பக்தியில் திளைத்தார் பக்குவம் பெற்றார் !




     























மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. அவுஸ்திரேலியா 






காவியுடன் வருவாரை பின்தொடர்ந்து செல்வார் 
கடவுளைக் கண்டீரா என்றுமே கேட்பார்
சன்யாசி யாவருமே தலைதெறிக்க ஓடுவார்
விட்டுவிடா அவரும் தொடருவார் பின்னே

விடை கிடைக்கா நிலையிலும் விடவேயில்லை 
ஒடினார் தேடினார் ஒருபயனும் இல்லை
அப்போது அவருக்கு வழிசொன்னார் ஒருவர்
அதுவெளிச்சம் காட்டியது அவர்மாறி விட்டார்

அம்மனின் முன்னாலே அமர்ந்திருந்தார் ஒருவர்
அவரிடமே இவரும் அடைக்கலம் புகுந்தார்
ஐயத்தைப் போக்க அருகில்வா என்றார்
ஐயமும் பறந்தது அனைத்துமே தெரிந்தது

காட்டினார் ராமகிருஷ்ணர் உணர்ந்தாரே விவேகானந்தர்
குருவுக்குச் சீடன் கொடையாக அமைந்தான்
அருளுள்ளே சென்றது அகவிருள் அகன்றது 
சீடனோ வாழ்வில் சிகரத்தைத் தொட்டான் 

படிப்பில்லா ராமகிருஷ்ணர் பரமனை உணர்ந்தார்
பற்றற்ற நிலையினிலே பாரினிலே வாழ்ந்தார்
கடவுளைக் கண்டார் கருணையை ஈந்தார்
காமம் என்பதை கருக்கியே விட்டார்

காளியின் மீதே காதல் கொண்டார்
காண்பது யாவையும் காளியாய் கண்டார்
பித்துப் பிடித்து காளியைப் பற்றினார்
பக்தியில் திளைத்தார் பக்குவம் பெற்றார்

மனைவியைக் கூட மாகாளியாய் பார்த்தார்
மனைவியை வாழ்வின் புனிதமாய் நினைத்தார்
சிற்றின்பம் அவரின் சிந்தையில் இல்லை
பேரின்பக் கடலாம் காளியில் கலந்தார் 

பக்தியைப் பரப்பினார் பக்குவம் உரைத்தார்
இத்தரை விடிந்திட தத்துவம் ஆகினார்
தன்னலம் கருதா தொண்டினை ஆற்றிட
எண்ணரும் இயக்கம் தோன்றிடச் செய்தார்

நாளும் பொழுதும் நவின்றார் உபதேசம்
தேசம் செழிக்கவே யாவும் அமைந்தது
உபதேசம் அனைத்துமே ஒளடதம் ஆனது
உள்ளம் உயர்ந்திட உறுதுணை ஆனது

தன்னலம் கருதா ராம கிருஷ்ணர் 
தரணியில் வந்தது பெரு வரமாகும்
கலியுகம் தன்னில் கடவுளைக் கண்டிடும்
பக்தியில் திளைத்தவர் பாதம் பணிவோம் 

எத்தனை பள்ளிகள் எத்தனை தொண்டுகள்
தொண்டே வாழ்வின் முக்கிய குறிக்கோள்
பக்தியைத் தொட்டே பலதும் எழுந்தது
இத்தனை வித்தினை இட்டவர் அவரே 

சமரச நோக்கில் அமைந்த நல்லியக்கம்
சகலரும் சமமென சத்தியம் உரைத்தது
இனமதம் கடந்து இடரினைத் துடைத்தது
உலகிடை ராம கிரிஷ்ணரின் சிந்தனை 



No comments: