கஸ்தூரி விஜயம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக கதாநாயகியாக நடித்த சிலருள்


கே. ஆர். விஜயாவும் ஒருவர். அப்படி அவர் நடித்தவற்றுள் பல படங்களை அவரே சொந்தமாக தயாரித்திருந்தார். இதன் காரணமாகவும் அவரால் தொடர்ந்து நாயகியாக நடிக்க முடிந்தது. அதே நேரத்தில் ரசிகர்களும் அவர் நடிப்பை ரசித்தார்கள் என்பதையும் மறுக்க முடியாது . அந்த வகையில் 1975ம் வருடம் அவர் ஹீரோயினாக நடித்து வெளிவந்த படம் கஸ்தூரி விஜயம். 


 ரவிசங்கர் என்பவரால் எழுதப்பட்டு பல முறை மேடையேறிய

நாடகமே கஸ்தூரி விஜயமாக படமானது. படத்தை கே ஆர் விஜயாவே தனது பட நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இதன் காரணமாக படத்தின் கதையும் அவரை பிரதானப் படுத்தி அமைக்கப்பட்டிருந்தது. தந்தையை இழந்த கஸ்தூரி சுந்தரத்தின் வீட்டில் பணிப்பெண்ணாக அமர்த்தப்படுகிறாள். அந்த வீட்டின் அதிபதி சுந்தரம் ஒரு தொழிலதிபர். அவர் வீடோ ஆண்களை மட்டும் கொண்ட பொறுப்பில்லாதவர்கள் வாழும் இடம். இவர்கள் செய்யும் திருட்டு, ஊதாரித்தனம், அலட்சியம் எதையும் சுந்தரம் பொருட்படுத்துவதில்லை. அவர்களின் மகிழ்ச்சிக்கே முக்கியத்துவம் கொடுக்கிறான். ஆனால் அவனின் தாத்தாவோ இது பற்றி கவலைப்படுகிறார். வீட்டை சீராக்க முயற்சி செய்கிறார். அவரின் திட்டத்தால் கஸ்தூரிக்கும், சுந்தரத்துக்கும் திருமணம் நடக்கிறது. ஆரம்பத்தில் வீட்டில் உள்ளோர்க்கு அடங்கிப் போகும் கஸ்தூரி நாளடைவில் விஸ்வரூபம் எடுக்கிறாள். இதன் காரணமாக அவளுக்கு எதிராக எதிர்ப்பும் கிளம்புகிறது. சுந்தரம் கூட அவளை கண்டிக்கிறான். ஆனால் தாத்தாவின் துணையோடு வீட்டை திருத்தப் பார்க்கிறாள் கஸ்தூரி. 



இப்படி அமைந்த படத்தின் கதை வசனத்தை வியட்நாம் வீடு சுந்தரம் எழுதியிருந்தார். இப்படியும் ஒரு குடும்பத்தில் பொறுப்பில்லாமல் நடப்பார்களா , இது சாத்தியமா என்று எண்ணாமல் படத்தைப் பார்த்தால் கதையில் ஒரு சுவாரஸ்யம் ஏற்படத்தான் செய்கிறது. அதற்கு சுந்தரத்தின் வசனங்களும் துணை நிற்கின்றன. ஏன் கணக்கு கேட்டே , கேட்ட உனக்கும் நிம்மதி போச்சு எனக்கும் நிம்மதி போச்சு , அவர் அந்த கால அரசியல்வாதி சுயநலத்தை பற்றி கவலைப் படாமல் பொதுநலத்துக்காக பாடு பட்டவர் , சமையலுக்கு உதவுது என்பதற்காக நெருப்பை மடியில் கட்டிக் கொள்ள முடியாது போன்ற அவரின் வசனங்கள் கதையோடு பொருந்தின. 


படத்தில் தாத்தாவாக வரும் எஸ் .வி .சுப்பையாவின் நடிப்பு தரமாக

இருக்கிறது. படத்தின் ஹீரோ முத்துராமன். தனது வழக்கமான நடிப்புக்கு மீறி எதுவும் செய்ய முடியாத பாத்திரம். ஒரு டூயட், சண்டைக் காட்சி எதுவும் இல்லை அவருக்கு. சுந்தர்ராஜனுக்கு வழக்கமான பாத்திரம், நடிப்பு. நாகேஷ் , பகோடா காதர் இருவரும் சிரிக்க வைக்கிறார்கள். பல ஆண்டுகளாக படங்களில் நடித்து வரும் காதருக்கு இந்தப் படம் ஒரு மைல் கல் எனலாம். படம் முழுதும் வருகிறார், ரசிகர்களை கவருகிறார். இவர்களுடன் கோகுல்நாத், விதுபாலா,ஸ்ரீகாந்த் ,சுருளிராஜன்,எஸ் .என் .லஷ்மி, சாமிக்கண்ணு , சேஷாத்திரி, ஆலம் ஆகியோரும் நடித்திருந்தார்கள். 


படத்துக்கு இசை வி . குமார். மூன்றே பாடல்கள்தான். அவற்றில் சுசிலாவின் குரலில் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு பாடலும், வாணி ஜெயராம் குரலில் மழைக் கால மேகம் மகராஜன் வாழ்க பாடலும் கருத்துடனும், இனிமையாகவும் ஒலித்தன. பாடல்கள் கண்ணதாசன். 

 

குறைந்த பஜெட்டில் உருவான படத்தை பி .என் . சுந்தரம் ஒளிப்பதிவு செய்தார். படத்தை இயக்கியவர் பி. மாதவன். தொடர்ந்து சிவாஜி படங்களையே டைரக்ட் செய்து கொண்டிருந்த மாதவன் ஆரம்ப காலம் தொட்டே விஜயாவின் நிதியுதவியுடன் பல படங்களை உருவாக்கி இயக்கி இருந்தார். அந்த வரிசையில் இந்தப் படமும் சேர்ந்தது. 

  ஏற்கெனவே மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் கஸ்தூரி திலகம் என்ற படம் வெளிவந்திருந்த காரணத்தால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் பேரில் ஒரு குழப்பம் இருந்த போதும் ரசிகர்கள் கே ஆர் விஜயா மூலம் படத்தை அடையாளம் கண்டு கொண்டார்கள். படமும் சுமாராக ஓடியது. வீடு திருந்தினால் நாடும் திருந்தும் என்ற கருத்தை படம் வலியுறுத்தியது.

No comments: