தேர்த் திருவிழா! வருகின்ற வியாழக் கிழமை ( 21 – 08 - 2025) நல்லூர்த் திருமுருகன் தேர்த் திருவிழா! ”சிவஞானச் சுடர்” பல்மருத்துவக் கலாநிதி பாரதி இளமுருகனார் வாழ்நாட் சாதனையாளர்

              

 

 














சிவமயம்

 

 

ஊரோடு ஒற்றுமையாய்க் கொண்டாடும் பத்தர்களைச்

சீரோடு வாழவைக்கும் சேந்தனவன் திருவிழாவில்

தாரோடு பொலிந்திலங்கும் சண்முகன்வேல் அமர்ந்ததிருத்

தேரோடு வலம்வருவோர் தெருவெல்லாம் நிரம்பிடுவர்!

 

 

ஆதிரையான் சொரூபநிலைச் சிவமான செவ்வேளே!

அருள்பொழியுஞ் சோதிவைவேல் தேரேறி வருநாளில்

சாதிவேறு பாடின்றிச் சகலரிலுஞ் சிவங்கண்டு

வீதிசுற்றி வினைதீர்க்கும்  தேரிழுக்க ஊர்திரளும்!

 


 

 











முருகனுக்கு அரோகராவென் றதிரவெழும் ஒலியலைகள்!

கருதடியர் ஓதிவரும் பண்ணிசையில் திருமுறைகள்!

பெருகிவரும் பத்தியொடு விரவிவரும் காவடிகள்!

திருமுருகன் விழாக்காணப் போதாதே இருவிழிகள்!

 

 

 













முப்புரத்தை எரித்திட்ட முக்கண்ணன் சொரூபமானாய்

எப்பொழுதும் கதிநீயே என்றுதினம் உன்பெயரைச்

செப்பிநிற்கும் அடியாரைச் செவ்வேளே தேரேறித்

தப்பாமற் கரைசேர்க்கத் தயாபராதேர்  ஏறிவாராய்!

 

குரவணிபன் னிருவாகா! குமரகுரு பரவேகா!

கொன்றழிக்கும் சத்திகளை வென்றொழிக்கத் தாமதமேன்?                                                                                         

வரசரண சிவமுருகா! மனமுருகி  ஒழித்திடாயோ?

வையத்தோர் தனைக்காக்க வண்ணத்தேர் ஏறிவாராய்!

 

கரணங்கள்  கடந்திட்ட  கரடமுகன் சோதரனே!

அரணமென  அனுதினமும் உனைநம்பும் அடியார்கள்

சரணம்நீ யென்றுன்றன் சரணங்கள் தொழுதேத்திப்

பிரணாமஞ் செய்துய்யப் பெருந்தேரில் வாமுருகா!

 

கொஞ்சிமகிழ் குஞ்சரியும் குளிர்மதி முகத்தழகி

வஞ்சிவள்ளி நாயகியும் வாரியணைக் குங்குமரா!

வெஞ்சமரில் அவுணர்களை வென்றுவாகை சூடியவா!

அஞ்சேலென் றருளிடவே அற்புதத்தேர் ஏறிவாராய்!

 

 



 

 








உனையன்றித் தெய்வமொன்றை ஓரிடமும் கண்டிலமே!

நினைந்துருகிக் கண்பனிப்ப நீலமயில் மேலேறி

வினைகளைந்து ஆட்கொள்ள வேழமுகன் சோதரனே

அனைத்துலகுங் காப்போனே அழகுத்தேர் ஏறிவாராய்!

 

 

 



 

 

 

 








கந்தாகுகா அருட்குமரா கங்கையணி மதகரியின்

மைந்தா!சர வணசண்முகா! மலைக்கிழவா! மயில்வாகனா!

வந்தாதரித்(து) அருளைநீயும் சிந்தியாத ரித்தருளச்

செந்தார்க் கடம்பணிந்து சித்திரத்தேர் ஏறிவாராய்!

 

 

 


 


 


  

No comments: