இருக்கும் வரைக்கும் ஏற்றதைச் செய்வோம்!




   

















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. அவுஸ்திரேலியா 


குடும்பம் என்றால் குதூகலம் வேண்டும்
தாத்தா பாட்டியைத் தாங்கிட வேண்டும்
மூத்தோர் வார்த்தை கேட்டிட வேண்டும்
முடியும் வரைக்கும் உதவிட வேண்டும்

உறவுகள் ஒன்றாய் இணைந்திட வேண்டும்
மறைவுகள் நமக்குள் அகன்றிட வேண்டும்
கரவுடன் பழகுதல் மறந்திட வேண்டும்
கனிவுடன் உறவினைப் பேணிட வேண்டும்

செல்வம் பார்க்கா சேர்ந்திட வேண்டும்
சிறந்த பண்பை மதித்திட வேண்டும்
பொய்மை நட்பை உதறிட வேண்டும்
பொங்கும் சினத்தைப் பொசுக்கிட வேண்டும்

வறுமை கண்டு ஒதுக்கிடல் வேண்டாம்
மனத்தை உடைக்க நடந்திட வேண்டாம் 
பொறுமை என்பதை அணிகலம் ஆக்கி
பூதலம் போற்றிட வாழ்ந்திட வேண்டும்

அன்பை அகத்தில் நிறைத்தல் வேண்டும்
அறத்தின் வழியில் நடந்திட வேண்டும்
துன்பம் காணின் துடித்துமே நின்று
அன்பைக் காட்டி அணைத்திடல் வேண்டும்

உள்ளம் உடைந்திட உரைத்திடல் வேண்டாம்
உணர்வை இழக்கச் செய்திட வேண்டாம்
பாசம் காட்டிடும் வேசம் வேண்டாம்
பழசை மறந்தும் செயற்பட வேண்டாம் 

பிறந்த நாளை யாவரும் அறிவோம்
பிறக்கும் வேளை பெருகிடும் இன்பம்
இறக்கும் நாளை எவரும் அறியார்
இருக்கும் வரைக்கும் ஏற்றதைச் செய்வோம்

காலன் வந்தால் விடவே மாட்டான்
கெளரவம் காசைப் பார்க்கவும் மாட்டான்
முடிவு என்பது நிச்சயம் என்பதை
மனதில் வைத்தால் குடும்பம் சிறக்கும் 

No comments: