செம்மணி மனித புதைகுழி: மேலும் அகழ்வுப் பணிக்கு 8 வாரங்கள் தேவை - நீதிமன்றம் கட்டளை
முல்லைத்தீவு – செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி
திருகோணமலை முத்துநகர் பிரதேச மக்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் !
பலஸ்தீன் படுகொலைகளுக்கு எதிராக கொழும்பில் பேரணி ; பேதமின்றி ஒன்றுபடுமாறு பலஸ்தீனுக்காக ஒன்றிணையும் இலங்கையர்கள் அமைப்பு அழைப்பு
வலி வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவித்து விவசாயத்திற்கு அனுமதி வழங்க ஜனாதிபதியிடம் உரிமையாளர்கள் கோரிக்கை
செம்மணி மனித புதைகுழி: மேலும் அகழ்வுப் பணிக்கு 8 வாரங்கள் தேவை - நீதிமன்றம் கட்டளை
Published By: Vishnu
14 Aug, 2025 | 11:10 PM
செம்மணி பகுதியில் மேலும் மனித புதைகுழிகள் இருக்கலாம் என்பதற்கான சான்றுகள் காணப்படுவதால் , மேலும் அகழ்வு பணிகளை மேற்கொள்ள 08 வார கால பகுதி தேவைப்படுவதாக மன்றில் கோரிக்கை முன் வைக்கப்பட்டதை அடுத்து, அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மன்று கட்டளையிட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு வியாழக்கிழமை (14) யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில் , கடந்த 06ஆம் திகதி வரையில் 32 நாட்கள் முன்னெடுக்ககப்பட்ட நிலையில் , தற்போது பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் , அவற்றின் மூன்றாம் பகுதி பணிகள் எதிர்வரும் 22ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் , 20ஆம் திகதி மேலும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள பகுதிகளில் துப்பரவு பணிகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதன் போது, செம்மணியில் மேலும் மனித புதைகுழிகள் இருப்பதற்கான சான்றுகள் காணப்படுவதால் , தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள காலத்திற்கு மேலதிகமாக மேலும் 08 வார கால பகுதி தேவைப்படுவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து , அதற்கான பாதீடுகளை தயாரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மன்று கட்டளையிட்டது.
அதேவேளை கடந்த 06ஆம் திகதி வரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
முல்லைத்தீவு – செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி
Published By: Vishnu
14 Aug, 2025 | 09:27 PM
செஞ்சோலை வளாகத்தில் ஸ்ரீலங்கா இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு வியாழக்கிழமை (14) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வான் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் வியாழக்கிழமை (14) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006.08.14 ஆம் திகதியன்று வள்ளிபுனம் – இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் விமானத்தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் வியாழக்கிழமை (14.08.2024) இந் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.
உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி, அக வணக்கம் செலுத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளர் வே.கரிகாலன் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர்களான சி.குகனேசன் ,க.தர்மலவன்,இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ச.ஜீவராசா, தாயக நினைவேந்தல் அமைப்பின் தலைவர் முல்லை ஈசன், இளைஞர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.
நன்றி வீரகேசரி
திருகோணமலை முத்துநகர் பிரதேச மக்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் !
14 Aug, 2025 | 05:34 PM
கிழக்கு மாகாணம் திருகோணமலை முத்துநகர் பிரதேச மக்கள் வியாழக்கிழமை (14) ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக முத்து நகர் 800 ஏக்கர் விவசாயக் காணிகள் சூறையாடப்படுவதை நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் “இந்திய கம்பனிகளின் காணி மற்றும் வளத்திருட்டுக்கு எதிரான போராட்டத்தை தொடங்குவோம்” என்று பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நன்றி வீரகேசரி
பலஸ்தீன் படுகொலைகளுக்கு எதிராக கொழும்பில் பேரணி ; பேதமின்றி ஒன்றுபடுமாறு பலஸ்தீனுக்காக ஒன்றிணையும் இலங்கையர்கள் அமைப்பு அழைப்பு
13 Aug, 2025 | 04:14 PM
(எம்.ஆர்.எம்.வசீம்)
பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்தும் சுதந்திர பலஸ்தீன் இராச்சியம் ஒன்றை பிரகடனப்படுத்துமாறு சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமை (15) ஏற்பாடு செய்துள்ள பேரணியில் இலங்கையா்களாக அனைவரும் ஒன்டுபட வேண்டுமென பலஸ்தீனுக்காக ஒன்றிணையும் இலங்கையர்கள் அமைப்பினர் கூட்டாக வலியுறுத்தினர்.
கொழும்பு மருதானை சி.எஸ்.ஆர். கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகங்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.
அங்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளரும் சமூக செயற்பாட்டாளருமான மெளலவி அர்கம் நூர் ஹாமித் கருத்து தெரிவிக்கையில்,
பலஸ்தீனுக்கு ஆதரவளித்துவரும் அமைப்புகள் ஒன்றிணைந்து பலஸ்தீனுக்காக ஒன்றிணையும் இலங்கையர்கள் என்ற பெயரில் நாளை வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்து அமைதிப்பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது.
பொரளை மயானத்துக்கு அருகில் இருந்து மாலை 3மணிக்கு பேரணி ஆரம்பித்து கெம்பல் வாகன தரிப்பிடம் வரை செல்லவுள்ளது.இந்த பேரணியில் இன, மத பேதமின்றி இலங்கையார்களாகிய எமக்கும் இதயம் இருக்கிறது என்பதனை உலக்கு காட்டுவதற்கு நாங்கள் அனைவரும் இதில் கலந்கொள்ள வேண்டும்.
உலகில் மனித படுகொலைகள் இடம்பெறுவதை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது இதுவே முதல்தடவையாகும். இஸ்ரேல் எந்த சர்வதேச சட்டத்தையும் மதிக்காமல் அங்கு இனப்படுகொலை செய்துவருகிறது. இதுவரை 18ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
உலகில் எவருக்கு அநீதி ஏற்பட்டாலும் அதற்காக நாங்கள் எங்களால் முடிந்த வகையில் அதற்கு எதிராக குரல்கொடுக்க வேண்டும். அதுதான் மனிதாபிமானமாகும். பலஸ்தீனில் யுத்தம் இடம்பெறுவதில்லை. அங்கு பாரிய அநியாயமே இடம்பெறுகிறது.
தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் சுதந்திரத்துக்காக போராடி வெற்றிபெற்ற நெல்சன் மண்டேலா தெரிவித்த ஒரு விடயம் தான், எமக்குரிய சுதந்திரம் பலஸ்தீன் இராச்சியம் சுதந்திரமடைந்த பிறகாகும் என்றார்கள்.
பலஸ்தீனில் கடந்த இரண்டு மாதங்களாக அவர்களுக்கான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதனால் பலஸ்தீனில் இடம்பெறுவது யுத்தத்துக்கும் அப்பாலானதொரு விடயமாகும். எனவே இந்த நாட்டில் வாழக்கூடிய அனைத்தின மக்களும் அரசியலுக்கு அப்பால், பலஸ்தீன மக்களுக்காக குரல்கொடுக்க ஒன்றிணைய வேண்டும் என்றார்.
இங்கு கருத்து தெரிவித்த, சமூக செயற்பாட்டாளர் லயனல் பீரிஸ் தெரிவிக்கையில்,
பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் படுகொலையை கண்டித்து உலக நாடுகள் இஸடரேலுக்கு எதிராக பல தடைகளை விதித்து வருகின்றன.மக்கள் வீதிக்கிறங்கி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.
இலங்கையா்களாகிய நாங்களும் பலஸ்தீனுக்கு ஆதரவளித்து வரும் நாடுகளுடன் ஒன்றிணைந்து எமது ஆதரவை தெரிவிக்க வேண்டும். அதற்காக 15ஆம் திகதி இன, மத பேதமின்றி அனைவரும் இந்த பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அதேநேரம் இஸ்ரேலின் செயற்பாடுகள் எமது நாட்டில் அதிகரித்துள்ளன. தற்போது இலவச வீசா வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இஸ்ரேல் மக்கள் சுற்றுலா பயணிகளாக எமது நாட்டுக்கு வருவதில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
ஆனால்இந்த இலவச விசா மூலம் பலஸ்தீனில் படுகொலைகளை செய்துவரும் இஸ்ரேல் இராணுவத்தினர், தங்களின் மனு அமைதிக்கான இடமாக இலங்கையை மாற்றிக்கொண்டுள்ளனர். அவர்கள் இலங்கையில் அறுகம்பை போன்று பிரதேசங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இஸ்ரேல் இராணுவத்தினர் குறிப்பிட்ட காலம் இலங்கையில் தங்கி இருந்து, மீண்டும் இஸ்ரேலுக்கு சென்று படுகொலைகளில் ஈடுபடுகின்றனர். அதனால் இஸ்ரேல் இராணுவத்துக்கான அடைக்கலமாக இலங்கையை மாற்றிக்கொள்வதற்கு இடமளிக்கக்கூ்டாது என்றார்.
சுதந்திர பலஸ்தீன் அமைப்பின் ஏற்பாட்டாளர் ஹுசைன் ஷாமில், சமூக இளைஞர் குடும்ப அமைப்பாளர் எம்.,இர்ஷாத் மற்றும் சிவில் அமைப்புகளைச்சேர்ந்த பலவரும் இங்கு கலந்துகொண்டு, 15ஆம் திகதி இடம்பெறும் அமைதிப்பேரணியில் இலங்கையாளர்களாக நாங்கள் அனைவரும் கலந்துகொண்டு, பலஸ்தீன் மக்களுக்கான எமது ஆதரவை தெரிவிக்க முன்வரவேண்டும் என்றனர். நன்றி வீரகேசரி
வலி வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவித்து விவசாயத்திற்கு அனுமதி வழங்க ஜனாதிபதியிடம் உரிமையாளர்கள் கோரிக்கை
13 Aug, 2025 | 05:08 PM
வலி வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவித்து, அக்காணிகளில் மக்கள் சுதந்திரமாக விவசாய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் புதன்கிழமை (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில்,
யுத்தம் முடிந்து 16 வருடகாலமாக பாதுகாப்பு காரணங்களுக்காக என கூறி தனியார் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ள இராணுவத்தினர் அதில் விவசாயம் செய்கின்றனர். காணி உரிமையாளர்கள் விவசாயம் செய்ய முடியாது வறுமையில் வாடுகின்றனர்.
தனியார் காணிகளை அடாத்தாக பிடித்து விவசாயம் செய்வது சட்டவிரோதமானது. அது மாத்திரமின்றி மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் இராணுவத்தினர்.
எவ்வாறு விவசாயம், பண்ணனை, வியாபாரங்கள் நடாத்தி வருமானத்தை பெற முடியும்? அவ்வாறு பெறப்படும் பணம் எங்கே செல்கின்றது ? அந்த பணம் திறைசேரிக்கு அனுப்பப்படுகிறதா ? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
எனவே யுத்தம் முடிந்து 16 வருட காலமாக பாதுகாப்பு காரணம் என கூறி தனியார் காணிகளை அடத்தாக பிடித்து விவசாயம் செய்து வருமானத்தை ஈட்டி வருவதானல் காணி உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டும்.
அதேவேளை, அவர்களின் காணிகளை உடனடியாக விடுவித்து, அவர்களை விவசாயம் செய்து அம்பது வாழ்வாதரத்தை மேம்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேவேளை, நடந்து செல்லவோ, துவிச்சக்கர வண்டியில் செல்லவோ முடியாத நிலை காணப்படுவதுடன், இரவு 07 மணி முதல் காலை 06 மணி வரையில் போக்குவரத்துக்கு தடை போன்ற கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ள பலாலி வீதியால் மக்கள் சுதந்திரமாக போக்குவரத்து செய்வதற்கு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment