மூத்தோர் பலர் இணைந்து ஒரு அமைப்பாக வியாழக்கிழமை தோறும் காலை ஒன்பதரை மணியளவில் தொடங்கி ஒன்று கூடல் நிகழ்ச்சியை கிளன்வேவர்லி சமுதாய நலக்கூடத்தில் நடத்தி வருகின்றோம். இதுபோல் கடந்த வியாழக்கிழமை (16/10/25) நடந்த ஒன்று கூடல் கலாநிதி
எஸ். வி. காசிநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்திகழ்வில் திரு. சங்கர சுப்பிரமணியன் அவர்கள் “திருக்குறளில் சில இடைச்செருகல்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் திரு. சங்கர சுப்பிரமணியன் அவர்களை கலாநிதி எஸ். எஸ் மூர்த்தி அவர்கள் அறிமுகப்படுத்தி வைக்க பதினொரு மணியளவில் நிகழ்ச்சி தொடங்கியது.
அறிமுக உரையில் அவர்கள் இருவரும் தமிழ் மூத்தோர் பிரஜைகள் சங்கத்தில் (TSCF) ஒரேகாலத்தில் செயற்குழுவில் இருந்ததை நினைவு கூறினார். அப்போது சங்கத்தின் செய்தி மடலில் திரு. சங்கர சுப்பிரமணியன் அவர்களின் கவிதைகள் மற்றும் கட்டுரைகள் பல இடம்பெற்றிருந்தையும் குறிப்பிட்டார்.
கலாநிதி எஸ். வி. காசிநாதன் தமது தலைமை உரையில் இடைச்செருகல் என்றால் என்ன என்பதை விளக்கமாக கூறியதோடு கம்பராமாயணத்தில் இதுபோன்ற இடைச்செருகல்கள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். திரு. சங்கர சுப்பிரமணியன் உரையாற்றும்போது ஒவ்வொருவரது பார்வையிலும் வேறுபாடுகள் இருப்பது எதிர்பார்க்கப் படவேண்டியதுதான் என்று கூறினார்.
மேலும் திருக்குறளுக்கு பரிமேலழகர், மு. வரதராஜனார், போப், கருணாநிதி போன்ற பலர் உரை எழுதியிருப்பதாகவும் குறிப்பிட்டார். பல இடங்களில் இவை ஒன்றுக்கொன்று வேறுபட்டவைகளாகவும் காணப்படுகின்றன என்றார். காலத்துக்கு காலம் ஓலை பழுதடையும்போது அவற்றில் உள்ளதை புதிதாக ஏடுகளில் பிரதி எடுக்கும்போது சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறினார்.\
தான் செய்த ஆய்வுகளின்படி இடச்செருகல்களுக்கு உட்படுத்தப் பட்டதாக காணப்படும் குறட்பாக்களுள் பின்வரும் நான்கு குறட்பாக்களைத் தெரிவு செய்து அவை ஒவ்வொன்றிற்கும் விளக்கம் அளித்தார்.
அவர் இடைச்செருகலுக்கு உட்படுத்தப் பட்டதாகக் கருதும் குறட்பாக்களில் நான்கு குறட்பாக்களையும் அவற்றில் இடைச்செருகல் நடந்திருக்கும் விதத்தையும் கீழே காணலாம்.
(1)
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகலவன் முதற்றே உலகு.
சுருக்கமான விளக்கம்:
பகலவன் என்ற சொல் பகவன் என்ற இடைச் செருகலாக மாற்றப் பட்டுள்ளது. நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாய்மொழி. நீருக்கு ஆதாரம் கடல் நீர் பகலவனால் ஆவியாகி வானில் மேகமாகி மழை பொழிவதுதான். மழையால் புல், பூண்டு மற்றும் உனவுக்கான பயிர்கள் வளர்வதால் உயிர்வாழ உதவும் பகலவனே முதலானவன்.
(2)
கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
கற்றதனாலாய பயனென்கொல் கல்லாதார்
கண் திறாஅர் எனின்.
சுருக்கமான விளக்கம்:
வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் என்பது இடைச்செருகலாக வந்துள்ளது. கல்வியின் அவசியத்தை கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைபுகினும் கற்கை நன்றே என்று ஔவை பிராட்டியும் கல்லாதார் முகத்திரண்டு புண்ணுடையார் என்று திருவள்ளுவரும் வலியுறுத்தி இருப்பதால் கற்றதனாலாய பயன் கல்லாதார் கல்விக்கண் திறப்பது என்பதே சாலச் சிறந்ததாக இருக்கும்.
(3)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தேய்வத்துள் வைக்கப்படும்.
சுருக்கமான விளக்கம்:
அண்டவெளியில் உள்ள பொருட்களின் தேய்வில் இருந்து பிறக்கும் உயிரோட்ட ஆற்றலே தேய்வம் ஆகும். இந்த தேய்வம் என்ற சொல் தெய்வம் என்று இடைச் செருகலாக மாறியுள்ளது.
(4)
தெய்வம் தொழாஅள் கொழுநன்
தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
வையம் வாழ்வாள் கொழுநன் வாழ்விணைவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
சுருக்கமான விளக்கம்:
இவ்வையகத்தில் கணவனோடு பெண் இணைந்து வாழும்போது அன்பும் அறனும் உடைத்தாகி அதன் பயனாக பெய்யவேண்டிய நேரத்தில் மழைபெய்யும் என்பது குறளின் பொருள். கணவனும் மனைவியும் முறையாக வாழ்ந்தால் மழையும் முறையாகப் பெய்யும் என்பதே குறளின் உட்பொருள். ஆதலால் தெய்வம் தொழாஅள் மற்றும் தொழுதெழுவாள் ஆகியவை இடைச்செருகலாகும்.
பேச்சின் முடிவில் பார்வையாளர்களின் பல கேள்விகளுக்கு திரு. சங்கர சுப்பிரமணியன் பதிலளித்தார். இதன்பின் தலைவர் திரு. காசிநாதனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி 12.10 மணியளவில் இனிதே நிறைவுற்றது.
______________________________ ___
உசாத்துணை:
பழமையான தமிழ் நூல்களில் பிற்காலத்தவர் தம் கருத்தைத் திணிக்கும் பாடல்கள ஆங்காங்கே சேர்த்து விடுவதே இடைச்செருகல் எனப்படும். உதாரணமாக தொல்காப்பியத்தில் அகத்திணையியலில் மக்களை ஆயர், வேட்டுவர் எனப் பகுத்துக் காட்டும் பகுதி தொல்காப்பியருடையது. சங்கப் பாடல்களில் இத்தகைய பாகுபாடுகளே உள்ளன. நால்வர் உயர்ந்தோர் பின்னோர் எனக்கூறும் 6 நூற்பாக்கள் இடைச்செருகல்கள்.
மரபியலில் ஆண், பெண் விலங்கினங்களின் பெயர்களைக் கூறிய பின்னர் புல் மரவகைகளின் இலை, பூ, காய் வகைகளை விளக்குவதற்கு முன்னர் இடையில் அந்தணர், அரசினர், வைசியர், வேனாண்-மாந்தர் ஆகியோரைப் பற்றிப் பேசும் நூற்பாக்கள் இடைச்செருகல்கள்.
[Source: https://ta.wikipedia. org/]
-துரை விநாயகலிங்கம்.
No comments:
Post a Comment