளுக்கான நிதி எங்களுக்குக் கிடைத்துள்ளது. நீதி அமைச்சிலிருந்து கோரப்பட்ட 19 மில்லியன் ரூபாய் எங்களுக்குக் கிடைத்துள்ளது."

நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், யாழ்ப்பாணம் நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், சட்டத்தரணிகள், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக அதிகாரிகள் மற்றும் அகழ்வாய்வு நிபுணர்களுடன் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியைப் பார்வையிட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அகழ்வாய்வு பணிக்குப் பொறுப்பான நிபுணர்கள், அகழ்வாய்வு  நடைபெறும் இடத்தில் சில இடங்களில் ஏற்கனவே மழைநீர் தேங்கி நிற்பதாகவும், இந்த நாட்களில் அப்பகுதியில் மழை பெய்து வருவதால், இந்த நேரத்தில் அகழ்வாய்வுப் பணிகளை ஆரம்பிக்க முடியாது எனவும் நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை நவம்பர் 3, 2025 அன்று மீண்டும் விசாரிக்க நீதவான் தீர்மானித்துள்ளார்.

முன்னர் அங்கீகரிக்கப்பட்ட நிதியுடன் 45 நாட்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் செப்டெம்பர் 6, 2025 அன்று பிற்பகல் நிறைவடைந்த நேரத்தில், 240 மனித எலும்புக்கூடுகளில் ஒன்றைத் தவிர ஏனைய அனைத்தும் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.

செம்மணி சித்துப்பாத்தி மனித தைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்பட்ட பிற பொருட்களில், குழந்தை பால் போத்தல், பொம்மை, சிறுவர் காலணிகள் மற்றும் பாடசாலைப் பை ஆகியவை அடங்கும்.

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழி மன்னார் சதொச மனிதப் புதைகுழி ஆகும், அங்கு 28 சிறுவர்கள் உட்பட 376 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.   நன்றி வீரகேசரி 






இந்திய - இலங்கை பிரதமர்கள் சந்தித்து பேச்சு

Published By: Digital Desk 3

17 Oct, 2025 | 04:38 PM


பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வெள்ளிக்கிழமை (17) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில்,

இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை வரவேற்பதில்


மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், புதுமை, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடினோம். நெருங்கிய அண்டை நாடுகளாக, நமது இரு நாட்டு மக்களின் செழிப்புக்கும், பகிரப்பட்ட பிராந்தியத்திற்கும் நமது ஒத்துழைப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என பதிவிட்டுள்ளார்.   











நன்றி வீரகேசரி 





No comments: