மாந்தர் நிலையினை என்சொல்ல எம்பாவாய்!


 -சங்கர சுப்பிரமணியன்.




அங்கிங்கெனாதபடி எங்கும் பேரொளியாய்
இருப்பவனை ஆங்குளான் ஈங்குளானென
இயம்புவதன் பொருள் அறியேன் எம்பாவாய்

எங்கும் பரந்து நிற்கும் பரம்பொருளதனை
ஓரிடத்தில் ஆடாமல் அசையாமல் இருத்தி
ஆடுவதும் பாடுவதும் எதற்கோ எம்பாவாய்

படியளந்து பாதுகாக்கும் பரம்பொருளுக்கு
படைத்து வேண்டுவதின் அவசியம் என்னவோ
பசியாறாமலா படியளப்பார் அவர் எம்பாவாய்

பசுவிலே பாலாக செடியிலே மலராயிருக்க
பாலால் நீராட்டி மலரால் அழங்கரிப்பதேனோ
பாலாக மலராக இருப்பதறியாரோ எம்பாவாய்

காற்றாக நீராக ஒளியெனவே இருப்பவரை
கருவறையில் நிலைத்து நிலைபெற வைத்து
காப்பாய் என்றால் எழுவாரோ எம்பாவாய்

மனதுள்ளே இருப்பவனை உணராமல் இருந்து
வெளியே இருப்பவனை தேடி திரிந்து நிற்கும்
மாந்தர் நிலையினை என்சொல்ல எம்பாவாய்


No comments: