வேலவனின் தேர் வீதியெலாம் பக்தர்
காதலுடன் கந்தனைக் கைகூப்பி நிற்கின்றார்
தீராத வினையகற்ற தேரேறி வருகின்றான்
வாருங்கள் தேரிழுத்து வணங்கியே நிற்போம்
அந்தணர் மந்திரம் அரிய திருமுறை
ஆனந்த இசை கேட்டபடி கந்தன்
தேரேறி வருகின்றான் திருமுகத்தைக் காண
ஓடோடி வாருங்கள் உளமுருக வேண்டுங்கள்
வீதியிலே பக்தர் வெண்மணலில் இடமில்லை
சோதியென கந்தன் சுடர்விட்டு தெரிகின்றான்
மாதவத்தின் காரணத்தால் வந்தமர்ந்தான் நல்லூரில்
ஈழத்தை விட்டு இடம்பெயர்ந்து போனாலும்
எல்லோர் நினைப்பும் நல்லூராய் இருக்கிறது
காதலுடன் யாவரும் ஓடோடி வருகின்றார்
கந்தனது தேர்பார்த்து கவலைகளைக் களைந்திடவே
சமத்துவத்தின் இருப்பிடமாய் நல்லூர் இருக்கிறது
அடியார்கள் அனைவருமே அரன்மைந்தன் அன்பர்களே
முன்னுருமை கிடையாது முக்கியமும் கிடையாது
முருகனது அடியவராய் யாவருமே தெரிகின்றார்
கலாசாரம் பண்பாடு கந்தனது சன்னதியில்
காணுகின்ற பொழுதில் கண்ணியமே எழுகிறது
கந்தனது தேர்பார்க்க வந்துவிடும் அடியார்கள்
செந்தமிழால் கந்தனை சேவித்துப் போற்றுகிறார்
அலங்காரக் கோலத்துடன் ஆறுமுகன் வருகின்றான்
தேரமர்ந்த ஆறுமுகன் தெரிசனமும் தருகின்றான்
ஊர்கூடித் தேரிழுத்து உவகையுடன் நிற்கின்றார்
உளமுருகி யாவருமே தமைமறந்து நிற்கின்றார்
செல்லப்பா யோகர் சிறப்புடைச் சித்தர்
நல்லூரான் மண்ணில் நடந்து திரிந்தார்கள்
வல்வினை போக்கிட வந்தமர்ந்த கந்தன்
நல்லூரில் நின்று நாளுமருள் புரிகின்றான்
அல்லல் களைவான் அரவணைத்து நிற்பான்
ஆறுதல் தேறுதல் அனைவர்க்கு மளிப்பான்
சொல்லாமல் அறிவான் துயரினைத் துடைப்பான்
நல்லை நகருறையும் நம்கந்தப் பெருமான்
நல்லூரான் தேர் நமக்கென்றும் பாக்கியமே
எங்கிருந்த போதும் எப்படியும் போய்விடுவோம்
தேர்பார்த்து நாமும் தெளிவினைப் பெற்றிடுவோம்
ஆதலால் தேர்பார்ப்போம் அனைவரும் வாருங் கள்
No comments:
Post a Comment